லக்கி பாஸ்கர் - விமர்சனம்

01 Nov 2024

வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் செய்து வெளியாகி இருக்கும் படம். 1990களின் துவக்கத்தில் இந்திய பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து சுமார் 6000 கோடி வரை பெரும் ஊழல் செய்தவர் ஹர்ஷத் மேத்தா. அவர் என்ன செய்தார், எப்படி செய்தார், அதனால் வங்கிகள் எவ்வளவு பாதிப்படைந்தன என்பதைச் சொல்லியிருக்கும் படம்.

மும்பையில் மெகதா வங்கியில் கேஷியர் ஆக வேலை பார்ப்பவர் துல்கர் சல்மான். சராசரி நடுத்தரக் குடும்பம். காதல் மனைவி மீனாட்சி, ஒரு மகன், தம்பி, தங்கை என மொத்த குடும்பமும் அவருடைய ஒரு வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. அவரது வங்கியில் பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறார். அதனால், வேறு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். வங்கி பணத்தை திருட்டுத்தனமாக எடுத்து, ராம்கிக்கு வியாபாரம் செய்ய பணம் கொடுத்து அதில் கமிஷன் கேட்கிறார். இப்படியாக ஆரம்பமாகும் அவரது வருமானம் போகப் போக வேறு விதங்களில் வளர்ந்து 100 கோடி வரை அவருடைய வங்கிக் கணக்கில் வைக்கும் அளவிற்கு வளர்கிறார். ஒரு நாளில் அதற்கெல்லாம் திடீரென ஒரு சிக்கல் வருகிறது. அதிலிருந்து துல்கர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஏமாற்றுக்காரனாக துல்கர் சல்மான் நடித்து தமிழில் வந்து வரவேற்பைப் பெற்ற படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. ஏறக்குறைய அதே போன்றதொரு கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இதில் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே குறுக்கு வழிகளில் சம்பாதிக்கிறார். தனது வங்கியில் ‘வங்கி ரசீது’ மூலம் கடன் பெறும் கம்பெனியை கைக்குள் போட்டுக் கொண்டு அதில் கமிஷன், அவர்கள் நடத்தும் ஷேர் மார்க்கெட் பிசினஸில் லாபம் என என்னென்னமோ செய்கிறார். அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிப்பதில் தில்லாலங்கடியாக இருக்கிறார்.

துல்கரின் மனைவியாக மீனாட்சி சௌத்ரி. தனது காதல் கணவரை தன் குடும்பத்தினர் அவமானப்படுத்துவது கண்டு கோபமடைகிறார். எப்படியும் தனக்கு விருப்பமான ஹோம் புட்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறார். அதையும் கணவன் முதலீட்டில் ஆரம்பித்து அதன் பின் உண்மை தெரிய வந்ததும் கோபமடைகிறார். பணம் மட்டும் வாழ்க்கையல்ல அன்பும், பாசமும், குடும்பமும்தான் வாழ்க்கை என உணர வைக்கிறார்.

ஆரம்பத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் துல்கருக்கு ஒரு வழியைக் காட்டுகிறார் ராம்கி. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கவனம் பெறுகிறார்கள். வங்கியின் சேர்மன் டினு ஆனந்த், வங்கி ஜெனரல் மேனேஜர் சச்சின் கடேகர், ஹர்ஷத் கம்பெனி ஆளாக வரும் ஸ்ரீநாத் மகந்தி ஆகியோரது கதாபாத்திரங்கள் ஊழலின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசை படத்திற்கு பிளஸ் பாயின்ட். ஒரு பைனான்சியல் க்ரைம் திரில்லர் படம். அடுத்தடுத்து பல உணர்வுகள் வெளிப்படும் பரபரப்பான திரைக்கதை. தனது இசையால் அந்தக் காட்சிகளை மேலும் உயர்த்தியுள்ளார். நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, 90களின் காலகட்டத்தை தன் அரங்கால் கண்முன் கொண்டு வந்துள்ள கலை இயக்குனர் பங்கலான் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு டப்பிங் படத்தைப் பார்த்த உணர்வு இல்லை. நிதி, வங்கி, பங்கு மார்க்கெட் என அது பற்றிய அடிப்படை விவரம் தெரிந்தவர்களால்தான் படத்தை முழுமையாக ரசிக்க முடியும். இருந்தாலும் அதற்கேற்ற டீடெய்லிங் கொடுத்து சாமானியனும் புரிந்து கொள்ளும் விதமாக படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

Tags: lucky baskhar, dulquer salman, venky atluri, gv prakashkumar

Share via: