கொட்டுக்காளி - விமர்சனம்
24 Aug 2024
பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
வழக்கமான திரைப்படப் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கலைப் படைப்பு. ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் அவருடைய படைப்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தந்துள்ள அடுத்த படம் இது.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று உறவினர்கள் சொல்கிறார்கள். வெளியூரில் வேலை செய்யும் முறை மாமன் சூரி வந்த பிறகு, அன்னாவை பேய் விரட்டுவதற்காக வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள். வழியில் நடக்கும் சில வாக்குவாதங்கள் அந்தப் பெண்ணிற்கு பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை பார்வையாளனுக்கு உணர்த்துகிறது. பேய் விரட்டும் இடத்திற்குச் சென்ற பின் அன்னாவைப் பிடித்திருந்த பேய் விரட்டப்பட்டதா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
சினிமா என்பது காட்சி ஊடகம். வசனங்கள் குறைவாக இருந்தாலும் காட்சிகளின் வழியே பார்வையாளனுக்கு என்னென்ன புரிய வேண்டுமோ அதை அடுத்தடுத்து புரிய வைக்கிறார் இயக்குனர். படத்தின் கிளைமாக்சில் கூட ஒரு அழுத்தமான கருத்தைப் பதிவு செய்கிறார். ஆனால், அது எத்தனை பேருக்குப் புரியும் என்பதும் சந்தேகம்தான். கமர்ஷியல் சினிமா, தரமற்ற காமெடி படங்களைப் பார்த்துப் பழகிப் போன சராசரி சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்குதோ இல்லையோ, அவர்களும் இம்மாதிரியான படங்களுக்கு தங்களை பழக்கிக் கொண்டு அவர்களது ரசனையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இப்படத்தை கதாநாயகின் படம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கோ வெறித்த பார்வை, ஆனால், தன்னைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை கவனிக்கும் குணம், என்ன நடந்தாலும் தன் நிலையிலிருந்து மாறாத பிடிவாத குணம் என பேசாமலேயே பாவங்களால் மட்டும் நம்மைக் கவர்கிறார் அன்னா பென்.
படத்தின் நாயகன் என்று சொல்வதைவிட வில்லன் என்றுதான் சூரியைச் சொல்ல வேண்டும். ஆணாதிக்கக் குணம் கொண்ட ஒருவன், தனது குடும்பமாகவே இருந்தாலும் தனக்கு அடங்கிப் போக வேண்டும் என நினைக்கும் ஒருவனாக அவ்வளவு திமிருடன் நடந்து கொள்கிறார் சூரி. சில படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் நம்மை சிரிக்க வைக்கத் தடுமாறிய சூரியா இது என ஆச்சரியப்பட வைக்கிறார்.
அன்னாவின் பெற்றோர், சூரியன் அப்பா, தங்கைகள், உடன் செல்லும் உறவினர்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் யாருமே தங்களை ஒரு கேமரா படம் பிடிக்கிறது என்பது கூடத் தெரியாமல் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளரே இல்லாத ஒரு படம் இந்தக் காலத்தில் சாத்தியம் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர். இயற்கையின் ஒலிகளால் அந்த இசை படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. அந்த ஒலிகளை சுரேஷ், அழகிய கூத்தன் கூட்டணி அழகாய் செய்திருக்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும், வெவ்வேறு கோணங்களில் படத்திற்கான சக்தியைத் தந்திருக்கிறது.
இப்படியான படங்களையும் பார்க்கப் பழகி தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் கொண்டு செல்ல உதவுங்கள் ரசிகர்களே…
Tags: kottukkaali, soori anna ben, ps vinothraj