நயன்தாரா – பியான்ட் த பேரி டேல் – ஓர் பார்வை
20 Nov 2024
தமிழ் சினிமா உலகில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. மலையாளத் திரையுலகத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் 2005ல் வெளிவந்த ‘ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து, பல வெற்றிப் படங்களில் நடித்து, தனி கதாநாயகியாகவும் நடித்து 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் முத்திரை பதித்து, ஹிந்தியிலும் முதல் படத்திலேயே பெரும் வெற்றியைப் பெற்றார்.
அவரைப் பற்றிய ‘நயன்தாரா – பியான்ட் த பேரி டேல்’ என்ற டாகுமென்டரி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் மலையாள சினிமா அறிமுகம், தமிழ் சினிமா அறிமுகம், தெலுங்கு சினிமா அறிமுகம், நயன்தாராவின் பெற்றோர், நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல், அவர்களது திருமணம் என நயன்தாரா பற்றிய 20 வருடங்களுக்கும் மேலான ஒரு வாழ்க்கைப் பயணத்தை ஒன்றைரை மணி நேர டாகுமென்டரியில் கொடுத்திருக்கிறார்கள்.
நயன்தாரா பற்றி அவரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சத்யன் அந்திக்காடு, தமிழில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ராதிகா சரத்குமார், இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், அட்லி, நெல்சன், தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா, ராணா டகுபட்டி உள்ளிட்டோர் நயன்தாரா பற்றிப் பேசியுள்ளதும் இதில் இடம் பெற்றுள்ளது.
நயன்தாராவின் குடும்பத்தைப் பற்றிய பகுதி நெகிழ்வாக அமைந்துள்ளது. தனது மகள் நயன்தாரா பற்றி அவரது அம்மா ஓமனா குரியன் பேசுவது மிகவும் பாசமாக அமைந்துள்ளது. அவரது அப்பா இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாகவே இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கான புதிய தகவல்கள்.
விக்னேஷ் சிவன் பேட்டி ஆரம்பமான பின் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையிலான காதல் மலர்ந்தது எப்படி, திருமணம் வரை சென்றது எப்படி, இடையில் சந்தித்த சில சிக்கல்கள் என்ன என்பதாகப் போகிறது. கடைசியில் அவர்களது இரட்டை ஆண் குழந்தைகளை அறிமுகப்படுத்துவதுடன் டாகுமென்டரி முடிகிறது.
ஒரு டாகுமென்டரி என்பது முழுமையான அளவில் இருக்க வேண்டும். அவரது சிறு வயது வாழ்க்கையில் இருந்து ஆரம்பமாகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதோடு, நயன்தாராவுடன் பணியாற்றி அனைத்து இயக்குனர்கள், நடிகர்கள், சக நடிகைகள் ஆகியோரு பேட்டிகளையும் இடம் பெற வைத்திருக்கலாம்.
திருமண வைபவம் நடந்து பற்றியும் முழுமையாக இடம் பெறவில்லை. கலந்து கொண்ட பிரபலங்கள் சில வினாடிகள் மட்டுமே காட்டப்படுகிறார்கள்.
சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்து, சொந்த மண்ணை விட்டு அடுத்த மாநிலத்தில் வந்து அங்கு சாதித்து நம்பர் 1 இடத்தில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமல்ல. அதை இன்னும் அழுத்தமாக, உணரும் விதத்தில் காட்டியிருக்கலாம்.
Tags: nayanthara, vignesh sivan