தில் ராஜா - விமர்சனம்

28 Sep 2024

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில், விஜய் சத்யா, ஷெரின், ஏ வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர் விஜய் சத்யா, மனைவி ஷெரின், ஒரே மகள் என அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது. மனைவி, குழந்தையுடன் ஒரு நாள் வெளியில் சென்று விட்டு வீடு திரும்புகையில் அவர்களுக்கு முன்னால் காரை ஓட்டிச் சென்ற அமைச்சர் ஏ வெங்கடேஷின் மகன், அவனது நண்பர்கள் ஷெரினிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள். அப்போது நடக்கும் துரத்தல் சண்டையில் அமைச்சர் மகனை, விஜய் சத்யா கொன்றுவிடுகிறார். அமைச்சரின் ஆட்கள் ஒரு பக்கம் விஜய் சத்யாவைத் துரத்த, காவல் துறை அதிகாரியான சம்யுக்தாவின் கொலையாளியைத் தேடி விசாரணையில் இறங்க விஜய் சத்யா சிக்கினாரா, தப்பித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விஜய், சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்த சில பக்கா கமர்ஷியல் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஏ வெங்கடேஷ், இந்தப் படத்தை ஒரு க்ரைம் த்ரில்லர் கதையாகக் கொடுத்திருக்கிறார்.

படத்தின் நாயகன் விஜய் சத்யா, உயரமாகவும், வாட்ட, சாட்டமாகவும் இருக்கிறார். ஆக்ஷன் நாயகனாக வலம் வரலாம். இப்படத்தில் தவிப்பை மட்டுமே காட்டியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி ஆகியவற்றுடன் நடிப்பு என்றால் என்ன என்பதை நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். சினிமாவில் நிலைத்து நிற்க பலம் மட்டும் போதாது, நடிப்பும் வேண்டும்.

விஜய் சத்யாவின் மனைவியாக ஷெரின். தமிழ் சினிமாவில் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அவருக்காக ஒரு பாடலையும் வைத்திருக்கிறார். கணவன், மனைவியாகி குழந்தைக்குப் பெற்றோராக இருந்தாலும் டூயட் பாடல் வைப்பது தமிழ் சினிமாவில் விதிவிலக்கல்ல.

அதிகாரம் படைத்த அமைச்சர் கதாபாத்திரம் என்றால் வில்லத்தனமாக நடிப்பது எளிது. இயக்குனர் ஏ வெங்கடேஷுக்கு இயக்கத்தோடு நடிப்பு அனுபவமும் இருப்பதால் தனது கதாபாத்திரத்தில் நிறைவாகவே நடித்திருக்கிறார்.

உதவி கமிஷனராக சம்யுக்தா. போகிறார், வருகிறார், நடக்கிறார், ஏதோ கொஞ்சமாக விசாரிக்கிறார். அவருக்கு உதவியாக சிலர் என சீரியல் போலீஸ் குழுவினர் போல நடித்திருக்கிறார்கள்.

அம்ரிஷ் இசையில் படத்தின் ஆரம்பப் பாடலான ‘டான்ஸு வேணுமா’  குத்துப் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் அதிரடி காட்டி உருட்டி எடுக்கிறார்.

படத்தின் நீளம் குறைவு என்பதால் வேகமாக நகர்ந்துவிடுகிறது. படம் முடிந்த பின்பு ஏ வெங்கடேஷ் படமா இது என்று சில காட்சிகள் யோசிக்க வைக்கிறது. மேக்கிங்கில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம்.

Tags: dhil raja, a venkatesh, vijay sathya, sherin

Share via: