போகுமிடம் வெகு தூரமில்லை - விமர்சனம்

24 Aug 2024

மைக்கேல் கே ராஜா இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், விமல், கருணாஸ், பவன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு பயணக் கதையில் உதவும் குணம், மனித நேயம், குடும்ப கஷ்டம், பங்காளித் தகராறு, சாதி மீறிய காதல் என இன்றைய சமுதாயத்தில் நடக்கும் சில விஷயங்கள், இருக்க வேண்டிய சில விஷயங்கள் அனைத்தையும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

திருநெல்வேலியில் இரண்டு மனைவிகளுடன் வாழ்க்கை நடத்திய ஒருவர் சென்னையில் விபத்தில் இறந்து போகிறார். அவரது பிணத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய மார்ச்சுவரி வேனை ஓட்டிச் செல்கிறார் விமல். பிணத்துடன் உறவினர் என யாரும் வரவில்லை. வண்டி நின்றால் தள்ளுவதற்குத் தேவை என வழியில் லிப்ட் கேட்கும் கருணாஸை ஏற்றிக் கொள்கிறார். தங்களது அப்பாவின் பிணத்திற்காக வெவ்வேறு ஊரில் காத்திருக்கிறார்கள் இரண்டு மனைவிகளின் மகன்கள். இரண்டாவது மனைவியின் மகன் பவன் இறுதிச் சடங்கை அவர் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார். அதைத் தடுக்கும் முயற்சியில் இருக்கிறார் முதல் மனைவியின் மகன் ஆடுகளம் நரேன். இதனிடையே, வழிப் பயணத்தில் அந்தப் பிணம் காணாமல் போகிறது. அதை யார் எடுத்தது, அடுத்து என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்து இளைஞனாக பல படங்களில் போகிற போக்கில் நடித்துவிட்டுச் செல்வார் விமல். இந்தப் படத்தில் கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம். மனைவியி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணத்திற்காகத் தவிப்பவர். ஏழ்மை  ஒரு பக்கம் அழுத்த, மனைவியை கவனிக்கப் பணமில்லையே என்ற தவிப்பும் சேர, அதற்காக அந்த நிலையிலும் பிணத்தை எடுத்துக் கொண்டு, திருநெல்வேலி வரை பயணிக்கிறார். சென்னைத் தமிழைத் தட்டுத்தடுமாறிப் பேசினாலும் சமாளிக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரது வருத்தமும், சோகமும் நமக்கும் வரச் செய்கிறது அவரது நடிப்பு.

கூத்துக் கலைஞராக பெரிய பெயரைப் பெற முடியாமல் வருத்தப்படும் ஒரு கதாபாத்திரத்தில் கருணாஸ். சென்னையிலிருந்து திருநெல்வேலி அருகில் செல்ல விமல் வேனில் லிப்ட் கேட்டுப் பயணிக்கிறார். முதலில் இருவருக்குமான சிறு சண்டை, பின்னர் ஒரு நட்பு என இயல்புடன் பயணிக்கிறது அவர்களது நட்பு. ஒரு கட்டத்தில் இருவருமே காதல் ஜோடி ஒன்றிற்கு உதவி செய்யப் போய் வம்பில் சிக்குகிறார்கள். அப்பாவியான கருணாஸ் கதாபாத்திரம் கடைசியில் செய்வது முற்றிலும் சினிமாத்தனமாக இருந்தாலும் கலங்க வைக்கிறது.

அண்ணன், தம்பி சண்டையில் பவன், ஆடுகளம் நரேன் போட்டியில் பவன் முன்னிலை பெறுகிறார். விமல் மனைவியாக சில காட்சிகளில் அழுது தீர்க்கிறார் மெரி ரிக்கெட்ஸ்.

பயணக் கதை அதுவும் மார்ச்சுவரி வேனில் நெடுஞ்சாலைப் பயணம் அதைப் படமாக்குவதில் நிறையவே சிரமம் இருக்கும். அந்தப் பயணத்தில் உள்ள உணர்வுகளையும் உள்வாங்கி சரியான கோணங்களில் படமாக்கியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் டெமல் சேவியர், எட்வர்ட்ஸ். என்ஆர் ரகுநந்தன் பின்னணி இசையில் உயிர் சேர்த்திருக்கிறார்.

படத்தின் இடைவேளை வரையிலான சில காட்சிகள் படத்திற்கு சரியாக அமையவில்லை. நடித்துக் காட்டுகிறேன் என கருணாஸ் கொஞ்சம் சோதிக்கிறார். விமலும் பதிலுக்கு வெறுப்பைக் காட்டுகிறார். இடைவேளைக்குப் பின்தான் தனக்கான பாதையில் பயணிக்கிறது திரைக்கதை. சில பல குறைகளைச் செய்திருந்தால் உணர்வுபூர்மான தமிழ்ப் படங்களில் இந்தப் படத்திற்கும் நிறைவான இடம் கிடைத்திருக்கும்.    

Tags: pogumidam vegu thooramillai, vimal, karunas

Share via: