வேட்டையன் - விமர்சனம்

10 Oct 2024

தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இன்றைய கல்வி நிலைக்குத் தேவையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஞானேவல். நீட் என்ற ஒரே ஒரு தேர்வு ஏழை மாணவர்களை வஞ்சித்து, பணம் இருக்கிறவர்கள் மட்டுமே படித்து எழுதும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அதன் பின்னணியில் எத்தனை ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கிறது என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். மாணவர்களின் கல்வியை, எதிர்காலத்தை வியாபாரமாய் ஆக்கிவிட்டார்களே என்ற கோபம் படம் பார்க்கும் நமக்கும் வருகிறது.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த். கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக இருக்கிறார். கஞ்சா கடத்தல் கும்பல் ஒன்றைப் பற்றித் தகவல் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் திடீரென கொல்லப்படுகிறார். அவரது கொலையைப் பற்றி விசாரணை நடத்தும் போலீஸ் குழுவின் தாமதம் காரணமாக ரஜினிகாந்த்திற்கு அந்த வழக்கின் விசாரணை வழங்கப்படுகிறது. துஷாராவைக் கொன்ற கொலைகாரனை இரண்டே நாட்களில் கண்டுபிடித்து என்கவுன்டர் செய்கிறார். ஆனால், அவர் குற்றவாளி அல்ல நிரபராதி என்கிறார் மனித உரிமை ஆணைய நீதிபதி அமிதாப்பச்சன். தனது விசாரணையில் தவறா என அதிர்ச்சியடையும் ரஜினிகாந்த், உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார். அந்தக் குற்றவாளியைக் கண்டுபிடித்தாரா, தன் மீதான களங்கத்தைத் துடைத்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ரஜினிக்கு புதிதல்ல. எத்தனையோ படங்களில் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார், இந்தப் படத்திலும் அப்படியே. இத்தனை வயதிலும் அவரது வேகம், துடிப்பு குறையாமல் ரசிகர்களைக் கவரும் விதத்தில் நடித்திருக்கிறார். ‘குறி வச்சா இரை விழணும்’, என்ற ஒரே பன்ச் ரசிகர்களைக் கைத்தட்ட வைக்கிறது. இன்னும் சில மாஸ் சீன்களில் அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

மனித உரிமை ஆணைய நீதிபதியாக அமிதாப்பச்சன். தமிழில் அவர் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம். அப்படி ஒரு மதிப்பு மிக்க கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் மேலும் மதிப்பு கூட்டுகிறார் அமிதாப். படத்தின் கலகலப்புக்கு முக்கிய காரணம் பகத் பாசில். போலீஸ் அதிகாரி ரஜினிக்கே உதவும் ஒரு அறிவார்ந்த முன்னாள் திருடன். புதிய போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங், ஆசிரியையாக துஷாரா விஜயன், ரஜினி மனைவியாக மஞ்சு வாரியர், டிஐஜி ஆக ராவ் ரமேஷ் என மற்ற கதாபாத்திரங்களுக்கும் அவ்வப்போது முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கார்ப்பரேட் வில்லனாக ராணா டகுபட்டி.

ரஜினி படம் என்றாலே தனித்துவமான இசையைக் கொடுத்துவிடுவார் அனிருத். கதிர் ஒளிப்பதிவு படத்திற்கேற்றபடி கச்சிதமாய் அமைந்துள்ளது. ரஜினியின் சண்டைக் காட்சிகள் வழக்கம் போலவே அசத்தல்.

இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை நகர்வு மட்டும் இன்னும் விறுவிறுப்பாய் அமைந்திருக்கலாம். ராணா கதாபாத்திரம் வழக்கமான வில்லனாக அமைக்கப்பட்டிருப்பதும் கொஞ்சம் குறைதான்.

கல்வி வியாபாரம் பற்றிய முக்கியமான படம், ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர்கள் அதில் நடிப்பதால் அந்தப் பிரச்சனை ரசிகர்களிடம் சரியாகப் போய்ச் சேரும். இப்படி ஒரு கதையில் ரஜினியை நடிக்க வைத்ததற்கே இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

Tags: vettaiyan, rajinikanth, anirudh, tj gnanavel,. amitabbhachchan

Share via: