ஆரகன் - விமர்சனம்

04 Oct 2024

அருண் கேஆர் இயக்கத்தில், விவேக், ஜெஸ்வந்த் இசையமைப்பில், மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா மனோகரன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சரித்திரம், உளவியல், காதல் என ஒரு வித்தியாசமான திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்.

மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா இருவரும் காதலர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் மலைப் பிரதேசம் ஒன்றில் தனியாக இருக்கும் ஸ்ரீரஞ்சனியைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்குச் செல்கிறார் கவிப்ரியா. சில மாதங்கள் மட்டும் வேலை செய்யும் ஒப்பந்தத்தில் சென்ற கவிப்ரியாவிடம் ஸ்ரீரஞ்சனி மிகவும் பாசமாகப் பழகுகிறார். ஆனாலும், வெளி உலகுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத சூழலில் சிக்கிக் கொள்கிறார் கவிப்ரியா. சிக்னல் கிடைக்காததால் காதலன் மைக்கேலுடன் எப்போதாவது ஒரு முறைதான் பேசும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள ஒரு மர்மம் கவிப்ரியாவுக்குத் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன், வில்லன் இரண்டுமே மைக்கேல் தங்கதுரை தான். ஆரம்பத்தில் அன்பான காதலனாக மனதில் இடம் பிடிக்கிறார். அதன்பின் கிளைமாக்ஸ் முன்பாகத்தான் மீண்டும் வருகிறார். அவர்தான் படத்தின் வில்லன் என்பது நமக்கு எதிர்பாராத அதிர்ச்சி. அந்த சஸ்பென்ஸை சொல்லிவிட்டால் சரியாக இருக்காது.

இப்படத்தை கதாநாயகின் படம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு படத்தைத் தன் இயல்பான நடிப்பால் தாங்கியுள்ளார் கவிப்ரியா. தங்களது எதிர்கால வாழ்க்கைக்காக அதிக சம்பளம் கிடைக்கிறது என்ற ஆசையில் ஸ்ரீரஞ்சனியைப் பார்த்துக் கொள்ள வேலைக்குச் செல்கிறார். ஆனால், அங்கு அவர் எதிர்கொள்ளும் விஷங்கள் ஒவ்வொன்றுமே நாம் சிறிதும் எதிர்பாராதவை. அவரால் தன்னுடைய முகத்தைக் கூட கண்ணாடியில் பார்த்துக் கொள்ள முடியாத சூழல். அந்த வீட்டில் கண்ணாடி கூட கிடையாது. அந்த வீட்டிற்குத் தேவையானவை எப்படி வருகிறது என்பதும் புரியாத புதிராகவே உள்ள கவிப்ரியாவுக்கு. இப்படியெல்லாம் ஒருவர் தனிமையில் நிஜமாகவே மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும் என நம்மையும் கற்பனை செய்ய வைக்கிறது கவிப்ரியாவின் நடிப்பு.

புரியாத புதிராக அமைக்கப்பட்டுள்ளது ஸ்ரீரஞ்சனியின் கதாபாத்திரம். மலையில் ஒதுக்குப்புறமான வீட்டில் அவர் தனிமையில் எப்படி இருக்கிறார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் அழைத்தால் சிலர் வந்து போகிறார்கள். எந்த ஒரு பயமும் இல்லாமல் அவர் அந்த வீட்டில் வசிப்பதும் ஆச்சரியமாக உள்ளது. கற்பனைக்கெட்டாத ஒரு கதாபாத்திரத்தில் ஸ்ரீரஞ்சனியின் நடிப்பும் மிரள வைத்துள்ளது.

மலைப்பிரதேசம் என்றாலே ஒளிப்பதிவாளருக்கு விதவிதமாக படமாக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதைச் சரியாகவே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி. விவேக் ஜெஷ்வந்த் பின்னணி இசை பல காட்சிகளில் வசனங்களை அமுக்கி விடுகிறது.

சரித்திர காலம், இறவாத வரம், அதன் தொடர்ச்சியாக இந்தக் காலம் என மாறுபட்ட கதையை யோசித்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சாதாரண ரசிகர்களுக்கும், இன்னும்  புரியும்படி எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Tags: aaragan, michael thangadurai, kavipriya

Share via: