பிரதர் – விமர்சனம்
01 Nov 2024
எம் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஒரு குடும்பம், அதில் கதாநாயகன், அவருக்கு ஒரு குணாதிசயம், அவருக்கு ஒரு காதல், பின்னர் உருவாகும் பிரச்சனை, தீர்வு என தன்னுடைய வழக்கமான அதே ‘டெம்ப்ளேட்’ கதையில் இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார் ராஜேஷ். இன்றைய பல இளைஞர்களின் வாழ்க்கைதான் படத்தின் கதை. அதை இந்தக் காலத்து மேக்கிங்கில் சொல்லியிருந்தால் பெரிதாகப் போய் சேர்ந்திருக்கும்.
பெற்றோர் பேச்சைக் கேட்காமல் தன் விருப்பத்திற்கு இருப்பவர் ஜெயம் ரவி. சட்டக் கல்லூரியில் படித்தாலும் கடைசி பரீட்சை எழுதி டிகிரி வாங்காமல் இருக்கிறார். அவரால் அப்பா அச்யுத் குமாருக்கு டென்ஷனாகி ஹார்ட் அட்டாக் வரை வருகிறது. அதனால், அக்கா பூமிகா, ஊட்டியில் அவருடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன், தம்பியை மாற்றிக் காட்டுகிறேன் என சொல்லிவிட்டு கூட்டிப் போகிறார். பூமிகாவின் கணவர் நட்டி, நாத்தனார் பிரியங்கா மோகன், கலெக்டர் மாமனார் ராவ் ரமேஷ், வக்கீல் மாமியார் சரண்யா என இருக்கும் அந்த சிஸ்டமேட்டிக் பழக்க வீட்டில் நுழைகிறார் ஜெயம் ரவி. அந்த வீட்டையே தன் குணத்தால் டென்ஷனாக்கிவிடுகிறார். அதனால், பூமிகா கணவரை விட்டுப் பிரிந்து வரும் நிலை. அக்காவுடன் வீட்டை விட்டு வரும் ஜெயம் ரவி அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
குடும்பத்துக்குள் இருக்கும் ஒரு மகன் என்ற கதாபாத்திரம் ஜெயம் ரவிக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரம். இதற்கு முந்தைய சில படங்களில் அப்படியான கதாபாத்திரங்களில் நடித்த போது குடும்பத்திற்கு அடங்கிய மகனாக நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் அடங்க மறுக்கும் மகன். பெற்றோருக்கு மட்டுமல்ல வேறு யாருக்குமே அடங்க மாட்டார். அக்கா பூமிகாவுக்கு மட்டுமே அடங்குவார். அவ்வளவு பாசமான அக்காவின் வாழ்க்கையையே பிரியும் நிலைக்குக் காரணமாகிறார். படம் முழுவதும் அவரைச் சுற்றியே நகர்கிறது. வழக்கம் போல அனைத்தையும் சமாளித்து நடித்துள்ளார் ஜெயம் ரவி.
அவரது காதலியாக, அக்காவின் நாத்தானாரான பிரியங்கா மோகன். இப்படி ஒரே குடும்பத்திற்குள் இருந்தால் என்னென்னவோ செய்யலாம். ஆனால், அப்படியான காதல் காட்சிகளே வைக்காமல் விட்டுள்ளார். அவ்வப்போது வெளியில் சந்தித்துப் பேசுவதுடன் முடித்துவிட்டார்கள்.
ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா. அக்காக்களின் பாசம் அம்மாவின் பாசத்தைப் போன்றது. தம்பி, தம்பி என பூமி போல அப்படி தாங்குகிறார் பூமிகா. அவரது கணவராக நட்டி. அப்பாவுக்கு மரியாதை தரும் பாசமான மகன். அதனால், மனைவி பிரிந்து போனாலும் கவலைப்படாதவர். நட்டியின் அப்பாவாக கலெக்டர் கதாபாத்திரத்தில் ராவ் ரமேஷ். ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு இவர்தான் வில்லன். ராவ் ரமேஷின் மனைவியாக பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் சரண்யா. அவர்கள் வீட்டு வேலைக்காரராக விடிவி கணேஷ்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்காமிஷி’ பாடல் அசத்தல் ஹிட்டாகியுள்ளது. அமுதா பாடல் அவ்வப்போது மட்டுமே வந்து போகிறது. ஊட்டியின் அழகை இன்னும் காட்டியிருக்கலாம் ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம்.
இன்றைய ஸ்டைலில் படம் தருவது எப்படி என்பதை இயக்குனர் ராஜேஷ் நிறைய பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். க்ளிஷேவான காட்சிகள்தான் இந்த பிரதருக்கு வந்த பிரச்சனை.
Tags: brother, jayam ravi, priyanka mohan, rajesh, harris jayaraj