தலைவன் தலைவி – விமர்சனம்

26 Jul 2025

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அதிலும் கணவன், மனைவி சண்டை என்பது பல குடும்பங்களில் இருக்கும் ஒன்று. புதிதாக திருமணமான தம்பதியினர் ஆரம்ப காலத்தில் அவ்வளவு காதலுடன் இருப்பார்கள். போகப் போக அவர்களுக்குள்ளும் சண்டை ஆரம்பிக்கும். அப்படியான சண்டை எதனால், எப்படி வருகிறது என்பதை கொஞ்சம் கலகலப்பாகவும், கொஞ்சம் சீரியசாகவும், கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும், கொஞ்சம் சத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

ஊரில் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறது விஜய் சேதுபதி குடும்பம். அப்பா சரவணன், அம்மா தீபா சங்கர், தங்கை ரோஷினி, தம்பி ரோஹன் என அந்த ஹோட்டலில் அண்ணன் விஜய் சேதுபதிதான் பரோட்டா மாஸ்டர். பத்தாவது பெயில் ஆனவர். அவருக்கு எம்.ஏ. படித்த நித்யா மேனனைப் பெண் பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் விஜய் சேதுபதியின் குடும்பமே ரவுடி குடும்பம் என தெரிய வந்ததும் அவருக்குத் தங்கள் பெண் நித்யாவை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார்கள் அப்பா செம்பன், அம்மா ஜானகி சுரேஷ், அண்ணன் ஆர்கே சுரேஷ். ஆனாலும், அதற்குள் நித்யா மேனனை விதவிதமான ‘பரோட்டா’ செய்து கொடுத்து தன் காதல் வலையில் விழ வைத்துவிடுகிறார் விஜய் சேதுபதி. ஒரு தீபாவளி நாளில் பெற்றோரை மீறி விஜய் சேதுபதியுடன் சென்றுவிடுகிறார் நித்யா. திருமணமான பின் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நித்யா, அம்மா வீட்டுக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரையும் பிரித்துவிடுங்கள் என்ற பஞ்சாயத்து குலதெய்வக் கோவிலில் வருகிறது. அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் கதை.

குலதெய்வக் கோவிலுக்கு நித்யா, தனது பெண் குழந்தையை அழைத்து வந்து மொட்டை போடுவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. தனக்கு சொல்லாமல் தனது குழந்தைக்கு மொட்டை போடுவதைத் தட்டிக் கேட்க அங்கு வருகிறார் விஜய் சேதுபதி. இருவரது குடும்பத்தினரும் சண்டை போட, அங்கு வரும் ஊர்க்காரர்கள் இருவரது சண்டைக்கான காரணத்தைக் கேட்க அவ்வப்போது பிளாஷ்பேக்கிற்குப் போய் வருகிறது திரைக்கதை. ஆரம்பம் முதல் கடைசி வரை சண்டை, சண்டை, கத்தல், கத்தல் என போக சில பல கேள்விகள் எழுந்தாலும் படமாக இரண்டரை மணி நேரம் கடந்து போய்விடுகிறது.

விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் கணவன், மனைவியாக டாம் அன்ட் ஜெர்ரி போல தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கூடவே கத்திக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த கத்தல் சத்தத்தைக் குறைத்திருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும். விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அவ்வப்போது ‘இதற்குத்தான ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் ‘சுமார் மூஞ்சி குமார்’ எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறார். கிராமத்து மனைவி எப்படி இருப்பார் என்பதை அப்படியே காட்டியிருக்கிறார் நித்யா மேனன். ஆனால், எம்.ஏ. படித்தவர் படிக்காத விஜய் சேதுபதி குடும்பத்துடன் இப்படி ஏட்டிக்குப் போட்டியாக நிற்பதும் கொஞ்சம் நெருடல் தான். இருந்தாலும் ஆகாச வீரன் விஜய் சேதுபதியும், பேரரசி நித்யா மேனனும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்கள்.

மற்ற கதாபாத்திரங்களில் படம் முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரமாக யோகி பாபு. பார்வையாளர்கள் எழுப்ப விரும்பும் கேள்விகளை அவரது கதாபாத்திரம் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. அது படம் முடிந்த பிறகும் வருவதும் தான் இந்தப் படத்தின் சில கேள்விகளை சமாளிக்க வைக்கிறது. மீட்டருக்கு மேல் நடிக்கும் தீபா சங்கர் இந்தப் படத்தில் அளவாகவே நடித்திருக்கிறார். அப்பா சரவணன், தம்பி ரோஹன், தங்கை ரோஷினி ஆகியோருக்கும் அளவான கதாபாத்திரங்கள். நித்யாவின் அப்பா செம்பன், அண்ணன் ஆர்கே சுரேஷ் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். கோவிலில் சாமி கும்பிட வந்து இவர்கள் சண்டையில் சிக்கிக் கொண்டவர்களாய் காளி வெங்கட், மைனா. மற்ற கதாபாத்திரங்கள் வந்து போகும் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘லேலேலே…’ பாடல் இனிமையாய் அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் உணர்வுபூர்வமான காட்சிகளை இன்னும் உணர்வாய் தந்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு குலதெய்வக் கோவில் காட்சிகளில் அற்புதமாய் அமைந்துள்ளது.

குடும்பப் பாங்கான படங்கள் வந்தாலே ‘சீரியல்’ என பேசும் இந்தக் காலத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் அதை மாற்றியவர் பாண்டிராஜ். இந்த 2025ம் வருடத்தில் குடும்பப் பாங்கான படங்கள்தான் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அது இந்தப் படத்திற்கும் நிச்சயம் கிடைக்கும்.

Tags: thalaivan thalaivi, vijay sethupathi, nithya menen, pandiraj, santhosh narayanan

Share via: