கங்குவா – விமர்சனம்

14 Nov 2024

சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

1070 மற்றும் 2024 ஆகிய வருடங்களில் நடக்கும் கதை. 2024ல் கதை ஆரம்பமாகி, அப்படியே 1070க்குப் போகிறது. பின் கிளைமாக்ஸ் முன்பாக மீண்டும் 2024க்கும், 1070க்கும் மாறி மாறி பயணிக்கிறது. இரண்டுக்குமான தொடர்பு என்ன என்பதை விளக்குகிறது. சரித்திரம், முன் ஜென்மம், போர், மருத்துவ ஆராய்ச்சி என பலவற்றையும் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் சிவா. ஒன்றுக்கொன்றான தொடர்புகளை சாதாரண ரசிகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுத்திருந்தால் தமிழில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

கோவா கமிஷனர் கேஎஸ் ரவிக்குமார் பிடித்துத் தரச் சொல்லும் குற்றவாளிகளை பணம் பெற்றுக் கொண்டு பிடித்துத் தரும் ‘பவுன்ட்டி ஹன்ட்டர்’ ஆக இருக்கிறார் சூர்யா. எங்கோ ஓரிடத்தில் மூளை நரம்பு மண்டலத்தை சிறுவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்தும் ஒரு இடத்திலிருந்து சிறுவன் ஒருவன் தப்பிக்கிறான். அவன் கோவாவில் இருக்கும் சூர்யாவைத் தேடி வருகிறான். அவன் எதற்காக வந்தான் என்பதைச் சொல்ல கதை 1070ம் வருடத்திற்கு நகர்கிறது.

ஐந்தீவு என அழைக்கப்படும பகுதியில் பெருமாச்சி இடத்தின் இளவரசன் சூர்யா. அந்தத் தீவை அடைய படையெடுத்து வந்த ரோமானியர்களுக்கு உதவி செய்து 100 பெருமாச்சி மக்களை தந்திரமாகக் கொல்கிறார் மற்றொரு தீவைச் சேர்ந்த நட்டி. அதனால், அவருக்கு மரண தண்டனை தருகிறார் சூர்யா. நட்டியை தீயிட்டு மரண தண்டனை தரும் போது, நட்டியின் மனைவியும் தீயில் விழுந்து இறக்கிறார். இறப்பதற்கு முன்பு, தன் மகனை சூர்யாவிடம் ஒப்படைத்து பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். தன் பெருமாச்சி மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த மகனைப் பார்த்துக் கொள்கிறார் சூர்யா. இதனிடையே, பெருமாச்சி தீவையும், அதன் மக்களையும் அழிக்க பக்கத்து தீவான அரத்தி தீவின் அரசன் பாபி தியோல் முயற்சிக்கிறார். இதன் பின்ன என்ன நடக்கிறது, இந்த 1070ம் கதையும், 2024 கதையும் எப்படி இணைகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

2024ல் கோவாவில் ‘பவுன்ட்டி ஹன்ட்டர்‘ பிரான்சிஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது. அவரது உதவியாளராக யோகி பாபு, முன்னாள் காதலி திஷா படானி, அவரது உதவியாளர் ரெடின் கிங்ஸ்லி, கோவா கமிஷனல் கேஎஸ் ரவிக்குமார் என அந்தக் கூட்டணி நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் அதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஒரு சில காட்சிகளில் கோவை சரளாவும் வந்து போகிறார். ஓ…இவர்தான் திஷா படானியா என நாமே யோசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அளவிற்குத்தான் அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உள்ளது.

1070ல் நடக்கும் கதையின் காட்சியமைப்புகள், அதில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள்தான் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள். அதில் நடித்துள்ளவர்களில் பலரை நம்மால் அடையாளம் காண முடியாத அளவில்தான் உள்ளார்கள். அந்த அளவிற்கு மேக்கப், ஆடை அலங்காரம் ஆகியவை அவர்களை மாற்றியுள்ளன. சில காட்சிகளில் சூர்யா கூட அடையாளம் தெரியாத அளவிற்கே இருக்கிறார்.

‘கங்குவா’ கதாபாத்திரத்தில் பெரும் நம்பிக்கையுடன் நடித்திருக்கிறார் சூர்யா. ஒவ்வொரு காட்சியிலுமே அவருடைய ஈடுபாடு தெரிகிறது. ஆனாலும், அவருடைய அத்தனை உழைப்பும் கொஞ்சம் வீணாகிப் போய்விட்டதோ என்ற வருத்தமும் வருகிறது. ஊர் மக்களைக் காப்பாற்றத் துடிப்பது, எதிரிகளை எதிர்த்து நின்று துணிச்சலாகப் போராடுவது, தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ஊர் மக்களை விட்டு விலகியிருப்பது என படம் முழுவதிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

வில்லனாக பாபி தியோல், தனது உருவத்திலேயே ஒரு மிரட்டலைக் கொண்டு வந்துள்ளார். அவரது மகன்களாக சூர்யாவை எதிர்த்துப் போராடுபவர்கள் யார் என்று அடையாளம் தெரியாத அளவில் இருக்கிறார்கள். ரோமானியர்கள் தரும் தங்கத்திற்காக தன் தீவு மக்களுக்கு துரோகம் செய்பவர்களாக போஸ் வெங்கட், நட்டி நடித்திருக்கிறார்கள். கருணாஸ் சில காட்சிகளில் வந்து போகிறார்.

ஐந்தீவு சம்பந்தப்பட்ட காட்சிகள், போர்க் காட்சிகள் என வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு நிறைய உழைத்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் அவ்வளவு இரைச்சலைத் தந்திருக்கக் கூடாது. அதே சமயம் முகங்கள் தெளிவாகத் தெரியும் அளவிற்காவது லைட்டிங்கில் கொஞ்சம் மாற்றத்தை வைத்திருக்கலாம். கலை இயக்கம், விஎப்எக்ஸ், ஆடை அலங்காரம், மேக்கப் ஆகியவை 1070ல் இப்படித்தான் இருந்திருக்குமோ என நம்ப வைக்கின்றன.

படத்தின் ஆரம்பமே ‘டேக் ஆப்’ ஆக வேண்டும். ஆனால், இங்கு சோதனைக்குள்ளாக்குகிறது. 1070 சம்பந்தப்பட்ட கதையில் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கும் அளவிற்கான கதாபாத்திர அறிமுகங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்க வேண்டும். புதிதாக முயற்சி செய்திருக்கிறார்கள், ஆனால், அதை இன்னும் கவனமாகச் செய்திருக்க வேண்டும்.

 

Tags: kanguva, suriya, siva, disha patani

Share via: