தி கோட் - விமர்சனம்
06 Sep 2024
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, சினேகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
‘டீ ஏஜிங்’ தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ள முதல் இந்தியத் திரைப்படம் இது. இரட்டை வேடப் படங்கள் என்றாலே மேக்கப்பில் மட்டுமே சில தோற்ற மாற்றங்களை வைத்தே இதற்கு முன்பு படங்கள் உருவாக்கப்பட்டன. அதில் இந்த ‘டீ ஏஜிங்’ முறையை முழுமையாகப் பயன்படுத்தி இனி வர உள்ள இரட்டை வேடப் படங்களுக்கு முன்மாதிரியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.
சிறப்பு தீவிரவாத எதிர்ப்புக் குழு, சுருக்கமாக ஆங்கிலத்தில் ‘SATS’, குழுவில் உள்ளவர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல். நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அதிரடித் தாக்குதலை நடத்துபவர்கள். அந்தக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்து தேசத் துரோகியாக மாறியவர் மோகன். அவரை கென்யாவில் வைத்து அதிரடித் தாக்குதல் நடத்தி கொல்கிறது குழு. அடுத்து தாய்லாந்தில் வேறொரு தாக்குதலை செய்ய இந்தக் குழு செல்கிறது. அப்போது குடும்பத்துடன் சென்ற விஜய்யின் சிறு வயது மகனை யாரோ கடத்தி விடுகிறார்கள். கடத்தப்பட்ட மகன் விபத்தில் இறந்தும் விடுகிறார். அந்த சம்பவத்தில் கணவன் விஜய் மீது கோபம் கொண்டு அவரை பிரிந்து வாழ்கிறார் சினேகா. 15 வருடங்களுக்குப் பிறகு மற்றொரு வேலைக்காக ரஷ்யா செல்கிறார் விஜய். அங்கு அவரைப் போன்ற தோற்றம் கொண்ட 20 வயது விஜய்யை சந்திக்கிறார். அதுதான் காணாமல் போன விஜய் எனத் தெரிய வருகிறது. மகன் கிடைத்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருக்க, அடுத்தடுத்து சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் விஜய். 2008ல் நடப்பதாகக் காட்டப்படும் கதையில் தனது வழக்கமான குறும்புத்தனங்களாலும், அதிரடி ஆக்ஷனாலும் தன் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார் விஜய். அதே கதாபாத்திரம் 50 வயதைக் கடக்கும் போது அதே அதிரடி ஆக்ஷன் இருக்கிறது. ஆனாலும், அந்த வயதுக்கேயுரிய ஒரு பொறுமையுடனும் ரசிக்க வைக்கிறார்.
20 வயது மகன் விஜய் ‘டீ ஏஜிங்’ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளார். தற்போது 50 வயதை நெருங்கும் விஜய், அந்த 20 வயது விஜய் கதாபாத்திரமாக மாறுவது சாதாரண விஷயமல்ல. வயதான கதாபாத்திரங்களில் கூட நடை, பேச்சை மாற்றி நடித்துவிடலாம். ஆனால், வயது குறைந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலான ஒன்று. அதற்கான உடல்மொழி, துறுதுறுப்பு, பேச்சு, பார்வை என ‘ரிவர்ஸ்’ ஆக யோசித்து நடிக்க வேண்டும். அதை அசத்தலாகவே செய்திருக்கிறார் விஜய். 90களில் அறிமுகமான போது விஜய் எப்படி இருந்தாரோ அந்த தோற்றமும், நடிப்பும் இப்போதும் திரையில் பார்ப்பது அவரது ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும்.
விஜய்யின் நெருங்கிய நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல். ஒவ்வொருவருக்கும் சரியான அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் என்றாலும் அவர்கள் கதாபாத்திரங்களுக்கத் தேவையான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். அப்பா விஜய் ஜோடியாக சினேகா. ஆரம்க சில காட்சிகளில் ‘வசீகரா’ ஜோடியைப் பார்த்தது போல உள்ளது. மகன் விஜய்யின் ஜோடியாக மீனாட்சி சௌத்ரி. சில காட்சிகள், ஒரே ஒரு பாடல் என அவருடைய கடமை முடிந்து போகிறது. வில்லனாக மோகன், இருந்தாலும் அவருக்கான காட்சிகள் குறைவுதான். சாட்ஸ் குழுவின் தலைவராக ஜெயராம். யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் என சிலர் வந்து போகிறார்கள்.
அஜித் படங்களில் யுவன் என்றாலே அது தனி ரகம் என அவர்களது ரசிகர்கள் நிறைய கொண்டாடி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்திற்கு யுவன் இசை. வழக்கம் போல பின்னணி இசையில் தன் பாணியில் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் யுவன். படத்துடன் பார்க்கும் போது பாடல்கள் நன்றாகவே உள்ளது. சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உள்ளது. பாடல்களில் இன்னும் மாறுபட்ட கோணங்களை காட்டியிருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிக்கான உழைப்பு மிக அதிகம்.
அப்பா மகன் இரட்டை வேடப் படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. தேசத் துரோகிகள், புலனாய்வுக் குழு, நண்பர்கள் என இதற்கு முன்பும் நிறைய விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் வந்துள்ளன. சில பல படங்களை இந்தப் படம் ஞாபகப்படுத்தினாலும் தொழில்நுட்ப ரீதியாக இந்தக் காலத்திற்கு பொருத்தமான படமாக மாற்ற நிறைய மெனக்கெட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. சில லாஜிக்கலான குறைகள் இந்தப் படத்திலும் இருக்கிறது என்பது ஏமாற்றம். ஆரம்பத்தில் சில வேகத் தடைகள் இருந்தாலும் மூன்று மணி நேரப் படமாக இருந்தாலும் ஜாலியான என்டர்டெயின்மென்ட் படமாக நகர்ந்து போகிறது.
Tags: the goat, vijay, venkat prabhu, yuvanshankar raja, prashanth, prabhu deva, sneha