தடம் - விமர்சனம்
03 Mar 2019
ஒரு திரைப்படத்தில் கதை மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதாது, கதாபாத்திரங்களும் வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தை வித்தியாசமான படம் என்று முழுமையாகச் சொல்ல முடியும்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படம்.
ஒரு அருண் விஜய், சிவில் இஞ்சினியர். மற்றொரு அருண் விஜய் திருடன். ஒரு நள்ளிரவில் ஒரு பணக்கார இளைஞன் கொல்லப்பட, யாரோ ஒருவர் எடுத்த செல்பியில் அந்த வீட்டு பால்கனியில் இருக்கும் அருண் விஜய்யின் புகைப்படம் சிக்குகிறது. இஞ்சினியர் அருண் விஜய் யாரென்று இன்ஸ்பெக்டருக்குத் தெரியும் என்பதால் அவரைக் கைது செய்து லாக்கப்பில் வைக்கிறார். அதே சமயம், திருடன் விஜய்யும் வேறொரு குடிபோதை தகராறில் சிக்கி இஞ்சினியர் அருண் விஜய் சிக்கியிருக்கும் காவல் நிலையத்திற்கே அனுப்பப்படுகிறார். ஒரே தோற்றத்தில் அச்சு அசலாக இருவர் சிக்குவதால் காவல் துறையினருக்கு அந்தக் கொலையை யார் செய்தது என்பதில் விசாரிக்க குழப்பம் வருகிறது. அந்தக் குழப்பம் தீர்ந்ததால், உண்மைக் குற்றவாளியை சரியாகக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘குற்றம் 23’ படம் தந்த பெரிய வெற்றியால் மீண்டும் ஒரு க்ரைம் திரில்லர் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், இந்தப் படத்தில் அவர்தான் குற்றவாளி. ‘ஐடன்டிக்கல் டிவின்ஸ்’ ஆக அண்ணன் தம்பியாக இரு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களுக்கும் ஆடை, பேச்சு இரண்டுதான் வித்தியாசம். இரண்டு கதாபாத்திரங்களிலும் அருண் விஜய்யின் நடிப்பு அற்புதம் என சொல்ல வைக்கிறது. அதிலும் கிளைமாக்சில் இருவரும் பேசிக் கொள்ளும் அந்தக் காட்சி சிம்ப்ளி சூப்பர்ப்.
படத்தின் நாயகி என்று கொலைக் குற்றத்தை விசாரிக்கும் சப் இன்ஸ்பெக்டர் வித்யா பிரதீப்பைத்தான் சொல்ல வேண்டும். இதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவருக்குக் கிடைக்காத முக்கியத்துவம் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அருண் விஜய்யின் காதலிகளாக தன்யா ஹோப், ஸ்மிரிதி. இருவரும் சில காட்சிகளில் வந்து காதலித்து விட்டுப் போகிறார்கள்.
யோகி பாபு, திருடன் அருண் விஜய்யின் நண்பனாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் இவரை இன்னும் கூடுதலாக நகைச்சுவை செய்ய வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்ஸ்பெக்டர் ஆக பெப்சி விஜயன். அருண் விஜய்யின் மீதுள்ள முன்விரோதத்தை வில்லத்தனமாகக் காட்டியிருக்கிறார்.
இடைவேளைக்குப் பின் படம் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. கிளைமாக்சுக்கு முன்பாக கதையில் வரும் திருப்பம் புத்திசாலித்தனமாக திரைக்கதை.
அறிமுக இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையமைப்பில் பின்னணி இசை பரபரக்க வைக்கிறது. முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார். ‘இணையே...பாடலில் சித்ஸ்ரீராம், பம்லதா குரல் இழுக்கிறது.
கோபிநாத் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம். த்ரில்லர் படத்திற்கான லைட்டிங், காமிரா ஆங்கிள் என விஷுவலாகவும் படத்தில் மிரட்டியிருக்கிறார். குழப்பமில்லாத படத் தொகுப்பைத் தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.
பிளாஷ்பேக்கில் அருண் விஜய்யின் பெற்றோர்களுக்கு இடையிலான சண்டை, பிரிவு, அம்மா சோனியா அகர்வாலின் சீட்டாட்டம் ஆகியவை கொஞ்சம் யதார்த்த மீறலாக அமைந்து நமக்கு ஒரு நெகிழ்ச்சியான உணர்வைத் தர மறுக்கிறது. அதை இன்னும் யதார்த்தமான காட்சிகளுடன் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இவை மட்டும்தான் படத்தில் குறையாகத் தெரிகிறது.
தடம் - வெற்றிப் பாதை...