ஆலன் – விமர்சனம்

20 Oct 2024

சிவா இயக்கத்தில், மனோஜ் கிருஷ்ணா இசையமைப்பில், வெற்றி, மதுரா, அனு சித்தாரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தனக்கு எதில் விருப்பமோ அதை நிறைவேற்ற என்னென்ன முயற்சி எடுக்க வேண்டுமோ அதை எடுங்கள். எத்தனை தடை வந்தாலும் அதை எதிர்த்து முன்னேறப் பாருங்கள் என்பதைச் சொல்லியிருக்கும் படம். அதை ஆன்மிகம் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

தனது குடும்பத்தினரை சிறுவயதில் விபத்தொன்றில் இழந்தவர் நாயகன் வெற்றி. அதன்பின் காசிக்குச் சென்றுவிடுகிறார். அங்கு ஹரிஷ் பெரடி நடத்தும் ஆன்மிக குருகுலத்தில் சேர்ந்துவிடுகிறார். இளைஞனான பின் அவருக்குப் பிடித்தமான எழுத்துப் பணியை போய் செய் என்கிறார் குரு ஹரிஷ். அதற்காக சென்னைக்குச் செல்கிறார். வழியில் நாயகி மதுராவை சந்தித்த பின் அவரும் காதலில் சிக்குகிறார். திருமணம் செய்து கொள்ள நினைக்கும் போது மதுரா விபத்தில் இறந்து போகிறார். அதனால், மீண்டும் வட இந்தியா சென்று ஆன்மிகப் பயணத்தைத் தொடர்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு அவரது குரு ஹரிஷ் பெரடியை மீண்டும் சந்திக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே ஒரு பாவமான முகத்துடனேயே இருப்பவர் வெற்றி. இந்தப் படத்தில் ஆன்மிகத்தில் மூழ்கி ஒரு இளம் சாமியாராகவே வலம் வருகிறார். தாடி, மீசை ஆகியவை அந்தக் கால மேக்கப் போல ஒட்டு என்பது பளிச்செனத் தெரிகிறது. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வெற்றியின் நடிப்பில் அவ்வளவு குறையில்லை.

கொஞ்ச நேரமே வந்தாலும் யார் இவர் எனக் கேட்க வைக்கிறார் மதுரா. ஜெர்மனியைச் சேர்ந்தவராம். ஏற்கெனவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது கூகுள் செய்த பின்புதான் தெரிகிறது. படத்தின் கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் வருகிறார் மற்றொரு நாயகியான அனு சித்தாரா. ஒரு நிறைவான கதாபாத்திரம், இயல்பாக நடித்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் ஆன்மிக குரு ஹரிஷ் பெரடி, வெற்றியின் அப்பா அருவி மதன், மாமா விவேக் பிரசன்னா ஆகியோர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

காசி, சென்னை என இங்கும், அங்குமாகப் போகும் கதைக்களம். அந்தந்த இடங்களின் உணர்வுகளை ஒளிப்பதிவில் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின். மனோஜ் கிரியானாவின் பின்னணி இசை குறிப்பிடும்படி அமைந்துள்ளது.

ஒரே படத்தில் நிறைய விஷயங்களைச் சொல்லிவிட்டார்களோ என்ற குழப்பம் ஆங்காங்கே வந்து போகிறது. நாயகனின் உணர்வுகள் நமக்கும் எங்கேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அது மிஸ்ஸிங். ஆரம்பம் முதல் கடைசி வரை திரைக்கதை எங்கெங்கோ போய் வருகிறது.

Tags: aalan, vetri, mathura, anu sithara

Share via:

Movies Released On March 15