விருந்து - விமர்சனம்
31 Aug 2024
தாமரை கண்ணன் இயக்கத்தில், ரதீஷ் வேகா இசையமைப்பில், அர்ஜுன், நிக்கி கல்ரானி, கிரிஷ் நெய்யர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பிரபல தொழிலதிபரான முகேஷ், அவரது மனைவி அடுத்தடுத்து மர்மமாக இறந்து போகிறார்கள். அவற்றை விபத்து என்று சொல்வதா கொலை என்று சொல்வதா என சொல்ல முடியாமல் தவிக்கிறது காவல் துறை. இந்நிலையில் அவர்களது ஒரே மகளான நிக்கி கல்ரானியையும் கொல்ல முயற்சி நடக்கிறது. அதனால், அவர்களது குடும்ப நண்பர் நிக்கியைக் காப்பாற்ற நினைக்கிறார். வனப்பகுதியில் நிக்கியை பாதுகாப்பாக வைக்கிறார். ஆனால், அங்கும் மர்ம கும்பல் நிக்கியைத் துரத்துகிறது. அங்கிருந்து தப்பிப்பவரை அர்ஜுன் வந்து காப்பாற்றுகிறார். ஆனால், அர்ஜுனையே சந்தேகப்படுகிறார். அர்ஜுன் ஏன் நிக்கியைக் காப்பாற்றுகிறார், நிக்கி எதனால் அர்ஜுனை சந்தேகப்படுகிறார் என்பதை சொல்கிறது மீதிக் கதை.
இயக்குனர் தாமரை கண்ணன் ஒரு த்ரில்லர் படத்தை பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். யார் கொலையாளிகள் என்ற சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரையிலும் நகர்த்தி கடைசியில் நாம் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் இரண்டு கொலைகள், மற்றொரு கொலை முயற்சி, ஒரு ஆட்டோ டிரைவரின் கதை என நகர்கிறது. இடைவேளை சமயத்தில்தான் அர்ஜுன் என்ட்ரி கொடுக்கிறார். அதன்பின் படம் வேறு தளத்தில் நகர்கிறது.
நிக்கி கல்ரானி கொஞ்சம் இளைத்துவிட்டது போல இருக்கிறார். தனது பெற்றோரைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்து கொள்ளத் துடிக்கிறார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒடினால், அவரை வந்து காப்பாற்றும் அர்ஜுனையும் சந்தேகப்படுகிறார். கொடுத்த கதாபாத்திரத்தில் நிறைவாகவே நடித்திருக்கிறார்.
அனுபவ நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அர்ஜுன். அவருடைய வழக்கமான ஆக்ஷன் படத்தில் உண்டு. படத்தில் அவர்தான் ஹீரோ என்றாலும் தாமதமாகவே என்ட்ரி கொடுக்கிறார்.
படத்தில் கிளைக் கதையாக ஆட்டோ டிரைவரான கிரிஷ் நெய்யார் கதாபாத்திரம் வருகிறது. மையக் கதையை விட்டு இந்த கிளைக் கதைக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளை மட்டும் வைத்துவிட்டு கடந்திருக்கலாம். மையக் கதையின் போக்கை இது மாற்றுகிறது. மற்ற கதாபாத்திரங்களில் நிக்கியின் மாமாவாக நடித்திருக்கும் பைஜு சந்தோஷுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இரண்டு சண்டைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
ரவிச்சந்திரன், பிரதீப் நாயர் ஒளிப்பதிவில் காட்டுப் பகுதிகள், அர்ஜுன் வீடு, கிளைமாக்ஸ் காட்சி ஆகியவை அற்புதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ரதீஷ் வேகாவின் பின்னணி இசையும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம் என்று சொல்கிறார்கள். ஆனால், படத்தில் அர்ஜுன் மட்டுமே தமிழில் பேசி நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் மலையாளத்தில் பேசியதை தமிழில் டப்பிங் செய்துள்ளார்கள். அதனால் ஒரு டப்பிங் படத்தைப் பார்க்கும் உணர்வும் அவ்வப்போது வந்து போகிறது. மற்றபடி ஒரு த்ரில்லர் படத்தைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
Tags: virundhu, arjun, nikki galrani