ஜுலை காற்றில் - விமர்சனம்
17 Mar 2019
2019ல் காதல் எப்படி இருக்கிறது என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.சி. சுந்தரம். அனைத்துக் காதல்களும் இப்படித்தான் இருக்கிறதா அல்லது அவர் பார்த்த காதல் இப்படி இருக்கிறதா என்பதுதான் தெரியவில்லை.
படத்தின் தலைப்பிலேயே ‘டேக்லைன்’ ஆக, ‘லவ்...பிரேக் அப்..’ என போட்டு படத்தின் கதை அல்லது படம் என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறார்.
இந்தக் கால இளைஞர்களிடம் காதலும், பிரிவும் சர்வ சாதாரணமாக இருக்கிறது என்கிறார். பெரும்பாலான காதல்கள் ‘ஈகோ’வால்தான் பிரிகிறது என்பதையும் சொல்கிறார் இயக்குனர். காதலுக்கு சரி, ஆனால், கல்யாணம் ஆன பிறகு அப்படி மோதல் வந்தால் என்ன ஆவது என்ற கேள்வி நம்முள் எழுகிறது.
குடும்பத்திற்கு ஒரே மகனான அனந்த்நாக் அவர் விருப்பப்படியே வாழ்பவர். நண்பனின் திருமணத்தில் அஞ்சு குரியன் அவருக்குப் பழக்கமாகிறார். அந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறுகிறது. இருவருமே திருமண நிச்சயம் வரை செல்கிறார்கள். ஆனால், திருமணம் நிச்சயமான பின்தான் அஞ்சு குரியன் மீது தனக்கு ஆத்மார்த்தமான காதல் இல்லை என அனந்த்நாக் உணர்கிறார். அதனால், திருமணம் வேண்டாம் எனப் பிரிகிறார்.
அடுத்து சம்யுக்தா மேனனைச் சந்தித்து பழக ஆரம்பிக்கிறார். அதுவும் தீவிர காதலாக மாறுகிறது. சம்யுக்தா போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவர். தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழ்பவர். அவரை அனந்த்நாக்கின் காதல் கட்டுப்படுத்த ஆரம்பிக்க, அது சரிப்பட்டு வராது என அனந்த்நாக்கிடம் சொல்லிவிட்டுப் பிரிகிறார். இரண்டு காதல் பிரிவுக்குப் பிறகும் அடுத்து வேறு ஒரு பெண்ணுடன் பழக நினைக்கிறார் அனந்த்நாக். அவருக்கு ஏதாவது ஒரு காதல் செட் ஆனதா, கல்யாணத்தில் முடிந்ததா என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும், அவர்களின் காதலையும் அத்தியாயம் அத்தியாம் ஆக பிரித்துக் காட்டுகிறார் இயக்குனர். முதலில் அனந்த்நாக், பின்னர் அஞ்சு குரியன், அப்புறம் சம்யுக்தா மேனன். இந்த யுத்தி சிறப்பாக இருந்தாலும், அதை இன்னும் ரசனையாகச் சொல்லியிருக்கலாம்.
அனந்த்நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன் மூவருமே அவரவர் கதாபாத்திரங்களை சரியாக உள் வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனந்த்நாக் குழப்பாவாதி, அஞ்சு குரியன் அமைதியின் மறு உறுவம், சம்யுக்தா ஆர்பாட்டத்தின் அடையாளம். அவர்கள் மட்டுமல்லாது கோவாவில் சர்பிங் டிரைனராக வரும் பலோமா மொன்னப்பா கூட இயல்பாய் நடித்திருக்கிறார். பலோமாதான் படத்தின் முக்கியமான டிவிஸ்ட் கதாபாத்திரம். சதீஷ் இன்னும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கலாம்.
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமையாக உள்ளன. குறிப்பாக கண்களின் ஓரமாய்...மற்றும் காற்றே காற்றே பாடல்கள் இனிமை. சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு காதல் படத்திற்குரிய அழகை காட்சிகளாய் வடித்திருக்கிறது.
ஒரு சைக்கலாஜிக்கல் காதல் கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர், நீளத்தைக் குறைத்து, விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் இன்னும் சுவாரசியமாக ரசிக்க வைத்திருக்கும்.