ஜாலியோ ஜிம்கானா – விமர்சனம்

23 Nov 2024

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைப்பில், பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘ஜாலியோ ஜிம்கானா’ ஒரு நகைச்சுவை கலந்த க்ரைம் த்ரில்லர் கதை எனச் சொல்லலாம். எம்எல்ஏ மதுசூதனன் தராத பணத்தால் தங்களது ஹோட்டல் பிரச்சனையில் நஷ்டமடைந்த அபிராமியும், அவரது மூன்று மகள்களும் பிரபல வக்கீல் பிரபுதேவாவை சந்திக்கப் போகிறார்கள். ஆனால், அங்கு பிரபுதேவா இறந்து கிடக்கிறார். தங்கள் மீது பழி வரக்கூடாதென அபிராமியும் அவரது மகள்களும் பிரபுதேவாவின் பிணத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. 

திரைக்கதையின் முக்கிய அம்சமாக உள்ளது பிரபு தேவா பிணமாக நடிப்பது. பிணமாக இருந்தாலும், அவர் வெளிப்படுத்தும் அங்க அசைவுகள், அமைதியாகவே உட்கார்ந்திருப்பது ஆகியவை சில நேரங்களில் நமக்கு காமெடியாக அமைகிறது.  குறிப்பாக இறுதிக்காட்சியில், அவர் பிணமாக இருந்த போதும் தனது அசைவுகளால் சண்டைக்காட்சியில் நடித்திருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று.

அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிராமிக்கும் படத்தில் முக்கியத்துவம் அதிகம். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் இது போன்ற கதையில் அது குறையாகத் தெரியவில்லை. அபிராமியின் மூத்த மகளாக மடோனா செபாஸ்டியன். காமெடி கதாபாத்திரத்தில் தன்னை மாற்றியமைத்து நடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். 

படத்தின் மொத்த கதையையும் சர்ச் பாதர் யோகி பாபுவிடம் மடோனா சொல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. சர்ச் பாதர் என்றாலும் ஆங்காங்கே தனது டைமிங் வசனத்தைப் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் யோகி பாபு. மற்ற கதாபத்திரங்களில் பலர் நடித்துள்ளார்கள். அரசியல்வாதியாக மதுசூதனன், அவரது அடியாட்களாக ரோபோ சங்கர், சாய் தீனா, வினோத், இன்ஸ்பெக்டராக ஜான் விஜய், அபிராமியின் அப்பாவாக ஒய்ஜி மகேந்திரன் மற்றும், கமிஷனராக எம்எஸ் பாஸ்கர், கண்டக்டராக ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் ஒருசில காட்சிகளில் வந்து போகிறார்கள். 

ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள “போலீஸ்காரனை கட்டிக்கிட்டா” பாடல் இரட்டை அர்த்த வசனப் பாடலாக இருந்தாலும் ஆட்டம் போட வைக்கும் பாடலாக அமைந்துள்ளது. அஷ்வின் விநாயகமூர்த்தி ஒரு காமெடி படத்துக்குரிய பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் எம்சி கணேஷ் பாபு காட்சிகளை வண்ணமயமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்..

இயக்குநர் சக்தி சிதம்பரம், பழமையான கதையொன்றை புதுமையான காமெடி மற்றும் திரைக்கதையுடன் ஒட்டி அமைத்திருக்கிறார். சில இடங்களில் குறைகள் இருந்தாலும், படம் ஒரு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கிறது.

Tags: jollyo gymkhana, shakthi chidambaram, prabhu deva

Share via: