கோழிப்பண்ணை செல்லதுரை - விமர்சனம்

21 Sep 2024

சீனு ராமசாமி இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், ஏகன், பிரிகிடா, யோகி பாபு, சத்யா தேவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்துள்ள மற்றுமொரு கதை. பாசக் கதை என்றால் உணர்வபூர்வமான காட்சிகள் இல்லாமல் படம் இருக்காது. இந்தப் படத்திலும் அப்படியான சில காட்சிகள் இருக்கின்றன. அதுதான் இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது.

மனைவி மீதான சந்தேகத்தில் அவரையும், அவரது கள்ளக் காதலரையும் கையும் களவுமாகப் பிடிக்கிறார் கணவன். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறது அந்த கள்ளக் காதல் ஜோடி. தனது இரண்டு குழந்தைகளையும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் ராணுவத்திற்கே செல்கிறார் கணவன்.

கோழிப் பண்ணை வைத்திருக்கும் யோகிபாபுவின் பரிதாபப் பார்வை அந்தக் குழந்தைகள் மீது பட அவரது ஆதரவில் வளர்கிறார்கள். அவர்கள்தான் அண்ணன் ஏகன், தங்கை சத்யா தேவி. கல்லூரியில் படிக்கும் சத்யாவிற்கு ஒருவர் மீது காதல் வர, தங்கையிடம் அம்மாவைப் போல மாறப் போகிறாயா என அதிர்ச்சிக் கேள்வியை முன் வைக்கிறார் அண்ணன். அதனால், அண்ணன், தங்கை பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அம்மா ஓடி விட, அப்பாவும் வெறுப்பில் போய் விட, ஒன்றும் புரியாத சிறு வயது தங்கையுடன் பாட்டி வீட்டில் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படுபவனாய் வளர்கிறார் ஏகன். அதனால், எப்போதும் ஒரு இறுக்கத்துடனேயே இருக்கிறார். அவரைத் தேடி வந்து காதலிக்கும் பிரிகிடாவின் காதலைக் கூட வெறுப்பாகவே பார்க்கிறார். தங்கை மீது மட்டும் அளவு கடந்த பாசத்தையும், தன்னை வளர்த்து ஆளாக்கிய யோகி பாபு மீது பெரிய மரியாதையும் வைத்திருக்கிறார். உணர்வு பூர்வமான காட்சிகளில் கதாபாத்திரத்திற்குத் தேவையான இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார் ஏகன்.

ஏகனைத் தேடித் தேடிப் போய் காதலித்து அவமானப்படுகிறார் பானை கடை வைத்திருக்கும் பிரிகிடா. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே சாதாரணமாகக் கடந்து போகிறது. யோகி பாபு படத்தில் இருக்கிறார், அதனால் காமெடி இருக்கும் என நினைத்து வருபவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். இந்தப் படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் யோகி பாபு.

இயற்கை எழி கொஞ்சம் கிராமத்தில் நடக்கும் கதை என்றாலும் கடைத் தெருவில் தான் அதிகமான காட்சிகள் நகர்கின்றன. தேவையான காட்சிகளில் தனது பதிவைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ். பின்னணி இசையில் என்ஆர் ரகுநந்தன் ஈர்த்திருக்கிறார். பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தின் குறையே மெதுவாக நகர்வதுதான். இடைவேளை வரை எந்தத் திருப்பமும் இல்லாமல் ஏதோ ஒரு போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகுதான் படத்தில் சில அழுத்தமான காட்சிகளும், திருப்பமான காட்சிகளும், உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

Tags: kozhipannai chelladurai, seenu ramasamy

Share via: