அகவன் - விமர்சனம்

16 Mar 2019
ஒவ்வொரு வாரமும் ஐந்து படங்களாவது வெளிவருகின்றன. அதில் ஏதாவது ஒரு வித்தியாசமான கதை வராதா என்று ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில படங்கள் வித்தியாசமான கதைகளுடன் வெளிவரும், ஆனால், ரசிகர்களின் கவனத்தைப் பெறாமலே போய்விடும். இந்தப் படமும் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒரு படமாகத்தான் இருந்தது. படத்தைப் பார்த்ததும் அட பரவாயில்லையே என சொல்ல வைக்கிறது. அகவன் என்ற தலைப்பிலேயே ஒரு தமிழ்ப் பாசம் இருக்கிறது. திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் எல்லா வேலைகளையும் பார்ப்பவராக இருக்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார். அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல் காக்கிறார். ஒரு நாள் இரவில் அப்படி வந்து போனவர்களில் ஒருவர் யார் என்று கண்டுபிடிக்கிறார்.  அவர்தான் படத்தின் நாயகி, கோவிலில் பூ விற்கும் சிராஸ்ரீ. அவரைச் சந்தித்து கேட்டபின்தான் பல உண்மைகள் கிஷோருக்குத் தெரிய வருகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை. ஒரு முழு படமும் ஒரு கோயிலைச் சுற்றியே சமீபத்தில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். இயக்குனர் ஏழுமலை ஒரு பரபரப்பான கிரைம் திரில்லரைக் கொடுத்திருக்கிறார். கோயில், ராஜராஜ சோழன் வரலாறு, புதையல், அதை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் என கதைக்களம் புதிதாக அமைந்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தின் நாயகன் கிஷோர் ரவிச்சந்திரனுக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை. அனைத்துக் காட்சிகளிலும் ஒரே மாதிரியாகத்தான் முகத்தை வைத்துள்ளார். ஆனால், கூடவே இருக்கும் தம்பி ராமையா வழக்கம் போல ‘சவுண்ட்’ விட்டு அதை சமாளித்துவிடுகிறார். படத்தில் அக்கா சிராஸ்ரீ, தங்கை நித்யா ஸ்ரீ இருவரும் அவர்கள் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையாவை வம்புக்கிழுக்கும் அந்த பூக்கடை பாட்டி கூட இயல்பாக நடித்திருக்கிறார். இரண்டு மூன்று வில்லன்கள் படத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஆர்என்ஆர் மனோகர் மட்டும்தான் தெரிந்த முகம். படத்தில் பல இரவுக் காட்சிகள், அனைத்தும் கோயிலைச் சுற்றிய பகுதிகளில்தான் நடக்கிறது. ஒளிப்பதிவாளர் பாபு பழனியப்பன் இரவு நேரங்களில், பின்னணியில் கோயில் கோபுரங்களுக்கு தனி லைட்டிங் அமைத்து படத்தின் மேக்கிங்கை கொஞ்சம் அழகு கூட்டியிருக்கிறார். படத்தின் நீளம்தான் ஒரு குறை. இடைவேளைக்குப் பிறகு அடுத்தடுத்து திருப்பங்கள் வருவதால் எதைத் தொடர்வது என்று குழப்பம் வந்துவிடுகிறது. இருப்பினும் தியேட்டரில் போய் படத்தைப் பார்க்கலாம், நிச்சயம் அகவன் ஏமாற்ற மாட்டான்.

Share via: