லைன் மேன் - விமர்சனம்
23 Nov 2024
தூத்துக்குடி அருகே உள்ள உப்பு எடுக்கும் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் மின்சாரத் துறையில் லைன்மேன் ஆக வேலை பார்க்கும் சார்லி. அவரது மகன் ஜெகன் பாலாஜி எஞ்சினியரிங் முடித்தவர். சூரியன் மறைந்த பிறகு தெரு விளக்குகள் தானாகவே எரிந்து, காலையில் சூரியன் வந்த பிறகு தானாகவே மறையும் ஆட்டோமேடிக் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்தக் கண்டுபிடிப்பை அரசாங்கத்திடம் கொண்டு போய் சேர்க்க முயற்சிக்கிறார். ஆனால், அது அவ்வளவு சுலபத்தில் நடக்கவில்லை. அதற்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் இப்படத்தின் கதை.
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை உதய்குமார் இயக்கியுள்ளார். உப்பு எடுக்கும் கிராமத்தின் கதைக்களத்தை இயல்பாய் பதிவு செய்திருக்கிறார். அங்குள்ள ஒரு லைன்மேன் குடும்பத்தின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து ஒரு திறமைசாலி ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்தால் அதை அரசுக்குத் தெரிவிக்கவே எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
லைன் மேன் சுப்பையா கதாபாத்திரத்தில் தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார் சார்லி. எந்த ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அந்தக் கதாபாத்தித்தில் ஒன்றை நடிப்பவர், இந்தப் படத்திலும் அப்படியே நடித்திருக்கிறார். சினிமாத்தனமில்லாத முகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே நாயகனாய் முத்திரை பதித்திருக்கிறார் ஜெகன் பாலாஜி. திறமைசாலிகளுக்கான அங்கீகாரம் பெற எப்படியெல்லாம் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை அழுத்தமாய் பதிவு செய்துள்ளார். ஜெகன் பாலாஜியின் காதலியாக சரண்யா ரவிச்சந்திரன். உப்பள கிராமத்தின் இளம் பெண்ணை கண் முன் நிறுத்தி இருக்கிறார்.
உப்பள கிராம வெளிகளை நேரில் சென்று பார்த்தது போல தன் கேமராவில் பதிவு செய்துள்ளார் விஷ்ணு கே ராஜா. தீபக் நந்தகுமாரின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி அமைந்துள்ளது.
ஒரு பயோபிக் படம் என்றாலும் உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில நேரங்களில் ஒரு டாகுமென்டரி போல சில காட்சிகள் நகர்ந்து போகிறது.
Tags: line man, charlie