ப்ளடி பெக்கர் – விமர்சனம்
01 Nov 2024
சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையமைப்பில், கவின், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பிச்சைக்காரராக இருக்கும் கவின், ஒரு பிரம்மாண்ட மாளிகைக்குள் எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆசையில் அதனுள் நுழைகிறார். ஆனால், அந்த இடத்தில் அந்த மாளிகையின் வாரிசுகள் 200 கோடி ரூபாய் சொத்துக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் சிக்கும் கவின், அந்த இடத்தை விட்டு தப்பித்து வந்தால் போதும் என ஓடுகிறார். மாளிகைக்குள் அவரை விடாமல் துரத்துகிறார்கள் அந்த வாரிசுகள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
பொதுவாக பிரம்மாண்ட மாளிகை என்றாலே பேய்ப் படத்தைத்தான் எடுப்பார்கள். இந்தப் படத்தில் பேய் இருக்கிறது. ஆனால், அந்தப் பேயை விட பணத்தாசை பிடித்த பயங்கர மனிதர்கள் அந்த மாளிகையில் வாரிசுகளாக இருக்கிறார்கள். சொத்து, வாரிசு, சண்டை, துரத்தல் என காமெடிப் படமாகப் பிடிக்கப் போய் அது என்னவோ ஒரு படமாக வந்துள்ளது.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பிச்சைக்காரரின் வாழ்வியலை காட்டப் போகிறார்கள் என எதிர்பார்த்தால் அங்கிருந்து கதை தடம் மாறி மாளிகைக்குள் நுழைந்து அதனுள் எங்கெங்கோ போய் எப்படியோ முடிகிறது.
இந்த பிச்சைக்காரர் கதாபாத்திரத்திற்காக கவின் போட்ட உழைப்பும், ஈடுபாடும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. ஆரம்பத்தில் கவனிக்க வைப்பவர், அந்த மாளிகைக்குள் நுழைந்ததும் அங்குள்ள எண்ணற்ற வாரிசுகளால் அமுங்கிப் போய்விடுகிறார். அங்குள்ள ஒவ்வொருவருமே விதவிதமான குணம் கொண்டவர்களா, டிராமா நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர்களாக நடித்து சோதிக்கிறார்கள். அவர்களது டிராமா நடிப்புக்கு முன்பு கவின் அப்பாவியாக நடிக்க முயற்சித்தாலும் அது அமுங்கிப் போய்விடுகிறது.
விபத்தில் மனைவியைப் பறி கொடுத்தவர், தனது சொந்த மகனை தன் மகன் என்று சொல்லி அழைக்க முடியாதவர் என்பதுதான் கவினின் கதாபாத்திரம். அந்த எமோஷனல் உணர்வுகள் மட்டும் படத்தின் கிளைமாக்சில் வந்து நமக்கு கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அது ஒன்று மட்டுமே இரண்டு மணி நேரப் படத்திற்குப் போதாது.
ஒரே ஒரு பிரம்மாண்ட மாளிகை, அதனுள் எங்கெங்கோ கேமராவைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங். படத்தில் கவினுக்குப் பிறகு சின்சியராக உழைத்திருப்பவர் இவர்தான். ஜென் மார்ட்டின் சாதாரண காட்சிகளுக்குக் கூட பேங் பேங் என வாசித்துத் தள்ளியிருக்கிறார்.
டார்க் காமெடி, பிளாக் காமெடி என சொல்லிவிட்டு எந்தவிதமான காமெடியும் காட்சிகளிலும் இடம் பெறவில்லை, அவற்றைப் பார்த்தால் நமக்கும் சிரிப்பு வரவில்லை. அடுத்த முறை வேறு ஏதாவது முயற்சித்துப் பாருங்கள் இயக்குனரே. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கவின்.
Tags: bloody beggar, kavin