வாழை - விமர்சனம்

17 Aug 2024

மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பொன்வேல், ராகுல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இயக்குனர் மாரி செல்வராஜ் அவருடைய சிறு வயது வாழ்க்கையில் நடந்த ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் படம்.

திருநெல்வேலி மாவட்டம், புலியங்குளம் கிராமத்தில் 1999ம் ஆண்டு நடக்கும் கதை. அந்த கிராமத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சிவனணைஞ்சான் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன். வகுப்பில் நன்றாகப் படிப்பவன். அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத்தனங்களுடன் இருக்கிறான். ஆனால், குடும்ப கஷ்டத்திற்காக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வாழைத் தோப்பிலிருந்து வாழைத்தார்களை சுமக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும் என அம்மா கட்டாயப்படுத்துகிறார். வேறு வழியில்லாமல் அந்த வேலைக்குச் செல்கிறான். அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அதனால், அம்மாவை ஏமாற்றிவிட்டு வேலைக்குச் செல்லாமல், பள்ளிக்குச் செல்கிறான். அன்றைய தினம் அதுவே அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தைத் தருகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு 13 வயது சிறுவனின் ஆசைகள் என்ன, அவன் வாழ்க்கை என்ன என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒரு பக்கம் அவனது ஆசையும், பாசங்களும் கடந்து போக, மற்றொரு பக்கம் அவனது கஷ்டங்களும், சோகமும் கடந்து போக, இரண்டடையும் மாறி மாறி சொன்ன இயக்குனர் கடைசியில் நமக்குள் ஒரு சோகத்தை உருவாக்கி, படம் முடிந்த பின்னும் எழுந்து போக முடியாமல் அப்படியே உட்கார வைத்துவிடுகிறார்.

சிவனணைஞ்சான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்வேல் எந்தக் காட்சியில் நடித்துள்ளார் என கண்டே பிடிக்க முடியாது. படம் முழுவதும் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் ‘பாஆஆஆஆஆஆ’ என காணாமல் போன பசுவை அழைக்கும் அந்தக் குரலே என்னமோ செய்கிறது. அம்மா, வேலைக்குப் போகக் கட்டாயப்படுத்தும் போது முடியவே முடியாது என கோபப்படுகிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தின் கஷ்டத்தையும், அம்மாவின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு போக ஆரம்பிக்கிறார். டீச்சர் நிகிலா விமல் மீதான அந்த இனம் புரியாத பாசம் அவரை நிறையவே மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. அந்த பாசத்திற்கான அர்த்தம் என்ன என்பதை, அம்மா, அக்கா போல என்ற வசனத்தை பின்னால் வைத்து சந்தேகப்படும் பார்வையாளனுக்கும் புரிய வைக்கிறார். இந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை இப்போதே பொன்வேல் என பொறித்துவிடலாம்.

பொன்வேல் நண்பனாக ராகுல். ஒவ்வொருவருக்கும் சிறு வயது முதலே இப்படி ஒரு நெருங்கிய நண்பன் கண்டிப்பாக இருப்பார்கள். இருவருக்குள்ளும் பிடித்த விஷயங்களில் சில மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களுக்குள் அப்படி ஒரு பிரிக்க முடியாத நட்பு இருக்கம். பொன்வேலும், ராகுலும் நமது சிறு வயது நட்பை மீண்டும் கண்முன் கொண்டு வந்துள்ளார்கள்.

டீச்சர் மீது இனம் புரியாத பாசம் கொள்ளாத மாணவர்கள் யாராவது இருக்க முடியுமா ?. நமக்குப் பிடித்த டீச்சர் அடித்தால் கூட அதை ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலை பலருக்கு உண்டு. அப்படி அனைவருக்கும் பிடித்த ஒரு டீச்சராக நடித்திருக்கிறார் நிகிலா விமல்.

பொன்வேல் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, ஏழை அம்மாக்களின் நிலை என்ன என்பதை அழுத்தமாய் உணர்த்துகிறார். திவ்யா துரைசாமி போன்று இன்னமும் பல இளம் பெண்கள் அவர்களது குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வயதுக்கேயுரிய ஈர்ப்பு, காதல் ஆகியவற்றிற்குக் கூட அவர்களால் நேரத்தை செலவழிக்க முடியாத ஒரு நிலை. உழைக்கும் வேலைக்குக் கூலி வேண்டும் என போராடத் துடிக்கும் பயமறிய இளைஞனாக கலையரசன். புரோக்கர் ஆக நடித்துள்ள பத்மன், வியாபாரியாக நடித்துள்ள ஜெ சதீஷ்குமார் ஆகியோர் குறைவான காட்சிகளில் நடித்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அந்த கிளைமாக்ஸ் பாடல் அப்படியே உருக வைத்துவிடுகிறது. படம் முடிந்த பின்பும் சீட்டை விட்டு எழுந்திருக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்த ரசிகர்களைப் பார்ப்பது பல வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது. மற்ற பாடல்களிலும் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். கிராமம், வயல் வெளி, வாழைத் தோப்பு, பள்ளிக் கூடம், ஏரிக்கரை என தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு அந்த கிராமத்தின் அனைத்து பகுதிகளையும் நமக்குள் பதிய வைத்துவிட்டது.

படத்தில் இடம் பெற்றுள்ள பல வசனங்கள் பல கருத்துக்களை உணர்த்துவதாக உள்ளன. ரஜினி, கமல் ரசிகர்கள் இடையிலான சண்டைகளைக் கூட சுவாரசியமாக வசனத்தில் சேர்த்துள்ளார் இயக்குனர்.

கிளைமாக்ஸில் நடக்கும் ஒரு விஷயம் திடீரென நடப்பதால் அதை நமக்குள் உள்வாங்கிக் கொள்ள கொஞ்ச நேரம் பிடிக்கிறது. அந்த சோகத்தை ஏற்றுக் கொள்ள முந்தைய காட்சிகளில் கொஞ்சம் உணர்த்தியிருக்கலாமோ என்றும் கேட்க வைக்கிறது.

Tags: vaazhai, mari selvaraj, santhosh narayanan, nikhila vimal, kalaiyarasan

Share via: