நந்தன் - விமர்சனம்
21 Sep 2024
இரா.சரவணன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
உள்ளாட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படியான அவலங்களை சந்திக்க நேரிடுகிறது என்பதை கதையாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடி ஊராட்சியில் நடைபெற உள்ள தேர்தலில் தனது சாதி மக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார் ஊர் பெரிய மனிதர் பாலாஜி சக்திவேல். ஆனால், அத்தொகுதியை ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே போட்டியிடும் ‘ரிசர்வ்’ தொகுதியாக அறிவிக்கிறது அரசாங்கம். அதனால், தன் பேச்சைக் கேட்கும் ஒடுக்கப்பட்ட ஒருவரை வெற்றி பெற வைத்து ஆட்சியையும், அதிகாரத்தையும் தானே செய்வது என முடிவெடுக்கிறார் பாலாஜி. அதனால், அவரது வீட்டில், நிலத்தில் வேலை பார்க்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சசிகுமாரை தலைவராக நிற்க வைத்து வெற்றி பெற வைக்கிறார். ஆனால், சசிகுமார் மூலம் வேறு விதமான பிரச்சனைகள் வருகிறது. அதனால், பாலாஜியின் அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் சிக்கல் எழுகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கிராமத்துக் கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நடித்ததைப் போல அப்பாவி கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்ததில்லை. அவரது தோற்றமும் நடிப்பும் நம்ப முடியாத அளவிற்கு மாறியிருக்கிறது. தன்னுடைய முதலாளி வீட்டிற்காக உழைப்பதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர். தனக்காக ஒரு வலி வரும் போதுதான் அந்த அடிமைத்தனத்தின், அதிகாரத் திமிரின் அடக்கு முறையை உணர்கிறார். சசிகுமாரின் பேசப்படும் படமாக இப்படம் அமைகிறதோ இல்லையோ, ஆனால், பேசப்படும் கதாபாத்திரமாக அமையும்.
சசிகுமாரின் முதலாளியாக பாலாஜி சக்திவேல். அந்தக் காலத் தமிழ் சினிமாவிலிருந்தே இப்படியான முதலாளித்துவ கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அதே போன்றதொரு கதாபாத்திரத்தை மீண்டும் கண்முன் நிறுத்தியுள்ளார் பாலாஜி. சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி, குறைவான வாய்ப்பு என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் சரியாகவே நடித்திருக்கிறார்.
ஜிப்ரான் பின்னணி இசை, ஆர்வி சரண் ஒளிப்பதிவு ஆகியவை ஒரு சுமாரான படத்திற்கான அளளவிலேயே நின்றுவிடுகிறது. தொழில்நுட்ப ரீதியாக படத்தை இன்னும் ஒரு கட்டம் மேலே உயர்த்தியிருக்கலாம்.
இன்றும் நாட்டில் நடந்து வரும் சில சாதிய அவலங்களை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால், ரசிகர்களைக் கவரும் ஒரு சினிமாவாகக் கொடுப்பதை விட்டு விலகி ஒரு டாகுமென்டரி படத்தைப் பார்த்த திருப்தியையே தந்திருக்கிறார்.
Tags: nandhan, era saravanan, sasikumar