பிளாக் - விமர்சனம்

11 Oct 2024

கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜீவா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

புதிய கதைகளையும், புதிய காட்சிகளையும் எதிர்பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு மாறுபட்ட ரசனையைக் கொடுக்கும். இப்படி ஒரு சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் கதை தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தை விறுவிறுப்பாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ‘கோஹரன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்குத் தகுந்தபடி மாற்றியிருக்கிறார்கள்.

கணவன், மனைவியான ஜீவா, பிரியா பவானி  தாங்கள் புதிதாக வாங்கிய கடற்கரை வில்லா ஒன்றில் சில நாட்கள் தங்குவதற்காகச் செல்கிறார்கள். நிறைய வீடுகள் உள்ள அந்த குடியிருப்பில் இவர்கள்தான் முதலில் குடி போகிறார்கள். அவர்கள் தங்கும் முதல் நாள் இரவில் இருந்தே மர்மமான சில சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. அங்கு இவர்களைத் தவிர வேறு யாரோ சிலர் இருப்பதாக உணர்கிறார்கள். எதிர் வீட்டில் விளக்குகள் எரிய அங்கு சென்று பார்த்தால் இவர்களைப் போலவே மற்றொரு ஜீவா, பிரியா பவானி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். தங்களைப் போலவே மற்றொருவர் எப்படி, என்பதற்கான விடையைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறார் ஜீவா. இந்தப் படம் அவருக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையைக் கொடுக்கும். படத்தில் முக்கியமாக இரண்டே கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை ஜீவா மட்டுமே எடுப்பதால் அவருக்கான அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அந்த பதட்டத்தையும், கூடவே என்ன செய்ய வேண்டும் என்ற யோசனைனையும் சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார்.

பிரியா பவானியும் ஜீவாவுக்கு பலமாக இருந்து ஒத்துழைப்பு தந்திருக்கிறார். இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை ஆரம்பத்திலேயே காட்டிவிட்டதால், அவர்கள் மீதான தவிப்பும் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

படத்தின் ஆரம்ப கட்டத்தில் 1964ல் நடப்பது போல ஒரு குட்டிக் கதை இடம் பெறுகிறது. அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்ற உணர்வு. அதில் விவேக் பிரசன்னா கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார். ஜீவாவின் நண்பராக ஷரா, இன்ஸ்பெக்டர் யோக் ஜபி ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.

படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட அந்த வில்லா குடியிருப்புப் பகுதி அற்புதமான தேர்வு. அதிலும் ஏரியல் ஷாட்டில் அதைப் பார்க்கும் போதே ஒருவித பயம் வந்துவிடுகிறது. ஒரு இரவு நேரத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த ஒரே மாதிரியான குடியிருப்புகளைக் கூட விதவிதமான கோணத்தில், அற்புதமான லைட்டிங்கில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய். எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் கவனமாக எடிட் செய்திருக்கிறார் எடிட்டர் பிலோமின் ராஜ். பின்னணி இசையில் தனது முந்தைய படங்களை விடவும் இந்தப் படத்தில் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் சாம் சிஎஸ். படத்தில் பாடல்களே தேவையில்லை. ஆரம்பத்தில் வரும் அந்தப் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்கள்தான்.

ஆரம்பத்தில் பார் ஒன்றில் ஒரு இளைஞருடன் ஜீவா தகராறு செய்வதும், அதன் தொடர்ச்சியாக மறுநாளும் நடக்கும் சண்டையும் இப்படத்திற்குத் தேவையில்லாதவை.

சராசரி ரசிகர்களுக்கு கிளைமாக்சில் கொஞ்சம் குழப்பம் வந்தாலும் இரண்டாவது முறை பார்த்தால் அது என்ன என்பது புரிந்துவிடும். டைம் மிஷின், டைம் லூப், பாரலல் உலகம் என ஹாலிவுட்டில் சில பல படங்களையும் தமிழில் ஓரிரு படங்களையும் பார்த்து ரசித்த நமக்கு, ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்தப் படத்தைக் கொடுத்த இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

Tags: black, jeeva, priya bhavani shankar, sam cs

Share via: