ஆர்யமாலா – விமர்சனம்

19 Oct 2024

ஆர்எஸ் விஜயபாலா இணை இயக்கத்தில், செல்வநம்பி இசையமைப்பில், ஆர்எஸ் கார்த்திக், மனிஷாஜித், எலிசெபெத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

1980களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.  கடலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் இருக்கும் மனிஷாஜித்துக்கு கனவில் வரும் கதாநாயகன் ஆர்எஸ் கார்த்திக். கனவு கலைந்தாலும் அவர் மீதான காதல் கலையாமல் தொடர்கிறது. தெருக்கூத்து கலைஞரான கார்த்திக் மனிஷாவின் ஊருக்கு தெருக்கூத்திற்காக வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் கண்டதும் காதல் பார்வையைத் தொடர்கிறார் மனிஷா. அவரது காதலைப் புரிந்து கொண்ட கார்த்திக், மனிஷாவிடம் காதலைச் சொல்கிறார். இருந்தாலும் அந்தக் காதலை ஏற்காமல் கார்த்திக்கையும் அவமானப்படுத்துகிறார் மனிஷா. அதற்கான காரணம் புரியாமல் தவிக்கிறார் கார்த்திக். கனவில் ஆரம்பமாகி, நிஜத்தில் பயணித்த காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இதுவரையில் ஓரிரு படங்களில் நாயகனாக நடித்துள்ள கார்த்திக் இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்தவர். இந்தப் படத்திலும் அப்படியே நடித்திருக்கிறார். இடைவேளை நெருக்கத்தில்தான் அவர் வந்தாலும் அதன் பிறகான காட்சிகளில் அவருடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தெருக்கூத்தில் அந்தக் கலைஞராகவே மாறி நடித்திருக்கிறார்.

கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார் மனிஷா. கனவில் நினைத்தவனை காதலித்து ஏங்குவதும், நேரில் வந்தவனை பார்வையாலே காதலிப்பதும் என அவர் கதாபாத்திரத்தில் நிறைவாய் நடித்திருக்கிறார்.

நாயகியின் தாய்மாமனாக ஜேம்ஸ் யுவன். புதிது புதிதாக சில வில்லன் நடிகர்கள் வந்தாலும் ஒரு சிலர்தான் யதார்த்தமான நடிப்பில் யார் இவர் எனக் கேட்க வைக்கிறார்கள். அப்படி கேட்க வைத்துள்ளார் ஜேம்ஸ் யுவன். மற்ற கதாபாத்திரங்களில் மாரிமுத்து, எலிசெபத், சிவசங்கர், தவசி, மணிமேகலை ஆகியோர் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

கிராமத்துக் கதைகளில் ஒளிப்பதிவாளருக்கு நிறைய வேலை இருக்கும். அழகியலும், யதார்த்தமும் கலந்த ஒளிப்பதிவை ஜெய்சங்கர் ராமலிங்கம் கொடுத்திருக்கிறார். செல்வநம்பியின் இசையில் பாடல்கள் 80களின் ரசனையைத் தந்திருக்கிறது.

பெண்களின் காதலை வெளிப்படுத்தும் படங்கள் அதிகம் வருவதில்லை. அவர்களது பார்வையில் இந்தக் காதலை திரைக்கதை, வசனம், இணை இயக்கத்துடன் கொடுத்திருக்கிறார் ஆர்எஸ் விஜயபாலா. அதே சமயம் மருத்துவம் சார்ந்த ஒரு கதை என்பதால் அதற்கேற்ற ஒரு விழிப்புணர்வு தரும் விதத்தில் சொல்லியிருக்க வேண்டும்.

Tags: aaryamala, rs karthik, manishajith

Share via: