நீல நிறச் சூரியன் - விமர்சனம்

04 Oct 2024

சம்யுக்தா விஜயன் இயக்கத்தில், ஸ்டீவ் பெஞ்சமின் இசையமைப்பில், சம்யுக்தா விஜயன், கஜராஜ், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

மூன்றாம் பாலினத்தவர் என அழைக்கப்படும் திருநங்கையர் அவர்களை பெண்ணாக பாவித்துக் கொண்டாலும் இந்த சமூகம் அவர்களை திருநங்கை என்றே அழைக்கிறது. அப்படி மாறிய ஒருவர் தன்னை பெண்ணாக இந்த சமூகத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிகிறார் அரவிந்த். அவருக்கு சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெண் என்ற உணர்வே இருக்கிறது. அதனால், பெண்ணாக மாறுவதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். சரியான ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை பெண்ணாக அடையாளம் காட்டிக் கொண்டு புடவை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார். அவரை அவரது குடும்பத்தினரும், பள்ளியில் உள்ளவர்களும் பெண்ணாக ஏற்க மறுக்கிறார்கள். அதன்பின் அவருக்கு எப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த ‘நீல நிறச் சூரியன்’.

படத்தை இணைந்து தயாரித்து இயக்கி அரவிந்த் என்ற ஆணாகவும், பானு என்ற பெண்ணாகவும் நடித்திருக்கிறார் சம்யுக்தா விஜயன். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான நடிப்பில் மிகவும் கவனத்துடன் நடித்திருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இரண்டு விதமான தோற்ற கதாபாத்திரங்களுக்கு இடையில் எந்த தவறான புரிதலும் வராதபடி அந்தக் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டுக்குமான உடல் மொழி, நடை, உடை, பாவனை என அனைத்திலும் தன்னை ஒரு தேர்ந்த நடிப்பாளராகக் காட்டிக் கொண்டிருக்கிறார் சம்யுக்தா. அறிமுகப் படத்திலேயே இப்படி ஒரு ‘ரிஸ்க்’ எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

படத்தில் நிறைய சிறிய கதாபாத்திரங்கள் இருந்தாலும் சம்யுக்தாவின் தோழியாக சக ஆசிரியையாக நடித்திருக்கும் ஹரிதா அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். ஒருவரது மனதிற்கும், மாற்றத்திற்கும் நட்பு என்பது எவ்வளவு அவசியமானது என்பதை இந்தக் கதாபாத்திரம் உணர்த்துகிறது.

சம்யுக்தாவின் அப்பாவாக கஜராஜ், அம்மாவாக கீதா கைலாசம், சித்தப்பாவாக பிரசன்னா பாலசந்திரன் ஆகியோரது நடிப்பும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

படம் முழுவதும் உணர்வுபூர்வமான காட்சிகள் அடிக்கடி வந்து போகின்றன. குறிப்பாக சம்யுக்தாவும், அவரது அம்மாவும் பேசிக் கொள்ளும் காட்சி, சம்யுக்தா விரும்பும் ஒரு ஆசிரியரை சந்தித்துப் பேசும் காட்சி, சம்யுக்தாவும் பிரின்சிபாலும் சந்தித்துப் பேசும் காட்சி, சம்யுக்தாவை சக ஆசிரியைகள் அவர்களது கழிவறையை பயன்படுத்திக் கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி என சொல்லிக் கொண்டே போகலாம்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என மூன்றையும் ஸ்டீவ் பெஞ்சமின் என்ற ஒருவரே செய்திருக்கிறார். அனைத்துமே படத்திற்கத் தேவையான அளவில் மிகவும் கச்சிதமாய் அமைந்துள்ளது. குறிப்பாக லைட்டிங்கில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். இப்படத்தின் ரசனைக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், அதன் உருவாக்கமும் மிகவும் தரமாய் அமைந்துள்ளது.

எத்தனையோ வாழ்வியல் படங்களை தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம், இந்த ‘பானு’வின் வாழ்வியல் இதுவரை பார்க்காத ஒன்று.

Tags: neela nira sooriyan, samyuktha vijayan

Share via: