கடைசி உலகப் போர் - விமர்சனம்
21 Sep 2024
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கம், தயாரிப்பு, நடிப்பில் உருவாகியுள்ள படம். அனகா, நாசர், நட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஐநா சபை, அதற்குப் போட்டியாக ரிபப்ளிக் என்ற அமைப்பு, இந்திய அரசியல், தமிழ்நாடு அரசியல், இடையில் காதல் என் என்னென்னமோ சொல்கிறார் இயக்குனர் ஆதி. ‘ஏ’ சென்டர்களைக் கடந்து இந்தப் படம் மற்ற சென்டர்களில் உள்ளவர்களுக்கு எப்படிப் புரியும் என அவர் யோசித்துப் பார்க்கவில்லையா என்ற சந்தேகமும் எழுகிறது.
தமிழ்நாடு முதல்வர் நாசரின் மகளான அனகாவை காட்டில் விலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறார் ஆதி. உடனே அனகாவுக்கு ஆதி மீது காதல் வருகிறது. நாசருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அனகா கல்வி அமைச்சராகி ஏழை மக்களுக்கான கல்வித் திட்டங்களை அறிவிக்கிறார். நாசரை பின்னாலிருந்து இயக்கும் மச்சான் நட்டிக்கு அனகாவின் அணுகுமுறை பிடிக்கவில்லை. தனக்குச் சொந்தமான பணத்தை சென்னையில் உள்ள கண்டெயினர்களில் எடுக்க வேண்டி கலவரம் ஒன்றைத் தூண்டுகிறார் நட்டி. அதில் தீவிரவாதி என ஆதி கைது செய்யப்படுகிறார். கலவரத்தை அடக்க வரும் இந்திய ராணுவம் நட்டியைக் கைது செய்கிறது. இதனிடையே, ரிபப்ளிக் அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த சென்னைக்குள்ளும் நழைகிறது. கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட ஆதி, நட்டி ஒரு மலை கிராமத்தில் தனியாக இருக்கிறார்கள். அங்கிருந்து நாட்டையும், மாநிலத்தையும் காப்பாற்றப் போராடுகிறார் ஆதி. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. சுருக்கமாகச் சொன்னாலே இவ்வளவு எழுத வேண்டியிருக்கிறது.
படமும் இப்படித்தான் எப்படி எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது. தன்னை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திக் கொள்ள ஆசைப்பட்டு தானே தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார் ஆதி. கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஷன் கதையை யோசித்தால் பரவாயில்லை, இந்தப் படத்தில் ஒரேயடியாக யோசித்துவிட்டார். அவருடைய வழக்கமான டெம்ப்ளேட் நடிப்பிலிருந்து மாறவில்லை. இசையமைப்பிலும் அப்படியேதான் இருக்கிறார். வேறு இயக்குனர்களிடம் தன்னை ஒப்படைத்தால்தான் மாற்றம் வரும் என்பதை சீக்கிரமே புரிந்து கொள்வார் ஆதி.
வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நட்டி. அரசியலில் ஆட்டிப் படைக்கும் ஒரு கதாபாத்திரம். எளிதில் ‘பிராடு மோடு’க்குப் போய்விடுகிறார். ‘சதுரங்க வேட்டை’ படம் அப்படி ஒரு அடையாளத்தை அவருக்குக் கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில் சில காதல் காட்சிகள், டூயட் என வழக்கமான கதாநாயகியாக வருகிறார் அனகா. அதன்பின் அரசியல்வாதி ஆகி வேறு தளத்திற்குப் போய்விடுகிறார். முதல்வராக நாசர், ராணுவ அதிகாரியாக ஹரிஷ் உத்தமன், கமிஷனராக கல்யாண், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக முனிஷ்காந்த், நடிகர் ரிஷிகாந்த் ஆக ஷாரா, அனகா உதவியாளராக மகாநதி சங்கர், மத்திய அமைச்சராக தலைவாசல் விஜய், தமிழ் மூச்சு எனப் பேசும் அரசியல்வாதியாக அழகம் பெருமாள் என படத்தில் பல கதாபாத்திரங்கள். அனைவரை வைத்து பல கருத்துக்களைச் சொல்லி ஓவராகவே திணித்து விட்டார் இயக்குனர்.
எதிர்காலத்தில் 2028ல் நடக்கும் கதை. கூடுதலாக ஒரு நான்கு வருடங்கள் நடக்கும் கதைதான். இருந்தாலும் அதற்குள்ளாகவே நகர அமைப்பில் பல வித்தியாசங்கள் வந்துவிட்டதாகக் காட்டுகிறார்கள். இப்படியான எதிர்காலப் படங்களுக்கு விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை கூடுதலாக சிறப்பாக இருக்க வேண்டும். இதில் அது சுமாராகவே உள்ளது.
மாறுபட்டு யோசித்த அளவிற்கு அதைப் படமாகக் கொடுத்ததில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
Tags: kadaisi ulaga por, hiphop tamizha, anagha, natty