அமரன் – விமர்சனம்

01 Nov 2024

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இந்திய ராணுவத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 44வது ராஷ்ட்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவில் மேஜர் பதவியில் பணியாற்றிய போது பயங்காரவாதிகளை எதிர்த்து தோக்குதல் நடத்திய போது வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் பற்றிய பயோபிக் படம் இது.

அவர் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த பயோபிக் படத்தின் கதை ஆரம்பமாகி, அடுத்து அவரது காதல், சென்னை ஓடிஏவில் ராணுவ அதிகாரி பயிற்சி, பின் வெவ்வேறு இடங்களில் ராணுவப் பணி, அடுத்தடுத்த பதவி உயர்வு, இறப்பதற்கு முன்பு, காஷ்மீரில் சில பயங்கரவாதிகளை ஒழித்து, அங்குள்ள மக்களுக்கும் பல நல்லது செய்து, கடைசியில் 2014ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் பொதுமக்களை கடத்தி வைத்திருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி மக்களைக் காப்பாற்றி, பயங்காரவாதிகளையும் கொன்று அவரும் வீர மரணம் அடைந்தார். இவை அனைத்தும் இந்தப் படத்தில் பல எமோஷனல் காட்சிகளுடன் படமாக்கப்பட்டு நம்மை உணர்வுபூர்வமாக ரசிக்க வைக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வந்த படங்களை விடவும் இந்தப் படம் அவருக்கு ஒரு தனி மரியாதையைக் கொடுக்கும். இந்தப் படத்திற்குப் பிறகு எத்தனை படங்களில் நடித்தாலும், இந்தப் படம் அவருடைய அடையாளக் குறியீடாக இருக்கம். அந்த அளவிற்கு இந்தப் படத்திற்காக தன்னுடைய மனதையும், உடலையும் ஒருங்கே சேர்த்து நடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மேஜர் முகுந்த் வரதராஜன் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று நம்மையும் யோசிக்க வைப்பதுதான் அவருடைய நடிப்புக்குக் கிடைத்த வெற்றி.

படத்தின் ஆரம்பக் காட்சியில் அசத்தலாக அறிமுகமாகும் சாய் பல்லவி, கிளைமாக்சில் வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும் காட்சி வரை அவரது நடிப்பால் நம்மை ஈர்த்துவிடுகிறார். காதல், மகிழ்ச்சி, பாசம், பரிவு, சோகம், வீரம், பெருமை என நவரசங்களையும் தாண்டிய அவரது நடிப்பு ‘சாதிச்சிட்டீங்க சாய் பல்லவி’ என்றே சொல்ல வைக்கிறது. தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பால் அதிகம் பேசப்பட்ட சாவித்ரி, ரேவதி போன்றவர்களையும் ஓவர்டேக் செய்துள்ளது அவரது இயல்பான நடிப்பு.

முகுந்த் வரதராஜனின் வலதுகரமாக இருந்து அவருடன் இணைந்து நடத்திய கடைசி தாக்குதலில் ஒன்றாகவே வீர மரணம் அடைந்தவர் சிப்பாய் விக்ரம் சிங். அந்தக் கதாபாத்திரத்தில் புவன் அரோரா நடித்துள்ளார். முகுந்தின் கர்னல் ஆக ராகுல் போஸ், முகுந்த் அம்மாவாக கீதா கைலாசம் உள்ளிட்டவர்களும் மிக இயல்பாக நடித்துள்ளார். முகுந்த் அப்பாவாக நடித்திருப்பவரும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்துள்ளார். மற்ற சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள், பயங்கரவாதிகளாய் நடித்திருப்பவர்கள் என பல கதாபாத்திரங்கள் உண்மைக் கதாபாத்திரங்களைப் பார்ப்பது போன்றே உள்ளது.

ராணுவம் சம்பந்தப்பட்ட கதைகளைப் படமாக்குவது அவ்வளவு எளிதல்ல. தமிழில எப்போதோ ஒரு முறை மட்டுமே வரும் படங்களே அதற்கு உதாரணம். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பங்கு பெற்ற ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், சண்டைப் பயிற்சியாளர், உதவி இயக்குனர்கள், இதர கலைஞர்கள் என அனைவருமே அவர்களுக்கான பெருமையை நினைத்துப் பார்க்கும் ஒரு படமாக இந்தப் படம் அமையும்.

ஜிவி பிரகாஷ்குமாரின் பின்னணி இசை சிறந்த தரத்தில் அமைந்துள்ளது. தனக்கு எந்தவிதமான படங்களும் சவால்தான் என்பதை இந்தப் படத்திலும் சிறப்பாகவே நிரூபித்திருக்கிறார். அறிமுக ஒளிப்பதிவாளர் சாய் ஒளிப்பதிவு நிச்சயம் ஹாலிவுட் தரம் என்றே சொல்லலாம்.

சினிமாவுக்காக சில சமரசங்களை இந்தப் படத்தில் செய்திருந்தாலும், அதையெல்லாம் மறக்கச் செய்து படம் முடிந்தும் நம்மை சீட்டை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. படம். தமிழ் சினிமாவில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படியான ஒரு அற்புதமான படைப்பைக் கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Tags: amaran, sivakarthikeyan, sai pallavi, rajkumar periasamy, gv prakashkumar

Share via: