ஒற்றைப் பனைமரம் – விமர்சனம்
26 Oct 2024
புதியவன் ராசய்யா இயக்கத்தில், அஷ்வமித்ரா இசையமைப்பில், புதியவன் ராசய்யா, நவயுகா குகராஜா, அஜதிகா புதியவன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான நவயுகா, மற்றும் அனாதை சிறுமியாக நின்ற சிறுமி ஒருவருக்கும் அடைக்கலம் கொடுக்கிறார் புதியவன் ராசய்யா. போர் முடிந்த பின் உள்ள சூழலில் அங்குள்ள ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. பெண்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார் புதியவன். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தை இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார் புதியவன் ராசய்யா. போருக்குப் பின்பு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல வீரர்களது நிலைமை மிக மோசமாக இருந்ததாக படத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். மரணமடைந்த வீரர்களின் மனைவி, குழந்தைகள் பசிக் கொடுமைகளை அனுபவித்தனர் என்றும், பெண்கள் அதிலிருந்து மீள விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை சக தமிழர்களே பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். படத்தை விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு எதிராகவே எடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தினர் செய்த கொடுமைகளை விடவும், தமிழர்களை தமிழர்களே எதிரிகளாக பாவித்தனர் என்றும் படத்தில் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளைப் பற்றி நேரிடையாகக் குற்றம் சாட்டாமல் மேலிடம் என்று விமர்சிக்கிறார்.
படத்தில் நடித்துள்ள நவயுகா, புதியவன் ராசய்யா, அஜாதிகா ஆகியோர் யதார்த்தமாக நடித்து கவர்கிறார்கள். இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் ஆகியோரைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் போருக்குப் பிறகான ஈழத் தமிழர்களின் வாழ்க்கை அங்கு எப்படி இருந்தது என்பதை நமக்கும் வலிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
படத்தின் பட்ஜெட் குறைவான விதத்தில் இருப்பதால் அதன் உருவாக்கத்தில் படத்தின் தரம் குறைந்து போகிறது. ஈழத் தமிழகர்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசும் பல படங்கள் இப்படித்தான் வந்து போகின்றன.
Tags: ottrai panai maram