ஏஆர்எம் - விமர்சனம்

13 Sep 2024

ஜிதின் லால் இயக்கத்தில், திபு நினன் தாமஸ் இசையமைப்பில், டொவினோ தாமஸ், பாசில் ஜோசப், கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ள மலையாளத் திரைப்படம்.

மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் நடிப்பில் வந்துள்ள 50வது படம். அதனால், இந்தப் படத்தை ஒரு மாறுபட்ட படமாகக் கொடுக்க வேண்டும் என இயக்குனரும், படக்குழுவினரும் உழைத்துள்ளார்கள்.

கேரளாவில் உள்ள சித்யோதிக்கோவ் என்ற ஊரில் எலக்ட்ரிசியனாக இருப்பவர் டொவினோ தாமஸ். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அவருக்கு நம்பியார் சாதியைச் சேர்ந்த ஊர் பெரிய மனிதரான கிரித்தி ஷெட்டியின் மகள் மீது காதல். டொவினோவின் தாத்தா அந்தக் காலத்தில் திருடன் எனப் பெயர் வாங்கியவர். அதனால், டொவினோவை ஊரார் யாரும் மதிக்க மாட்டார்கள். அந்த கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த ‘ஸ்ரீபூதி விளக்கு’ சிலையை கடத்தத் திட்டமிடுகிறார் மன்னர் வாரிசான ஹரிஷ் உத்தமன். அந்த கடத்தல் வேலையைச் செய்ய டொவினோவை மிரட்டுகிறார். அந்த சிலை கடத்தப்பட்டதா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

மூன்று வெவ்வேறு  கால கட்டங்களில் படத்தின் கதை நகர்கிறது. மன்னர்கள் காலத்தில் அவர்களையே ஆச்சரியப்பட வைத்த குஞ்சிக்கெழு என்ற வீரான ஒரு கதாபாத்திரம், அடுத்து மணியன் என்ற வீரமும், திறமையும் மிக்க திருடனாக ஒரு கதாபாத்திரம், அஜயன் என்ற வீரமும், பாசமான குணமும் கொண்ட இளைஞனாக ஒரு கதாபாத்திரம், என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் டொவினோ. ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதாபாத்திரங்கள். அதற்கேற்றபடி தோற்றம், உடல்மொழி, பேச்சு ஆகியவற்றில் வித்தியாசப்படுத்தி நடித்திருக்கிறார்.

அஜயன் கதாபாத்திர டொவினோவின் காதலியாக கிரித்தி ஷெட்டி. ஊர் பெரிய மனிதரின் மகளாக இருந்தாலும் டொவினோவை உறுதியுடன் காதலிக்கிறார். சாதி வித்தியாசம் பார்க்காத காதலாக அது இருக்கிறது. மற்ற கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோரை விட கிரித்தி படத்தில் அதிக நேரம் இடம் பெற்றுள்ளார். அழகாக சிரித்து மயக்குகிறார்.

டொவினோவின் நண்பராக பாசில் ஜோசப். கதாநாயகனாகவே சில வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நாயகனின் நண்பனாகவும் நடிக்க சம்மதிப்பதெல்லாம் மலையாள சினிமாவில்தான் நடக்கும். டொவினோவின் அம்மாவாக ரோகிணி, வில்லனாக ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

திபி நினன் தாமஸ் இசையில் பின்னணி இசை மூன்று வெவ்வேறு காலகட்டங்களை வித்தியாசப்படுத்தி இருக்கிறது. ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவும், விக்ரம் மோர், பீனிக்ஸ் பிரபு ஆகியோரது சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

மலையாளப் படம் என்றாலும் சமீப கால தமிழ்ப் படங்களில் உள்ள சாதிய பாகுபாட்டை மையப்படுத்தி அதை சரித்திரப் பின்னணிப் படமாகவும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை அமைப்பு சாமானிய ரசிகர்களுக்குக் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். அது ஒன்றுதான் படத்தின் மைனஸ்.

Tags: arm, tovino thomas, krithi shetty

Share via: