கிரிஷ்ணம் - விமர்சனம்
16 Mar 2019
மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படம் கிரிஷ்ணம்.
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அக்ஷய் கிருஷ்ணன் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்த சம்பவத்தை ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
சாய்குமார், சாந்திகிருஷ்ணாவின் மகன் அக்ஷய் கிருஷ்ணா. கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர். அவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா உல்லாஸுக்கும் காதல். கல்லூரி விழா ஒன்றில் அக்ஷய் நடனமாடும் போது மயங்கி விழுகிறார். அவரை மருத்துவப் பரிசோதனை செய்ததில் 10 லட்சத்தில் ஒருவருக்கு ஒருவரும் ஒரு வித்தியாசமான நோய் வந்துள்ளது. அதைச் சரி செய்வது மிகவும் கஷ்டம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நாயகனாக அக்ஷய் கிருஷ்ணன், நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ், இருவருக்குமே நடிப்பு ரொம்ப தூரம் போலிருக்கிறது. ஒரு காட்சியில் கூட எக்ஸ்பிரஷன் வரவில்லை. ஐஸ்வர்யா பார்க்க அழகாக இருக்கிறார். கொஞ்சம் நடிக்கக் கற்றுக் கொண்டால் அவருக்கு நல்லது.
அனுபவ நடிகர்களான சாய்குமார், சாந்தி கிருஷ்ணா இருவர் மட்டும்தான் படத்தைக் காப்பாற்றுகிறார்கள்.
குருவாயூரப்பன் மகிமை என்ன என்பதைச் சொல்வதற்காக படத்தின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணன் அப்பாவே படத்தைச் சொந்தமாகத் தயாரித்திருக்கிறார்.
கல்லூரி காட்சிகளையாவது கொஞ்சம் கலகலப்பாக எடுத்திருந்தால் மலையாள டப்பிங் படம் என்பதையும் மீறி கொஞ்சம் ரசித்திருக்கலாம்.
கிளைமாக்சில் மட்டும் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லி நெகிழ வைத்திருக்கிறார்கள்.