தாதா 87 - விமர்சனம்
03 Mar 2019
தமிழ் சினிமாவில் இதுவரை வடிவமைக்கப்படாத இரண்டு கதாபாத்திரங்களுடன் வந்திருக்கும் படம் என்று மட்டும் இந்தப் படத்தை அதிகமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்த வித்தியாசத்தை படத்தின் திரைக்கதையிலும் கூடுதலாகச் சேர்த்திருந்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படமாக தடம் பதித்திருக்கும். அதைச் செய்யத் தவறிவிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.
இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்பது, படத்தின் டைட்டில் கதாபாத்திரம் தாதா சத்யா. 87 வயதான ஒரு கதாபாத்திரம் டைட்டில் கதாபாத்திரமாக இந்திய சினிமாவில் இடம் பெறுவது இதுவே முதல் முறை. இரண்டாவது படத்தின் கதாநாயகி கதாபாத்திரம் ஒரு திருநங்கை. அதில் ஒரு பெண்ணே திருநங்கையாக நடித்திருப்பது அடுத்த வித்தியாசம்.
87 வயதான தாதா சாருஹாசன், அவருடைய ஏரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். அவருக்குப் பயந்து நடுங்காதவர்கள அந்த ஏரியாவிலேயே கிடையாது. அந்த ஏரியாவைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் பாண்டி, அந்த ஏரியாவிற்கு பல வருடங்கள் கழித்து குடி வரும் ஸ்ரீபல்லவி மீது காதல் கொள்கிறார். தன் மகள் ஸ்ரீபல்லவியை ஆனந்த் பாண்டி காதலிப்பது பிடிக்காத அப்பா ஜனகராஜ், ஆனந்த் பாண்டியைப் பற்றி தாதா சாருஹாசனிடம் சொல்கிறார். அவரும் ஆனந்த் பாண்டியை அழைத்து கொலை மிரட்டல் விடுத்து மிரட்டுகிறார். இருந்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீபல்லவிக்கு, ஆனந்த் பாண்டி மீது காதல் வந்து அவரிடம் தன் காதலைச் சொல்கிறார். கூடவே, தான் ஒரு திருநங்கை என்பதையும் தெரிவிக்கிறார். இதனால், அதிர்ச்சியடைகிறார் ஆனந்த் பாண்டி. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படத்திற்கு தாதா 87 என பெயர் வைத்துவிட்டு, எல்லா விளம்பரங்களிலும் சாருஹாசனைக் காட்டிவிட்டு, படத்தில் அவருக்கு முக்கியத்துவம் தராமல், ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி காதலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். காதல் படம் என்றால் அதற்கேற்றபடி தலைப்பு வைத்து, விளம்பரம் செய்திருக்கலாமே. அதைப் பார்த்து தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு வேறு விதமான அனுபவம்தான் கிடைக்கும்.
புதுமுகங்கள் ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். ஆனந்த் பாண்டிதான் அடிக்கடி ‘சவுண்ட்’ விடுகிறார். ஸ்ரீபல்லவியின் கதாபாத்திரம் எதிர்பாராத திருப்புமுனையாக திருநங்கை என தெரிய வரும் போது அதிர்ச்சி ஆனந்துக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.
சாருஹாசன் சில காட்சிகளில்தான் வருகிறார். அவருடைய முறைப்பே விறைப்பாக இருந்து பயமுறுத்துகிறது. கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா, சில காட்சிகளில் வந்து மலையாளம் பேசிவிட்டுச் செல்கிறார். ஜனகராஜ் உடலில் தளர்வு இருந்தாலும், குரலில் அதே ஏற்ற இறக்கம்.
எம்எல்ஏ மனோஜ்குமார், ஏரியா முன்னாள், இந்நாள் கவுன்சிலர்கள் பாலாசிங், மணிமாறன் ஆகியோருடன் இடம் பெறும் அரசியல் காட்சிகள் படத்திற்கு எந்த விதத்திலும் விறுவிறுப்பு சேர்க்கவில்லை. இயக்குனர் விஜய்ஸ்ரீ சப்இன்ஸ்பெடக்டராக நடித்திருக்கிறார்.
பாடல்கள் அடிக்கடி வருவது போன்று இருக்கிறது. லியாண்டர் லீ மார்ட்டி, அல் ருபான், தீபக் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்கள்.
வடசென்னை கதைக்களம், அதற்கான பின்னணி, ஒளிப்பதிவு யதார்த்தமாய் அமைந்துள்ளது.
தாதா 87 - ரவுடியிசம் குறைவு, காதலிசம் அதிகம்...