தீபாவளி போனஸ் – விமர்சனம்

26 Oct 2024

மதுரை மாவட்டத்தில் இருக்கும் நிலையூர் என்ற கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் விக்ராந்த், ரித்விகா. அவர்களுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தனது மகனுக்குப் பிடித்தமான போலீஸ் டிரஸ், மனைவி ஆசைப்பட்ட புடவை, பட்டாசு, இனிப்பு என குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார். கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் ஆபிஸில் தரும் தீபாவளி போனஸுக்காகக் காத்திருக்கிறார். அது நடக்காமல் போக வேறு ஏதாவது செய்ய நினைத்து இறங்க ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டு குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அன்பான கணவனாக, பாசமான அப்பாவாக யதார்த்தமாக நடித்திருக்கிறார் விக்ராந்த். மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரம். எல்லா அப்பாக்களுக்கும் தங்களது குடும்பத்தை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இருந்தாலும் சில சமயங்களில் அவர்கள் நினைப்பது நடக்காமல் போகும் போது அந்த இயலாமையை நினைத்து வருந்துவார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் கண் கலங்க வைக்கிறார் விக்ராந்த்.

‘மெட்ராஸ்’ படத்திலேயே கவனிக்கப்பட்டவர் ரித்விகா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அவருடைய நடிப்பால் பேசப்படுவார். எளிய குடும்பத்தின் அம்மாவை, மனைவியை கண்முன் கொண்டடு வந்து நிறுத்தியிருக்கிறார்.

விக்ராந்த், ரித்விகா மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஹரிஸ் நடிப்பும் அருமையாக உள்ளது.

இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு பாடல்களிலும், பின்னணி இசையிலும் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார். மதுரை மண்ணின் கதைக்களத்தை அதற்கே உரிய ரசனையுடன் திரையில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் சேதுராமன்.

மக்களின் வாழ்வியலை, அதுவும் எளிய மக்களின் வாழ்வியலை ஒரு முக்கியமான பண்டிகை நாளில் எப்படியிருக்கும் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

Tags: deepavali bonus, vikranth, riythvika

Share via: