வேதா - விமர்சனம்
16 Aug 2024
நிகில் அத்வானி இயக்கத்தில், ஜான் ஆபிரகாம், ஷர்வாரி, அபிஷேக் பானர்ஜி மற்றும் பலர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் வந்த பிறகு சாதிய ஒடுக்குமுறை பற்றிய படம் குறிப்பிடத்தக்க அளவில் வெளிவருகின்றன. ஹிந்தியிலும் அப்படியான படங்கள் சமீப காலங்களில் வருவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. தமிழ்ப் படங்களின் தாக்கத்தால்தான் அப்படியான படங்களை ஹிந்தியிலும் எடுக்க முன் வருகிறார்கள் என தாராளமாகச் சொல்லலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் என்ற ஊரில் படத்தின் கதை நடக்கிறது. அந்த ஊர் உட்பட சுற்றியுள்ள 150 ஊர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் மேல் சாதியைச் சேர்ந்த ஊர் தலைவர் அபிஷேக் பானர்ஜி. அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேல் சாதியினரில் அடக்குமுறை, அதிகாரித்தால் கட்டுப்பட்ட ஒன்று. அப்படி ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஷர்வாரி கல்லூரியில் படிப்பவர். அவருக்கு பாக்சிங் வீராங்கனையாக வேண்டும் என்பது லட்சியம். ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஜான் ஆபிரகாம், அந்தக் கல்லூரியில் உதவி பாக்சிங் கோச் ஆக வேலைக்குச் சேர்கிறார். ஷர்வாரிபாக்சிங் கற்றுக் கொள்ளக் கூடாது என அபிஷேக் தம்பி நினைக்கிறார். அதை மீறி ஷவாரிக்கு பாக்சிங் கற்றுத் தருகிறார் ஜான் ஆபிரகாம். இதனிடையே, ஷர்வாரியின் அண்ணன் மேல் சாதி பெண்ணை காதலிப்பது தெரிந்ததும் ஊர் தலைவர் அபிஷேக் அவர்களையும், ஷர்வாரியின் அக்காவையும் கொன்று விடுகிறார்கள். ஷர்வாரியைக் காப்பாற்ற அவரை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார் ஜான் ஆபிரகாம். அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் பல சாதிய அடக்குமுறை,. அதிகாரக் காட்சிகளைப் பார்க்கம் போது வட மாநிலங்களில் இன்னும் இப்படி இருக்கிறதா என அதிர்ச்சியடைய வைக்கிறது. கல்லூரியில் குடிக்கும் நீருக்கு தனி குழாய், தவறு செய்தால் தலை மீது செருப்பை வைத்துக் கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பது, எதையும் வெளிப்படையாகப் பேசக் கூட சுதந்திரம் இல்லாதது, கீழ் சாதிப் பெண்களை மேல் சாதியினர் உடல் ரீதியாக பலவந்தப்பப்படுத்துவது என பல அதிர்ச்சிகரமான காட்சிகள் படத்தில் உள்ளன.
முரட்டு மனிதராக ஜான் ஆபிரகாம். அவரது மனைவியைக் கொன்ற தீவிரவாதியை அவரது இருப்பிடத்திற்கே சென்று கொலை செய்யும் துணிச்சல் கொண்டவர். மேலதிகாரியின் உத்தரவுக்குப் பணியாததால் அவரை ராணுவத்திலிருந்து பணி நீக்கம் செய்கிறார்கள். பின்னர் பார்மர் ஊருக்கு வந்து கல்லூரியில் பாக்சிங் கோச் ஆக வேலை செய்கிறார். அங்கு நடக்கும் சாதிய அடக்கு முறையை எதிர்க்கிறார். திறமைசாலியான ஷவாரிக்கு உதவி நினைத்து அவரும் சிக்கலுக்கு ஆளாகிறார். இடைவேளைக்குப் பின் ஜான் ஆபிரகாமின் ஆக்ஷனில் மட்டுமே படம் நகர்கிறது.
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணாக ஷர்வாரி. பாக்சிங் வீராங்கனை ஆக வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர். அவரது கனவை மேல்சாதியினர் நிறைவேற்ற விடாமல் தடுப்பதை நினைத்து கலங்குகிறார். உதவி செய்ய வரும் ஜான் ஆபிரகாமல் பாக்சிங் கற்றுக் கொள்கிறார். குடும்பத்தினர் மீது அதிக பாசம் வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அண்ணன் காதல் பற்றி மேல் சாதியினருக்குத் தெரிய அதன் பின் நடக்கும் அடக்குமுறைகளால் பரிதவிக்கிறார். ஒவ்வொரு காட்சியிலுமே ஷர்வாரியின் நடிப்பு கதாபாத்திரத்திற்கேற்றபடி அழுத்தமாய் அமைந்துள்ளது.
ஊர் தலைவராக நடிக்கும் அபிஷேக் பானர்ஜி பார்ப்பதற்கு சாதாரணமாய் இருக்கிறார், ஆனால், வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். மற்ற கதாபாத்திரங்களில் ஷவாரியின் அப்பாவாய் நடித்திருப்பவர், அபிஷேக்கின் தம்பியாக நடித்திருப்பவர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். ‘கில்லி’ பட விஜய்யின் அப்பா ஆசிஷ் வித்யார்த்தி அபிஷேக் பானர்ஜியின் அப்பாவாக சாதி வெறி பிடித்தவராக நடித்திருக்கிறார்.
பார்மர் ஊரின் கதைக்களத்தை மற்ற மாநில ரசிகர்ளும் புரிந்து கொள்ளும் விதத்தில் அந்த ஊரின் மொத்த எல்லையையும் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மலாய் பிரகாஷ். அமால் மாலிக், மனன் பரத்4ஜ், யுவராகவ் - அர்ஜுன் ஆகியோரது இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இடைவேளை வரை யதார்த்தமான, நம்பகத் தன்மையுடனான படமாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின் அப்படியே சினிமாத்தனமாக மட்டுமே படம் நகர்கிறது. அதிலும் கிளைமாக்சில் நீதிமன்றத்திலேயே நடக்கும் துப்பாக்கி சூடு நடக்கும் சண்டைக் காட்சிகள் தெலுங்குப் படக் காட்சிகளை விடவும் சினிமாத்தனமாய் அமைந்துள்ளன.
Tags: vedaa, john abraham, sharvari