சார் – விமர்சனம்
19 Oct 2024
போஸ் வெங்கட் இயக்கத்தில், சித்து குமார் இசையமைப்பில், விமல், சாயா தேவி, சரவணன், சிராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
அனைவரும் கல்வி கற்க வேண்டும் என பாடுபடும் ஒரு குடும்பத்தின் கதை. ஒடுக்கப்பட்ட மக்களை மேம்பட்ட மக்களாக மாற்ற கல்வி ஒன்றுதான் சிறந்த வழி என பாடுபடும் அந்தக் குடும்பம், அதற்காக சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.
மாங்கொல்லை என்ற கிராமத்தில் 1980களில் நடக்கும் கதை. உயர்சாதி மக்களால் கடவுள் பெயரைச் சொல்லி அந்த ஊரில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை இடிக்க நினைக்கிறார்கள். தனது அப்பா ஆரம்பித்த அந்தப் பள்ளியை வளர்த்த சரவணன் தொடர்ந்து அவருடைய மகன் விமலும் அதை மேலும் வளர்க்க ஆசைப்படுகிறார். முதலில் பொறுப்பில்லாமல் இருக்கும் விமல் அதன்பின் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
தாத்தா, மகன், பேரன் என ஒரே குடும்பம் அந்த ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக தங்கள் குடும்பம் எப்படிப் போனாலும் பரவாயில்லை என லட்சியத்துடன் இருக்கிறது. 1960களில் சாதி வெறி பிடித்தவர்களின் எதிர்ப்பையும் தனது அப்பா ஆரம்பித்த தொடக்கப்பள்ளியை, தனது காலத்தில் நடுநிலைப்பள்ளியாக மாற்றுகிறார் சரவணன். அவரது ஓய்வுக்குப் பின் மகன் விமல் அதை உயர்நிலைப் பள்ளியாக மாற்றத் துடிக்கிறார்.
அப்பா, அம்மாவுக்குப் பிறகு தெய்வத்திற்கும் மேலாக ஆசிரியர் தான் இருக்கிறார் என படத்திலும் வரும் வசனம் இந்தப் படத்தின் கதையை ஒரே வரியில் சொல்லிவிடுகிறது. இன்றும் ஊருக்கெல்லாம் கல்வி கொடுத்து அவர்களை மேன்மைப்படுத்த பல நல்லாசிரியர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியராக சரவணன், விமல் நிறைவாக நடித்திருக்கிறார்கள். குணச்சித்திர நடிகராக மாறிய பின் சரவணன் நடித்து வெளிவந்த படங்களில் இந்தக் கதாபாத்திரம் தான் அவருக்கு பெருமை தரக்கூடிய ஒரு கதாபாத்திரம்.
படத்தின் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுப்பில்லாமல் தனது பள்ளியில் புதிதாக வந்த ஆசிரியை சாயா தேவி மீது காதல் கொண்டு சுற்றி வருகிறார் விமல். அதன் பின்புதான் அவருடைய அப்பாவின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என களத்தில் இறங்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விமலுக்குப் பேர் சொல்லும் ஒரு படம்.
படத்தின் முக்கிய வில்லனாக படத்தின் தயாரிப்பாளர் சிராஜ். ஊரில் சாதித் திமிருடன் சுற்றித் திரியும் இளைஞன் கதாபாத்திரத்தில் யதார்த்தமாய் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடிக்கும் அளவிற்கான நடிப்புத் திறமையை வைத்திருப்பார் போலிருக்கிறது. யதார்த்த நடிகர்களைத் தேடும் இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்புகளைத் தரலாம்.
விமல் பள்ளிக்குப் புதிதாக வேலைக்கு வரும் ஆசிரியையாக சாயா தேவி. நம்ம ஊர் தோற்றம் அவரது கதாபாத்திரத்தில் இயல்பாய் அமைந்துவிடுகிறது. விமலின் அம்மாவாக வழக்கம் போல யதார்த்த நடிப்பில் கவர்கிறார் ரமா.
அந்தந்த கால கட்டங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் விதத்தில் ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ ஹரிஷ் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது. பின்னணி இசையிலும் சித்து குமார் ரசிக்க வைக்கிறார்.
சமீப காலங்களில் கல்வியின் சிறப்பை இந்த அளவிற்கு வேறு எந்தப் படமும் வெளிப்படுத்தியதில்லை. கிராமங்கள், கிராம மக்களின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பது இந்தக் காலத்திலும் அனைவருக்கும் இம்மாதிரியான படங்கள் மூலம் புரிய வைக்க வேண்டி உள்ளது.
Tags: sir, bose venkat, vimal