ஜீப்ரா - விமர்சனம்

23 Nov 2024

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இசையமைப்பில், சத்யதேவ், பிரியா பவானி சங்கர், டாலி தனஞ்செயா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சூர்யா தனியார் வங்கி ஒன்றில் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஆகப் பணி புரிகிறார். மற்றொரு வங்கியில் அவரது காதலி பிரியா பவானி சங்கர் வேலை செய்கிறார். வங்கி சம்பந்தப்பட்ட சிக்கல் ஒன்றில் பிரியா சிக்க, அதற்காக குறுக்கு வழியில் அதைச் சரி செய்கிறார் சத்யதேவ். ஆனால், அது சத்யதேவுக்குப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது. கார்ப்பரேட் டான் போல செயல்படும் டாலி தனஞ்செயாவிடம் நான்கு நாட்களில் ஐந்து போடி ரூபாயைத் தர வேண்டியதுதான் அந்த சிக்கல். அதை சத்யதேவ் தந்தாரா, டாலி தனஞ்செயா அடுத்தடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை..

படத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது. 5 கோடி தொகையைத் திரட்ட சூர்யா செய்யும் முயற்சிகள் மற்றும் அவற்றின் விளைவுகளாக உருவாகும் டிராமா, ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன. 

சத்யதேவின் கதாபாத்திரமும் அதில் அவரது நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. அறிவாளித்தனத்தை அடிக்கடி காட்டிக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம். பதட்டமும் இல்லாமல், வில்லனின் மிரட்டலையும் ஏற்றுக் கொண்டு, அதை தனது புத்தி கூர்மையால் சமாளிக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார் சத்யதேவ்.

வில்லன் டாலி தனஞ்செயாவின் கார்ப்பரேட் டான் வில்லத்தனம் நம்பும்படியாக உள்ளது. பெரிய இடங்களில் இப்படித்தான் நடக்கிறதோ என யோசிக்க வைக்கிறது. மிரட்டலான ஒரு நடிப்பைத் தந்துள்ளார் டாலி.

சத்யதேவ் காதலியாக பிரியா பவானி சங்கர், அவரது கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகளை இயல்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். சத்யராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் வித்தியாசமான தோற்றத்தில் முத்திரை பதித்துள்ளார். கார்ப்பரேட் பினாமியாக சுனில், சத்யதேவின் நண்பனாக சத்யா, வங்கி மேனேஜர் ஜெனிபர் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். 

படத்தின் மேக்கிங் நம்மை வெகுவாய்க் கவர்கிறது. சத்யா பொன்மார் ஒளிப்பதி, ரவி பஸ்ரூர் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.

ஒரு சில இடங்களில் திரைக்கதை மெதுவாகவே நகர்ந்தாலும், கதைத் திருப்பங்களும், காட்சிகளும் சுவாரசியமாக இருப்பதால் நமக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

Tags: zebra, satyadev, priya bhavani shankar, sathyaraj

Share via: