ரகு தாத்தா - விமர்சனம்
16 Aug 2024
சுமன் குமார் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
டிரைலரில் ஹிந்தித் திணிப்பு பற்றி மட்டுமே இருந்ததால் அது சம்பந்தமான மொழிப் போராட்டம் ஆக படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதோடு வேறு சில விஷயங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர். ஆணாதிக்கம், பெண்ணுரிமை என கிலந்ததால் படத்தின் மையக் கரு எது என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைப்பதில் தடுமாறி இருக்கிறார்கள்.
1960களில் நடக்கும் கதை. வள்ளுவன் பேட்டை என்ற கிராமத்தில் வங்கியில் வேலை பார்ப்பவர் கீர்த்தி சுரேஷ். திருமண வயதில் உள்ளவர் என்பதால் பெற்றோர் திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கு முதலில் மறுக்கும் கீர்த்தி, தாத்தா எம்எஸ் பாஸ்கரின் உடல்நிலையைக் கருதி சம்மதிக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த ரவீந்திர விஜய் கீர்த்தியுடன் பழகி வருகிறார். அவர் நல்லவர் என நினைத்து அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் கீர்த்தி. திருமண நிச்சயம் செய்த பிறகுதான் ரவீந்திர விஜய், ஆணாதிக்க குணம் கொண்ட ஒருவர் என்பது தெரிய வருகிறது. பெண்கள் அவர்களுக்கு உரிய உரிமையுடன் வாழ வேண்டும் என நினைக்கும் கீர்த்தி அத்திருமணத்தை நிறுத்த நினைக்கிறார். அதற்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவரது திருமணம் நின்றதா, நடந்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தெலுங்கிலிருந்து தமிழில் வந்த நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான ‘நடிகையர் திலகம்’ படத்தில் அந்தக் கால கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது வென்றவர் கீர்த்தி. அதனால், இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள கயல்விழி கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்க முடிந்துள்ளது. சில காட்சிகளில் அவருடைய பெண்ணுரிமை பேசும் குணம் அவரது வசன உச்சரிப்பால் அழுத்தமாகவே வெளிப்படுகிறது.
கீர்த்திக்கு ஜோடியாக ரவீந்திர விஜய் நடித்திருக்கிறார். பொருத்தமில்லாத ஜோடியாகவே தெரிகிறார். சில காட்சிகளில் கீர்த்திக்கு அங்கிள் போலவும் இருக்கிறார். தாத்தா கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் வழக்கம் போல நிறைவான நடிப்பு. கீர்த்தியுடன் வங்கியில் வேலை பார்க்கம் தேவதர்ஷினி நகைச்சுவையில் ஏதோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே.
கீர்த்தியின் பெற்றோர் கதாபாத்திரங்கள், வங்கி மேனேஜர் கதாபாத்திரம், ஹிந்தி சபா நடத்துபவர் கதாபாத்திரம் என சில கதாபாத்திரங்கள் நாடகத்தனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஷான் ரோல்டன் பின்னணி இசையில் ஓரிரு பாடல்களாவது மனதில் நின்றிருக்கலாம். பின்னணி இசையையும் நாடகத்திற்கான பின்னணி இசை போலவே அமைத்திருக்கிறார். யாமினி யக்னமூர்த்தியின் ஒளிப்பதிவு தெளிவாக அமைந்துள்ளது.
காதல் கதையா, ஹிந்தி எதிர்ப்பு கதையா, ஆணாதிக்க கதையா, பெண்ணுரிமை கதையா என கேள்வி எழுகிறது. ஏதோ ஒன்றை மட்டும் அழுத்தமாக வைத்து மற்றதை சுவாரசியத்துடன் சேர்த்திருக்கலாம். எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும் என நினைத்து ஒன்றையும் ரசிக்கவிடாமல் செய்துவிட்டார்கள்.
படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை எந்த இடத்திலும் நம்மை ஈர்க்காத காட்சிகள், கிளைமாக்சில் மட்டும் கொஞ்சமாக ஈர்க்கின்றன. ஹிந்தி வேண்டாமென்று சொல்லவில்லை ஹிந்தித் திணிப்பு தான் வேண்டாமென்கிறோம் என்று தமிழ்நாட்டின் குரலை ஒலித்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
Tags: raghu thatha, keerthy suresh