லப்பர் பந்து - விமர்சனம்
21 Sep 2024
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி இதுவரை வந்த படங்களில் இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். அதைச் சுற்றி குடும்பம், காதல், கணவன் மனைவி உறவு, காதலர்களின் காதல் என ரசனையான ஒரு படத்தை அற்புதமான திரைக்கதை அமைத்துத் தந்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
சுவர்களில் ஓவியம் வரையும் வேலை பார்ப்பவர் தினேஷ். கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். காதல் மனைவிக்குத் தெரியாமல் அடிக்கடி வந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுபவர். அவரது அதிரடி ஆட்டத்திற்கு ஊரே அடிமை. அவரது மகள் சஞ்சனாவைக் காதலிக்கிறார் வேறு ஊரை, வேறு சாதியைச் சேர்ந்த ஹரிஷ் கல்யாண். ஒரு கிரிக்கெட் போட்டியில் தினேஷுக்கும், ஹரிஷுக்கும் மோதல் ஏற்படுகிறது. தினேஷின் மகளைத்தான் தான் காதலிக்கிறோம் என்பது தெரிந்ததும் பிரச்சனை தீவிரமாகிறது. தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார் தினேஷ். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
விஜயகாந்த் பாடலுடன் மைதானத்தில் தினேஷ் நுழையும் போதே களை கட்ட வைக்கிறார் இயக்குனர். அதற்கேற்றபடி அவர் ஆடும் அதிரடி ஆட்டத்தை ரசிகர்களும் உணரும்படி காட்சிப்படுத்தி இருக்கிறார். பனை மரங்களைக் கடந்து பறக்கிறது அவர் அடிக்கும் பந்துகள். அவ்வளவு அதிரடியானவர் மனைவி ஸ்வாசிகா வந்தால் மட்டும் அப்படியே அடங்கிப் போகிறார். காதல் மனைவி மீது அவ்வளவு காதல். திருமண வயதில் மகள் இருக்கும் போதும் அவர்களின் காதலை வெளிப்படுத்தும் நடிப்பும் ரசிகர்களை பொறாமைப்பட வைக்கும்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் அறியப்படாத நடிகையாக இருந்தவர் ஸ்வாசிகா. இந்தப் படத்தில் யார் இவர் என்று கேட்க வைக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் கணவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்பது தெரிந்ததும், டிராக்டரை ஓட்டி வந்து மைதானத்தையே உழுது நாசப்படுத்துகிறார். அந்த அளவிற்கு கண்டிப்பான ஒரு மனைவி. இனி, தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் ஸ்வாசிகாவைப் பார்க்கலாம்.
‘பார்க்கிங்’ படத்திற்குப் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு மீண்டும் ஒரு பேர் சொல்லும் படம். கிராமத்து இளைஞர் கதாபாத்திற்கு தன்னை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கான பேச்சு, நடை, உடை, பாவனை என அனைத்துமே அவருக்குப் பொருத்தமாக உள்ளது. சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தமிழ் சினிமாவிற்குக் கிடைத்துள்ள மற்றொரு யதார்த்தமான நடிகை. ஒரு பக்கம் அப்பா, மறுபக்கம் காதலன் என இருவருக்கும் இடையில் பதட்டமில்லாமல் தனது முடிவில் தெளிவாக இருக்கிறார். காதல் கொடுக்கும் தைரியம் என்று சொன்னாலும் கூட, அம்மாவைப் போலவேதானே மகளும் இருப்பார் என்றும் சொல்ல வைக்கிறது.
ஏட்டிக்குப் போட்டியான சீரியசான கதை ஒரு பக்கம் இருக்க, அதே சமயம் ஓரிரு வசனங்களிலேயே சாதிய வித்தியாசத்தை சரியாகச் சாடியிருக்கிறார் இயக்குனர். தினேஷ் நண்பனாக ஜென்சன் திவாகர், ஹரிஷ் நண்பராக பாலசரவணன் ஆகியோரை வைத்து அவ்வப்போது கருத்துக்களையும், காமெடியையும் கொடுத்து ரசிக்கவும், யோசிக்கவும் வைத்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் காளி வெங்கட் கதாபாத்திரம் மனதில் இடம் பிடிக்கிறது.
மைதானம், கிராமம், தெரு, வீடு என பலதரப்பட்ட இடங்களை படத்தின் யதார்த்தத்துடன் சேர்த்தே நம்மை அழைத்துச் செல்கிறது தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு. ஷான் ரோல்டனின் பின்னணி இசை சிறப்பு. தனித்து சில பாடல்களை வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கலை இயக்குனர் வீரமணி கணேசனின் பங்கு விஜயகாந்த் ஓவியம், மைதானம், வீடுகள் என சரியான பதிவைக் கொடுத்திருக்கிறது.
தலைமுறை இடைவெளியில் உள்ள ‘ஈகோ’ தான் இந்தப் படத்தின் கதை. இதே போல சில கதைகளைப் பார்த்திருக்கலாம், ஆனால், இது போன்ற கதையைப் பார்த்திருக்க முடியாது. தமிழ் சினிமாவில் இன்னும் சொல்லப்படாத இது போன்ற கதைகளுடன் புதிய இயக்குனர்கள் வருவது தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கிறது.
Tags: lubber pandhu, attakathi dinesh, harish kalyan