ஹிட்லர் - விமர்சனம்

28 Sep 2024

தனா இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தமிழ் சினிமா எத்தனையோ புதிய கதைகளை நோக்கி போய்க் கொண்டிருக்க, பழைய டைப் கதை ஒன்றை வைத்து பொருத்தமில்லாத தலைப்புடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனா.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியின் பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் சரண்ராஜ் செய்த ஊழல் காரணமாக அவரது தோல்வி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டதாக இருக்கிறது. அதனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். அதற்காக அவரது ஆட்கள் மூலம் சில நூறு கோடிகளை பல விதங்களில் அனுப்பி வைக்கிறார். அந்தப் பணங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது, மேலும் சரண்ராஜின் ஆட்கள் சிலரும் கொல்லப்படுகிறார்கள். இதனிடையே, சென்னையில் ஒரு பாங்க்கில் வேலை பார்க்கும் விஜய் ஆண்டனி தான் அந்தக் கொள்ளையையும், கொலைகளையும் செய்திருப்பார் என சந்தேகப்படுகிறார் டெபுட கமிஷனரான கௌதம் மேனன். விஜய் ஆண்டனியை ஆதாரத்துடன் பிடிக்க முயற்சிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘ஹிட்லர்’ ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி என்று அழைக்கப்படுபவர். அந்தப் பெயரை இந்தப் படத்திற்கு எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை. அத்தலைப்பு கதாநாயகனைக் குறிக்கிறதா அல்லது வில்லனைக் குறிக்கிறதா என்றும் கேள்வி வருகிறது. விஜய் ஆண்டனி நியாயத்திற்காகப் போராடுபவர், வில்லன் அநியாயம் செய்பவர். சரி, படம் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பொதுவாக தனது படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடிப்பவர் எனப் பெயரெடுத்தவர் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தில் இடைவேளை வரை காதல் நாயகனாக வலம் வருகிறார். நாயகி ரியா சுமன் மீது காதல் கொண்டு துள்ளலான காதல் நடிப்பை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ரியா மீது வேண்டுமானால் அவருக்குக் காதல் வந்திருக்கலாம், ஆனால், காதல் நடிப்பில் ரியா தான் எளிதில் ஸ்கோர் செய்கிறார். ஓரிரு படங்களில் நடித்த ரியாவுக்கு ஏன் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது.

படத்தின் ஆரம்பத்தில் கொள்ளை நடக்கிறது, கொலை நடக்கிறது என்றதும் அதைச் செய்வது நாயகன் விஜய் ஆண்டனி தான் என்பதை படம் பார்க்கும் நம்மால் யூகித்துவிட முடியும். அதற்கான காரணமாக அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் நமக்கான எதிர்பார்ப்பாக இருக்கும். அந்தக் காரணம் அழுத்தமாகவே இருந்தாலும், இது போன்ற சில படங்களைப் பார்த்த ஞாபகமும் வந்து போகிறது. குறிப்பாக அஜித் நடித்து வெளிவந்த ‘சிட்டிசன்’ படத்தின் கதையும் இப்படித்தான் இருக்கும். காதலில் தடுமாற வைத்தாலும் ஆக்ஷனில் சமாளிக்கிறார் விஜய் ஆண்டனி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக சரண் ராஜ். அவருக்கான அதே பழைய பின்னணிக் குரலை வைக்காமல் மாற்றியுள்ளார்கள். வழக்கமான வில்லன்தான். கௌதம் மேனன் படத்தில் இருப்பதால் ஏதாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பு வருவது சகஜம்தான். சரண்ராஜ் தம்பியாக தமிழ், இவர்தான் அண்ணனை விடவும் அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். படத்தில் சில காட்சிகளில் வந்து செல்பவர்களாக ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் இருக்கிறார்கள்.

பாடல்கள் திடீர் திடீரென வந்து போகிறது. ஆக்ஷன் கதையில் இவ்வளவு காதலும், பாடல்களும் தேவையா ?. படத்தின் ஆரம்பக் காட்சியான அந்த மலைப் பிரதேச வெள்ளக் காட்சி நமக்கு பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. அதனுடன் சேர்த்து மற்ற காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் தன் வேலைக்கு நியாயமாக இருந்திருக்கிறார்.

90களின் கதையாக இருந்தாலும் பரவாயில்லை, கொஞ்சம் கருத்து சொல்லும் ஒரு பொழுதுபோக்குப் படத்தைப் பார்க்கத் தயார் என்ற சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இந்தப் படம் பிடிக்கும்.

Tags: hitler, vijay antony

Share via: