எமக்குத் தொழில் ரொமான்ஸ் - விமர்சனம்
23 Nov 2024
பாலாஜி கேசவன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
அசோக் செல்வனும் அவந்திகா மிஸ்ராவும் காதலர்களாக இருந்து, சிறிய பிரச்சனை காரணமாக பிரிந்து விடுகிறார்கள். காதலியுடன் மீண்டும் இணைவதற்காக அசோக் செல்வன் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி, அவர்களை மேலும் பிரிக்கிறது. இப்படியாக, அவர்கள் காதல் முறிவு நீண்டு கொண்டே போகும் போது, பிரச்சனைகளின் முடிவை காணும் நாயகனின் முயற்சிகளை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அசோக் செல்வன் தனது வழக்கமான ரொமான்ஸ் நடிப்பை காமெடி கலந்து நடித்து நம்மைக் கவர்கிறார். காமெடியிலும் சேர்ந்து அசத்தும் ஒரு சில இளம் நாயகர்களில் இவரும் குறிப்பிட வேண்டியவர். அவந்திகா மிஸ்ரா காதல், கவர்ச்சி, காமெடி என தனது திறமையை வெளிப்படுத்த முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அசோக் செல்வனின் நண்பனாக விஜய் வரதராஜ், தோழியாக மதுமிலா இருவரும் கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அம்மா கதாபாத்திரத்தில் வழக்கம் போல அசத்தியுள்ளார் ஊர்வசி அசோக்கின் தாய்மாமாவாக படவா கோபி, அப்பாவாக அழகம் பெருமாள் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. காமெடி காட்சிகளுக்குத் தேவையான இசையையும் தந்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா காட்சிகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
கதை பழமையான ஒன்றாக இருந்தாலும், குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய பொழுதுபோக்கு படமாக இயக்குநர் பாலாஜி கேசவன் அதை மாற்றியமைத்திருக்கிறார். படத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவைக் காட்சிகள் இருப்பதால் படத்தின் ஓட்டம் தடுமாற்றம் இல்லாமல் போகிறது.
Tags: emakku thozhil romance, ashok selvan, avanthika mishra