ஐந்தாம் வேதம் – விமர்சனம்
26 Oct 2024
90களில் சன்டிவியில் ஒளிபரப்பான ‘மர்மதேசம்’ என்ற விறுவிறுப்பான த்ரில்லர் தொடரை இயக்கி நாகா இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் இந்த ‘ஐந்தாம் வேதம்’.
சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்ஜி மகேந்திரா, க்ரிஷா குரூப், ராம்ஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்கள் இந்து மதத்தின் அடிப்படையான வேதங்களாக உள்ளன. ஐந்தாவதாக ஒரு வேதம் இருக்கிறது, அது என்ன என்பது பற்றிய ஒரு கற்பனைத் தேடல் தான் இந்த வெப் தொடரின் கதை.
பாடகி ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர் சாய் தன்ஷிகா. அவரது அம்மா மறைந்த பின் அவரது அஸ்தியைக் கரைக்க காசி செல்கிறார். அங்கு அவரை சந்திக்கும் சாமியார் ஒருவர் ஒரு பெட்டியைக் கொடுத்து தென் தமிழகத்தில் உள்ள ஐயங்கரன்புரம் என்ற ஊரில் சேர்க்கச் சொல்கிறார். அதைச் செய்ய முடியாது என்று மறுக்கும் சாய் தன்ஷிகாவை விதி அந்த ஊருக்குக் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த ஊரில் உள்ள கோவிலில்தான் ஐந்தாம் வேதத்திற்கு உரிய ரகசியம் இருக்கிறது. அதை அந்தக் கோவிலின் தலைமை அர்ச்சகர் குடும்பமான ஒய்ஜி மகேந்திரா குடும்பத்திடம் அதற்கான சாவி இருக்கிறது. சாய் தன்ஷிகா கொண்டு வந்த மரப்பெட்டியில் உள்ள ஒரு பொருளையும், ஒய்ஜி மகேந்திரா வசம் இருக்கும் சாவியையும் வைத்துத்தான் அந்த ஐந்தாம் வேத ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என கண்டுபிடிக்கிறார்கள். அதை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
இதுதான் மையக் கதை என்றாலும் இதில் சில கிளைக் கதைகளை வைத்து நம்மை சற்றே குழப்பியிருக்கிறார்கள். மாமிசத்தை 3 டி பிரின்டர் மூலம் உருவாக்குவது, அதே பாணியில் சக்தி வாய்ந்த மனிதர்களையும், 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி, குரு, சுக்ரன், செவ்வாய் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது நடக்க உள்ள அதிசயம் என சில கதைகளை சேர்த்து அடித்திருக்கிறார்கள். அவற்றை சாதாரண ரசிகர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்லியிருக்க வேண்டும்.
தன்னை சரியாக கவனித்துக் கொள்ளாத அப்பா மீது கோபத்தில் உள்ளவர் சாய் தன்ஷிகா. சுயமாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர். விதவிதமான அலங்காரத்துடன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிறைவாகவே நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்து விவேக் ராஜகோபால் கதாபாத்திரம் முக்கியமான ஒரு கதாபாத்திரம். கம்ப்யூட்டர் தொழில்நுட்பகத்தில் கை தேர்ந்தவர். ஏஐ மூலம் ஒரு பெண்ணின் உருவத்தை உருவாக்கி அது சொல்படி நடப்பவர். அவர் உருவாக்கிய பெண் போலவே ஐயங்கரன்புரம் ஊரில் க்ரிஷா குரூப் வர, அவரை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். ஒரு பக்கம் ஏஐ பெண்ணாக, மறுபக்கம் அதற்கு நேர் எதிராக பாந்தமான பெண்ணாக நடித்திருக்கிறார் க்ரிஷா குரூப்.
தலைமை அர்ச்சகராக ஒய்ஜி மகேந்திரா. ஐந்தாம் வேதம் பற்றிய ரகசியங்கள், பிரம்மா பற்றிய ரகசியம், அந்தக் கோயில் பற்றிய ரகசியம் ஆகியவற்றை நம்பும்படி சொல்வதற்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அவரது பேத்தியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் இயல்பாக நடித்திருக்கிறார்.
3 டி பிரின்டர் பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டு அதை தனக்காகக் கைப்பற்றத் துடிக்கும் வக்கீல் கதாபாத்திரத்தில் தேவதர்ஷினியும், திடீர் திடீரென வந்து சாய் தன்ஷிகாவை வழி நடத்தும் சாமியாராக ராம்ஜி நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் பிரதாப், பொன்வண்ணன், சண்முகராஜன், மாத்யூ வர்கீஸ் ஆகியோருக்கும் கதையில் முக்கியத்துவம் உண்டு.
சீனிவாசன் தேவராஜன் ஒளிப்பதிவு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒரு த்ரில்லர் தொடருக்குரிய பரபரப்பை காமிரா கோணங்கள் மூலமும் காட்ட வேண்டும். கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகள், காசி காட்சிகள், ஊரின் வெளிப்புற காட்சிகள் என பலவற்றிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. எம்ஆர் ரஜிஷ் படத் தொகுப்பும் காட்சிகளை விறுவிறுப்பாகத் தொகுத்திருக்கிறது.
ஆன்மிகம், வரலாறு, தேடல், அறிவியல் என அந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் இணைக்கும் விதமான கதை. எல்லாவற்றையும் நாமும் நம்பும்படியாக சொல்வதுதான் இதில் உள்ள ஹைலைட். 8 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர் த்ரில்லர், ஆன்மிகத் தொடர் பிரியர்களுக்குப் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Tags: aindham vedham, naga, sai dhanshika