சட்டம் என் கையில் - விமர்சனம்

28 Sep 2024

சாச்சி இயக்கத்தில், ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைப்பில், சதீஷ், அஜய் ராஜ், பாவல் நவகீதன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சினிமா என்பது நடிகர்களுக்கானது மட்டுமல்ல, கதைக்கானதும் கூட என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ஒரு படம். ஒரு த்ரில்லர் கதையை முடிந்தவரையில் விறுவிறுப்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சாச்சி.

ஏற்காடு மலையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஒரே இரவில் நடக்கும் கதை. ஏதோ ஒரு பதட்டத்துடன் மலையில் காரை ஓட்டிச் செல்கிறார் சதீஷ். வழியில் குறுக்கே பைக்கில் வந்த ஒருவர் மீது அவர் கார் மோத, பைக்கில் வந்தவர் இறந்து போகிறார். அந்தப் பிணத்தை கார் டிக்கியில் போட்டுவிட்டு தொடர்ந்து பயணிக்கிறார். வழியில் போலீஸ் சோதனையில் துணை உதவி ஆய்வாளரான பாவல் நவகீதன் சதீஷை சோதனையிடுகிறார். அப்போது திடீரென பாவலை அடித்துவிடுகிறார் சதீஷ். கோபமடையும் பாவல், சதீஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார். அதே சமயத்தில் ஒரு பெண் கொல்லப்பட்ட சடலம் பற்றி தெரிய வருகிறது. அது பற்றிய விசாரணையை உதவி ஆய்வாளரான அஜய்ராஜ் விசாரிக்க ஆரம்பிக்கிறார். சதீஷ் காரை ஏற்றிக் கொன்றவர், காணாமல் போய்விட்ட ஒருவர் என்ற தகவலும் போலீஸாருக்கக் கிடைக்கிறது. இந்த மூன்று வழக்குகளின் விசாரணை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் மூன்று கதாநாயகர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். சதீஷ், அஜய்ராஜ், பாவல் நவகீதன். மலையாளத் திரைப்படங்களில் இப்படியான வளரும் நடிகர்களை வைத்து சில த்ரில்லர் படங்கள் வந்துள்ளன. மற்ற முன்னணி நடிகர்களின் படங்களை விட இப்படியான படங்கள் நன்றாகவே இருக்கும். ஓடிடியில் இப்படியான படங்களைப் பார்ப்பவர்கள் அதிகம். அப்படியான ஒரு மலையாளப் படத்தைப் பார்த்த திருப்தி இந்தப் படத்தைப் பார்த்த போது வருகிறது.

சதீஷ் ஓட்டி வந்த கார், போலீஸ் நிலைய வாசலில் நிற்க, அந்தக் காரில் பிணமாக இருப்பவர் காணாமல் போன ஒருவர் என போலீசார் கண்டுபிடிக்க, அதைப் பற்றித் தெரிந்ததும் மிகவும் பதட்டப்படுகிறார் சதீஷ். தான் ஏற்படுத்திய விபத்து பற்றி போலீசார் தெரிந்து கொள்ளக் கூடாதென அதற்காக அவர் செய்யும் விஷயங்கள் ஒவ்வொன்றுமே பரபரப்பானவை எதிர்பாராதவை.

தனது விசாரணையை நிதானமாக, பொறுமையாக நடத்துபவர் அஜய்ராஜ். துணை உதவி ஆய்வாளரான பாவல் நவகீதனை நன்றாகவே வெறுப்பேற்றுகிறார். எதிலும் ஒரு அதிரடியைக் காட்டுபவராக பாவல். யாரையும் மதிக்காத குணம் கொண்டவர். சதீஷ் ஒரு குற்றவாளி என ஆரம்பத்திலிருந்தே சொல்பவர். இவர்களிருவது கதாபாத்திரமும் ‘ஒருவரைப் பார்ப்பதால் வரும் நம்பிக்கை’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. அதிரடியாக இருப்பவர் கெட்டவருமல்ல, அமைதியாக இருப்பவர் நல்லவருமல்ல என்பதற்கான உதாரணங்கள்.

இன்ஸ்பெக்டராக கிளைமாக்சில் மட்டுமே வருகிறார் மைம் கோபி. சக காவலர்களாக ராமதாஸ், பவா செல்லதுரை, கேபிஒய் சதீஷ் நடித்திருக்கிறார்கள்.

த்ரில்லர் கதை, அதிலும் ஒரே இரவில் நடக்கும் கதை, மலைப் பிரதேசம் இப்படி தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்ய ஒளிப்பதிவாளருக்கு நல்ல வாய்ப்பு. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் பிஜி முத்தையா. தேவையான இடங்களில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட்.

படத்தின் இடைவேளை வரை அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸுடன் நகர்கிறது படம். இடைவேளைக்குப் பின்பு அந்த சஸ்பென்ஸ் ஒவ்வொன்றாக தெரிய வருவது சுவாரசியத்தைக் குறைக்கிறது. சில காட்சிகளில் நாடகத்தனம் லேசாக எட்டிப் பார்க்கிறது. ஒரு புத்திசாலித்தனத்துடன் நகரும் திரைக்கதை கிளைமாக்ஸில் வேறு வழியில்லாமல் முடித்தாக வேண்டும் என முடித்தது போல உள்ளது. இருந்தாலும் ஒரு சராசரி திரில்லர் படத்தைப் பார்த்த திருப்தி வருகிறது.

Tags: sattam en kaiyil

Share via: