உழைப்பாளர் தினம் - விமர்சனம்

31 Aug 2024

சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில், மசூத் ஜம்சா இசையமைப்பில், சந்தோஷ் நம்பிராஜன், குஷி மற்றும் பலர் நடித்துள்ள படம்.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கபூருக்குச் சென்று வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதைப் பற்றிச் சொல்லியிருக்கும் படம். அந்தக் காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவைதான் நமது தமிழ் மக்கள் அதிகமாக வேலை பார்த்த நாடுகளாக இருந்தன. இன்றும் பலர் தங்களது குடும்பத்தினரை விட்டு அங்கு சென்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்.

குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூர் சென்று வேலை பார்ப்பவர் சந்தோஷ். திருமண வயதில் உள்ளவர் ஊருக்கு வந்த போது அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூர் வேலைக்குச் சென்று விடுகிறார் சந்தோஷ். தனது சொந்த ஊரில் ஒரு கடை ஆரம்பிக்கும் அளவிற்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. குழந்தைக்கு அப்பாவான பின்பும் சிங்கப்பூர் வேலையில் இருந்தவர் ஒரு கட்டத்தில் ஊருக்கு வருகிறார். அவரது லட்சியமான கடையைத் திறக்க முயற்சிக்கும் போது குடும்பத்தில் எதிர்பாராத சிக்கல் வருகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

திருமண வயதில் உள்ள இளைஞனான பல கனவுகளுடன் சிங்கப்பூரில் வேலை செய்வது, திருமணமான பிறகும் வேலை செய்வது, குழந்தை பிறந்த பிறகும் வேலை செய்வது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவன் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறான் என்பதை தனது நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார். தனது லட்சியத்தை நிறைவேற்ற ஊருக்கு வந்தால் அங்கு பெற்றோரால் ஏமாற வேண்டிய ஒரு சூழ்நிலை. தனக்காக இல்லாமல் தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒருவன் எப்படி அவதிக்குள்ளாகிறான் என்பதை அனுதாபப்படும்படி நடித்திருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன்.

சந்தோஷ் மனைவியாக குஷி. கணவன், மனைவி இடையேயான நெருக்கமான காட்சிகளிலும், எங்கோ இருக்கும் கணவனை போனில் பேசியே காதலிப்பதிலும் அறிமுக நடிகை என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். கொஞ்சம் கிளுகிளுப்பான காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

இவர்கள் இருவரது கதாபாத்திரம் தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் சந்தோஷ் அம்மாவாக நடித்திருப்பவர் மட்டுமே கொஞ்சம் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரது வாழ்க்கையை இயல்பாகச் சொல்ல முயற்சித்த படமாக இருந்தாலும் படத்தின்  ஒளிப்பதிவு, இசை என எல்லாமே மிகவும் சுமார் ரகம்தான். ஒரு சாமானிய இளைஞனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய நினைத்தவர்கள் அவற்றையும் நல்ல டெக்னிக்கல் தரத்துடன் பதிவு செய்திருக்கலாம்.

Tags: uzhaippalar dhinam, santhosh nambirajan

Share via: