டிமான்ட்டி காலனி 2 - விமர்சனம்

16 Aug 2024

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

2015ல் வெளிவந்த ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் தொடர்ச்சியாக இது இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தின் கதையைத் தொடர்கிறார்கள். ஆனால், முதல் பாகத்தில் இருந்த பரபரப்பு, விறுவிறுப்பு இதில் காணப்படாதது ஆச்சரியமளிக்கிறது.

பிரியா பவானி சங்கரின் காதல் கணவர், அவரது நண்பர்கள் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இறந்த தனது கணவரின் ஆவியுடன் பேச ஆசைப்படுகிறார் பிரியா. சீன சாமியார் மூலம் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். அப்போது அவரது கணவரது ஆவி பேசாமல் வேறு ஒரு ஆவி வந்து பேசுகிறது. அதில் முதல் பாகத்தின் கடைசியில் உயிருக்குப் போராடிய அருள்நிதியும், அவருடன் இரட்டைப் பிறவியாகப் பிறந்த மற்றொரு அருள்நிதி பற்றியும் தெரிய வருகிறது. உயிருக்குப் போராடும் அருள்நிதி இறந்தால்தான் அப்பாவின் சொத்து தனக்கு அதிகமாக வரும் என நினைக்கிறார் உயிரோடு இருக்கும் அருள்நிதி. தம்பி இறந்தால் அண்ணனும் இறப்பார் என்ற உண்மையைச் சொல்கிறார் பிரியா. அதன்பின் தம்பி உயிரைக் காப்பாற்ற இருவரும் போராடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கொஞ்சம் எதிர்மறையான கதாபாத்திரத்தில் இன்னொரு அருள்நிதி இந்த இரண்டாம் பாகத்தில் வருகிறார். அதன்பின் தம்பியின் உண்மை நிலை அறிந்து, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் பிரியாவுடன் சேர்ந்து தம்பியின் உயிரை பறிக்கத் துடிக்கும் தீய சக்திகளை எதிர்த்துப் போராடுகிறார். முதல் பாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீய சக்திகளிடம் மாட்டியதாக திரைக்கதை நகரும்.

இந்த இரண்டாம் பாகத்தில் பிரியாவுக்குச் சொந்தமான சீன ரெஸ்ட்டாரன்ட்டில் அவரும், அருள்நிதியும் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவு சீன புத்தத் துறவி தலைமையில் சிலர் இறங்குகிறார்கள் என படத்தில் சீன வாடை அதிகம் அடிக்கிறது.

பிரியா பவானிக்கு அருள்நிதிக்கு சமமான ஒரு கதாபாத்திரம். அவரது கதாபாத்திரத்தை எமோஷனலான ஒரு கதாபாத்திரமாக உருவாக்கியதால் அவர் மீது அனுதாபம் வருகிறது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பிரியாவின் மாமனாராக அருண் பாண்டியன், அருள்நிதியின் சித்தப்பாவாக முத்துக்குமார் நடித்திருக்கிறார்கள். சீன புத்த துறவியாக நடித்திருப்பவரும் தமிழ் பேசுகிறார் எனக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

முதல் பாகத்தில் விஎப்எக்ஸ் என தொழில்நுட்பத்தை நம்பாமல் காட்சிகளாலேயே மிரட்டி இருந்தார் இயக்குனர். இரண்டாம் பாகத்தில் முழுவதுமாக விஎப்எக்ஸ் பக்கம் போய்விட்டார். ஆரம்பம் முதலே கிளைக் கதைகள் நிறைய நகர்வது தொய்வைத் தருகிறது. இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதை எங்கெங்கே போய் வருகிறது. எந்தவிதமான பயமும் ஏற்படாமல் ஏதோ ஒரு பேய்ப் படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு மட்டுமே ஏற்படுகிறது.

முதல் பாகத்திற்கு யோசித்ததில் கூடுதலாக யோசித்தால் மட்டுமே இரண்டாம் பாகமும் வரவேற்பைப் பெறும் என இரண்டாம் பாகப் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் மெனக்கெட வேண்டும்.

Tags: demonte colony 2, arulnithi, priya bhavani shankar, ajay gnanamuthu, sam cs

Share via: