தங்கலான் - விமர்சனம்
16 Aug 2024
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்து வெளியாகும் நாள் வரைக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு படம். ரஞ்சித், விக்ரம் முதல் முறை கூட்டணி, மாறுபட்ட தோற்றத்தில் விக்ரம் என ரசிகர்கள் நிறையவே எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப விக்ரமிற்கு மற்றுமொரு தேசிய விருதை வாங்கித் தரும் அளவிற்கான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் ரஞ்சித்.
கர்நாடக மாநிலத்தில் இருந்த தங்கச் சுரங்கங்களில் ஒன்று கோலார் தங்க வயல். ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘கேஜிஎப்’. அந்த தங்கச் சுரத்தின் ஆரம்ப காலம், அதன் வளர்ச்சி என தமிழர்களின் உழைப்பு பெரும் பங்காற்றியது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் பலரும் அவர்களது உழைப்பையும், உயிரையும் கொடுத்து வேலை பார்த்தனர். அந்த வரலாற்றை கொஞ்சம் புனைவு கலந்து கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.
1850ல் வட ஆற்காடு மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் மிராசுதாரிடம் பண்ணை அடிமையாக பல ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தனர். ஆனால், தங்கலான் மட்டும் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அவரது நிலத்தை குறுக்கு வழியில் பெற்று அவரது குடும்பத்தினர் சிலரையும் பண்ணை அடிமையாக சேர்க்க வைத்தார் மிராசுதாரர். அந்த சமயத்தில் கர்நாடக எல்லைப் பகுதியில் தங்கம் இருப்பதை அறிந்த ஆங்கிலேயே அதிகாரி டேனியல் கால்டகிரோன், வேப்பூர் வந்து பேசி விக்ரம் உள்ளிட்ட சிலரை அழைத்துச் செல்கிறார். தங்கத்தைத் தேடும் பணிக்காக கூலியும் கொடுக்கப்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் மீண்டும் ஊருக்கு வந்து மக்களை கூலிப் பணம், நிலத்தை மீட்பது, அடிமையாக இல்லாமல் இருக்கலாம் எனச் சொல்லி பலரை அழைத்துச் செல்கிறார் விக்ரம். அவர் திரும்பிப் போவதற்குள் தங்கம் தோண்டும் இடத்தில் கட்டுப்பாடுகள் மாறியிருக்கிறது. ஆங்கிலேயே அதிகாரி தன்னை நண்பனாக நடத்துவார் என எதிர்பார்த்த விக்ரமிற்கு அதிர்ச்சி. அனைவரும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இதனிடையே, தங்கத்தை காக்கும் சூனியக்காரி மாளவிகா மோகனன் கூட்டம் மூலம் பல அதிர்ச்சியான சம்பவங்களும் நடக்கிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெறுபவர் விக்ரம். ‘சேது, பிதாமகன், அந்நியன், ஐ’ என அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய பல படங்கள் உண்டு. ஆனால், அந்தப் படங்களை விடவும் இந்தப் படத்தில் ‘தங்கலான்’ கதாபாத்திரமும் அதற்காக விக்ரம் தன்னை மாற்றிக் கொண்டதும் இன்னும் பல வருடங்களுக்கு ரசிகர்களையும், விமர்சகர்களையும் பேச வைக்கும். வேறு எந்த ஒரு நடிகருமே இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்கத் தயங்குவார்கள். தனது ஐந்து குழந்தைகள் மீதான பாசம், மனைவி பார்வதி மீது இன்னமும் இருக்கும் காதல், தனது சக மக்களுக்காகப் பேசும் குணம், எது வந்தாலும் எதிர்க்கும் வீரம், எந்தத் தடையையும் தகர்க்கும் தைரியம் என காட்சிக்குக் காட்சி அவரது நடிப்பைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.
தங்கலான் மனைவி கங்கம்மா ஆக பார்வதி திருவோத்து. ஒரு குழந்தைக்குக் கூட அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோம் எனச் சொல்லும் நடிகையருக்கு மத்தியில் ஐந்து குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சம்மதித்து, கங்கம்மா கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். நமது மண்ணின் கதாபாத்திரங்களைப் பற்றி மலையாள நடிகைகள் அவ்வளவு ஈடுபாட்டுடன் நடிப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. முன்னர் ‘அசுரன்’ படத்தில் மஞ்சு வாரியர், இப்போது இந்தப் படத்தில் பார்வதி.
சூனியக்காரி ஆரத்தி ஆக மாளவிகா மோகனன். அவர் சும்மா வந்து நின்றாவே அவ்வளவு பயமுறுத்துகிறார். இன்னும் கூட இவருக்குக் காட்சிகள் வைத்திருக்கக் கூடாதா என்று கேட்க வைக்கிறார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்தாலும் பெருமாளை வழிபடும் தீவிர பக்தராக பசுபதி. உடலில் நாமம், பேச்சில் எப்போதும் பெருமாள் என மத அரசியல் பேச வைக்கிறது அவரது கதாபாத்திரம். ஆங்கிலேயே அதிகாரி கிளமெண்ட் ஆக டேனியல் கால்டகிரோன். ஆரம்பத்தில் வேலை ஆக வேண்டும் என்பதற்காக அவ்வளவு பாசமாகப் பேசுகிறார். பின்னர் அவரது சுயரூபமான அதிகாரத் திமிரை வெளிப்படுத்துகிறார். ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி கரன் ஜோடியின் கணவன் மனைவி பாசமும், அவர்களது முடிவும் குறிப்பிட வேண்டியவை.
ஜிவி பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும், பாடல்களும் சமீப காலங்களில் வந்த படங்களுடன் ஒப்பிடும் போது இந்தப் படத்தில் ஒரு படி அல்ல பல படிகள் மேலே உள்ளது. இந்தப் படம் தனக்கு சவாலான ஒரு படம் என்பதை உணர்ந்து இயக்குனரின் எதிர்பார்ப்புக்கும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்றபடி தனது திறமையை அட்டகாசமாய் வெளிப்படுத்தி உள்ளார். ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், மேக்கப் இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் என படத்திற்காக உழைத்த ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கு போட்டி போட்டுள்ளனர்.
உருவாக்கமாக படம் எங்கேயோ இருந்தாலும் மையக் கதையை விட்டு விலகிய சில பிளாஷ் பேக் காட்சிகள் ‘பேன்டஸி‘ ஆக அமைக்கப்பட்டது படத்தின் ஜீவனைக் குறைத்துவிடுகிறது. தங்கச் சுரங்கத்திற்கான உழைப்பு, அதன் பின்னால் உள்ள பெரும் வலி ஆகியவை அந்த பேன்டஸி காட்சிகளால் ஏற்படுத்தும் தாக்கத்தை பின்னடையச் செய்கிறது.
இருந்தாலும் தமிழ் சினிமாவின் கடந்த பல வருடங்களில் கடும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு படம் என ‘தங்கலான்’ பேசப்படும்.
Tags: thangalaan, pa ranjith, gv prakashkumar, vikram, parvathy thirivothu, malavika mohanan