சாலா - விமர்சனம்
24 Aug 2024
மணிப்பால் இயக்கத்தில், தீசன் இசையமைப்பில், தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சார்லஸ் வினோத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
மது விற்பனைக்கும், குடிப்பழக்கத்திற்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ள படம். சமீப காலங்களில் வெளிவந்த படங்களில், இப்படியான சமூக அக்கறையை வெளிப்படுத்திய படம் என எந்தப் படத்தையும் சொல்லமுடியாது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் எத்தனையோ விபத்துக்களை நாம் நாளிதழ்களில் படித்து மட்டுமே கடந்திருப்போம். அது எப்படி இருக்கும் எப்படியான ஒரு அதிர்வை, தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தப் படத்தின் கிளைமாக்சில் வைத்திருக்கிறார்கள். தங்களது அறிமுகப் படத்தையே பெரும் அக்கறையுடன் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர் மணிப்பால், நாயகன் தீரன்.
வட சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள மது பார்களை ஏற்று நடத்துவதில் அருள்தாஸ், சார்லஸ் வினோத் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி. ஒரு காலத்தில் பார்வதி பார் என்ற புகழ் பெற்ற பாரை ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் சார்லஸ் மாமாவைக் கொலை செய்கிறார் அருள்தாஸ். அப்போது அருள்தாஸ் உயிரைக் காப்பாற்றியது சிறுவனாக இருக்கும் தீரன். அவனை எடுத்து வளர்க்கிறார் அருள்தாஸ். இளைஞான பின் அருள்தாஸின் பல பார்களின் பொறுப்பு தீரன் கையில் உள்ளது. அருள்தாஸ் கூட்டத்தினரைப் பழி வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார் சார்லஸ். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர் டீச்சரான ரேஷ்மா வெங்கடேஷ். ஒரு பக்கம் மோதல், மறு பக்கம் காதல் என இருக்க தீரன் வாழ்வில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தீரன் ஒரு அதிரடி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதால் அவரது தோற்றம் பொருத்தமாகவே உள்ளது. உயரமாகவும், வலிமையாகவும் இருக்கிறார், முடிந்த அளவிற்கு நடிக்கவும் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நாயகனாகவும் அதிரடி வில்லனாகவும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கலாம்.
படத்தின் நாயகி ரேஷ்மா வெங்கடேஷை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசனை வருகிறது. இதுதான் அவருடைய முதல் படமாம். ஆனால், ‘ரசவாதி’ படம் முதலில் வந்துவிட்டது. டீச்சர் கதாபாத்திரத்தில் அவ்வளவு பாந்தமாக இருக்கிறார். என்ன நடந்தாலும் பரவாயில்லை என மதுக்கடைகளை எதிர்த்துப் போராடுகிறார். அவர் போராட்டம் நடத்துவதும் அதனால் நாயகன் மனம் மாறுவதும் வழக்கமான சினிமா போல இருந்தாலும் நம்பும்படியாகத்தான் உள்ளது.
நாயகன் தீரன், அவனது நண்பன் ஸ்ரீநாத் ஆகியோரை சிறுவயதிலிருந்தே எடுத்து வளர்க்கும் அப்பா கதாபாத்திரத்தில் அருள்தாஸ். வழக்கம் போல தனது குணச்சித்திர நடிப்பில் யதார்த்தமாய் நடித்திருக்கிறார். தீரன் நண்பனாக ஸ்ரீநாத் ஓரிரு இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். வில்லனாக சார்லஸ் வினோத், லோக்கல் ரவுடி என அவரைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளும்படி நடித்திருக்கிறார்.
டீச்சருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடும் அந்த பள்ளிக்குழந்தைகள் கூட யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.
குடிப்பழக்கத்திற்கு எதிரான ஒரு கதை, அதை பிரச்சார நெடி இல்லாமல் கமர்ஷியல் படமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர். படம் முடிந்த பின் நம்மை இந்தப் படம் யோசிக்க வைக்கும். படம் பார்த்து ஒரு சிலர் குடியை விட்டாலே அது இந்தப் படத்தை எடுத்த குழுவினருக்குக் கிடைத்த வெற்றி.
Tags: saala, manipaul, theeran, reshma venkatesh