மெய்யழகன் - விமர்சனம்

27 Sep 2024

பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

‘96’ படத்திற்குப் பிறகு பிரேம்குமார் இயக்கியிருக்கும் படம். அந்தப் படத்தில் காதலைச் சொன்னார், இந்தப் படத்தில் பாசத்தைச் சொல்லியிருக்கிறார்.

பிழைப்பதற்காக அல்லது வேறு சில காரணங்களுக்காக பிறந்த ஊரை விட்டு வெளியூருக்குச் சென்றவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். சிலரால் அவர்களது ஊருக்கு அடிக்கடி போக முடியாத ஒரு சூழல் இருக்கும். என்றோ ஒரு நாள் மீண்டும் அந்த ஊருக்குப் போக ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது என்னென்ன ஞாபகங்களை அள்ளித் தரும் என்பதுதான் இந்தப் படம்.

தஞ்சாவூரில் இருக்கும், தங்களது பூர்வீக வீட்டை உறவுகளின் நெருக்கடியால் கொடுத்துவிட்டு, சென்னைக்கு இடம் பெயர்கிறது அரவிந்த்சாமியின் குடும்பம். அதன்பின் அந்த ஊர் பக்கமே அவரோ, அவரது பெற்றோரோ போகாமல் இருக்கிறார்கள். 22 வருடங்களுக்குப் பிறகு தன் ஒன்று விட்ட தங்கையின் திருமணத்திற்காக அங்கு போகிறார் அரவிந்த்சாமி. நீடாமங்கலத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்பவரை அவரது உறவினரான கார்த்தி வரவேற்று கூடவே இருந்து கவனித்துக் கொள்கிறார். கார்த்தி யார் என்பது அரவிந்த்சாமிக்கு நினைவுக்கு வராமல் போகிறது. இருந்தாலும் கார்த்தியுடனான பேச்சு அரவிந்த்சாமிக்கு தன் வாழ்க்கைப் பயணம் பற்றிய சில உண்மைகளைப் புரிய வைக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கதை.

சில உறவுகளை மீண்டும் ஒட்டவே வைக்க முடியாது, சில உறவுகளை விட்டு விலகியிருந்தாலும், அவை ஏதோ ஒரு விதத்தில் நம்மை உணர வைத்துவிடும். இந்தப் படத்தில் அன்பு, பாசம், உறவு, உணர்வு என மன ரீதியாக நமக்குள் என்னென்னமோ செய்ய வைத்துவிடுகிறார் இயக்குனர் பிரேம்குமார். பிரிந்து போன உறவுகளை மீண்டும் பார்த்து சேர்த்துக் கொள்ளலாமா என்று யோசிக்க வைத்துவிடுகிறார்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும், சென்னையில் செட்டிலாகி பல வருடங்கள் ஆனவர்களுக்கும் உறவுகளுக்கு இடையிலான பாசம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும் என்பது நமது கருத்து. இந்தப் படத்தின் அரவிந்த்சாமி கதாபாத்திரம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு கடமைக்காக தனது தங்கையின் திருமணத்திற்குப் போகிறார். ஆனால், போன பின்புதான் அந்த உறவுகளின் உன்னதம் என்ன என்பது அவருக்குப் புரிகிறது. அதை அவருக்குப் புரிய வைப்பவர் அவரது உறவினரான கார்த்தி.

முன்பின் தெரியாத கார்த்தி தன்னிடம் வந்து உரிமை எடுத்து பேசுவது, பழகுவது அரவிந்த்சாமிக்கு ஆரம்பத்தில் வெறுப்பைத் தருகிறது. பலரையும் சேர்த்து வைக்கும், பிரித்தும் வைக்கும் ‘பார்ட்டி’, அவர்கள் இருவரும் சேர்த்து வைக்கிறது. அது மட்டுமல்ல வாழ்க்கையின் தத்துவத்தை அரவிந்த்சாமிக்குப் புரியவும் வைக்கிறது.

வாயைத் திறந்தால் பேசுவதை நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கும் குணம் கொண்டவர் கார்த்தி. அரவிந்த்சாமியை முதன் முதலில் பார்த்த போது பேச ஆரம்பித்தவர், கடைசி வரை பேசிக் கொண்டே இருக்கிறார். அந்தப் பேச்சில்தான் எவ்வளவு விஷயங்கள். அதிகம் படிக்காதவர்களிடத்தில் பாசமும் உண்டு, பண்பும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் கார்த்தி. குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் இப்படி உழைப்பவர்கள் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும், அந்த ஊரும் சமூகமும் நன்றாக முன்னேறும். தனது சிறப்பான படங்கள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் பட்டியலில் கார்த்தி இந்தப் படத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கார்த்தியின் மனைவியாக ஸ்ரீதிவ்யா, தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கிறோம். அப்படியே தஞ்சாவூர்ப் பெண் போல இருக்கிறார். அரவிந்த்சாமியின் மாமாவாக ராஜ்கிரண். இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாமே என கேட்க வைக்கிறார். அரவிந்த்சாமியின் மனைவியாக தேவதர்ஷினி. அவரது தங்கையாக ஒரே ஒரு காட்சி என்றாலும் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் ஸ்வாதி.

தஞ்சாவூர், நீடாமங்கலம் என காவிரிக் கரையோரம் கரை புரண்டு ஓடுகிறது மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு. இரவுக் காட்சிகள்தான் படத்தில் அதிகம், அதிலும் ஒரு யதார்த்தம் ஓடுகிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், கமலின் குரலில் ஒலிக்கும் ‘யாரோ இவன் யாரோ’ பாடலும் உருக்கம்.

படத்தின் முதல் பாதி நகரும் விதம் தெரியாமல் வேகவேகமாகப் போய்விடுகிறது. அவ்வளவு உணர்வுக் குவியல்கள் அவற்றில் உள்ளன. ஆனால், இரண்டாம் பாதியில் கார்த்தியும், அரவிந்த்சாமியும் மட்டுமே அதிகம் பேசிக் கொண்டிருப்பதால் வேகம் தடைபடுகிறது.  இப்படியான சிற்சில குறைகள் ஆங்காங்கே தெரிந்தாலும் ஒரு ஊர்ப் பயணம் போன நிம்மதி, திருப்தி, புத்துணர்வு.


Tags: meiyazhagan, meiyazhagan review, premkumar, govind vasantha, karthi, aravindswamy

Share via: