மாரீசன் - விமர்சனம்

26 Jul 2025
விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘மகாராஜா’ படம் போன்றதொரு கதைதான் இந்தப் படமும். ஒருவர் சிலரைத் தேடிப் போய் கொலை செய்கிறார். எதற்காக செய்கிறார் என்பது தான் மீதிக் கதை. ஆனால், அந்தக் கொலைகளைச் செய்தவர் தன்னை ஒரு அப்பாவியாகக் காட்டிக் கொள்வதும் அதனால் என்ன நடக்கிறது என்பதும் தான் திரைக்கதை. இந்தப் படத்திலும் அப்படித்தான். வடிவேலு தன்னை அல்சைமர் நோய் பாதிக்கப்பட்டவர் என அப்பாவியாய் நடிக்கிறார். ஆனால், அந்த அப்பாவி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

இயக்குனர் சுதேஷ் சங்கர் ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். முதல் பாதி திரைக்கதையை மட்டும் சரி செய்திருந்தால் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படமாக அமைந்திருக்கும். இருந்தாலும் இடைவேளையும், அதற்குப் பிறகான காட்சிகளும் பரபரப்பாக அமைந்து, யுவனின் பின்னணி இசையோடு, பகத், வடிவேலு ஆகியோரது நடிப்போது நம்மை ரசிக்க வைக்கிறது.

சின்னச் சின்னத் திருட்டுக்களைச் செய்து சிறைக்குப் போவதை வழக்கமாக வைத்திருப்பவர் பகத் பாசில். செய்த குற்றத்திற்காக சிறையிலிருந்து வெளியில் வருபவர் ஒரு வீட்டிற்குத் திருடச் செல்கிறார். அங்கு கையில் விலங்கிட்டு கட்டி போடப்பட்டுள்ளார் வடிவேலு. தனக்கு அல்சைமர் என்ற மறதி நோய் இருப்பதாகவும், தனது மகன் இப்படி கட்டிப் போட்டுவிட்டுப் போவான் என்றும் தன்னை விடுவித்தால் பணம் தருகிறேன் என்று சொல்கிறார். பணத்தை எடுக்க ஏடிஎம் அழைத்துச் செல்கிறார் வடிவேலு. அப்போது அவரது கணக்கில் 25 லட்ச ரூபாய் இருப்பதை தெரிந்து கொள்கிறார் பகத். அதை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என நினைக்கிறார். வடிவேலுவும் திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்று சொல்ல, அவரை தனது திருட்டு பைக்கில் அழைத்துச் செல்கிறார். வடிவேலுவிடமிருந்து அந்த பணத்தை பகத் அபகரித்தாரா, வடிவேலு யார், அவரது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு பகத் பாசில், வடிவேலு மீண்டும் இணைந்து நடித்துள்ள ஒரு படம். இந்தப் படமும் ஒரு சீரியசான கதைதான். அவர்கள் இருவருக்குமே சீரியசான கதாபாத்திரங்கள்தான். பகத் கதாபாத்திரத்தில் நகைச்சுவையைக் கலக்க வாய்ப்பிருந்தும் இயக்குனர் அதைத் தவிர்த்திருக்கிறார். படம் முழுவதும் இவர்கள் இருவரும்தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களது பைக் பயணம்தான் படத்தின் கதையே. அவர்களது நடிப்பு நம்மை முழுவதுமாக ஆட்கொண்டாலும் மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாததும் படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துவிடுகிறது.

வடிவேலு எதற்காக பயணம் போகிறார் என்று தெரிய வரும் போது ரசிகர்களுக்கு திரைக்கதையில் சரியான அதிர்ச்சி காத்திருக்கிறது. இடைவேளையில்தான் படத்தின் கதையே ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். அதன்பின் வரும் பிளாஷ்பேக் காட்சிகள், வடிவேலு செய்பவை அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோ அளவிற்கு உயர்த்திச் செல்கிறது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடிக்க வந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார் பகத் பாசில். இந்தப் படத்தில் போகப் போக வடிவேலு யார் என்று தெரிய வந்ததும் பகத் கதாபாத்திரம் கொஞ்சம் இழப்பது போல் உள்ளது. இடைவேளைக்குப் பின் பகத்தை மிஞ்சுகிறது வடிவேலு நடிப்பு.

மற்ற கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா கதாபாத்திரத்திற்குத்தான் கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கிறது. இன்ஸ்பெக்டராக வரும்  கோவை சரளா ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் ஏமாற்றமே. பிளாஷ்பேக்கில் வடிவேலு மனைவியாக சித்தாரா, கொஞ்சமாக வந்தாலும் நிறைவு.

படத்தின் ரசனைக்கு மிக முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. அதிலும், வடிவேலு இடைவேளையில் செய்யும் அந்தக் கொலைக் காட்சியும், வடிவேலு யார் என்பதைத் தெரிந்து கொண்ட பின் பகத் தடுமாறும் அந்தக் காட்சிகளும் மிக முக்கியமான திருப்புமுனைக் காட்சிகள். அதில் தனது பின்னணி இசையில் படத்தைத் தாங்கியிருக்கிறார் யுவன்.

பயணக் காட்சியில் கூடவே பயணித்து நாமும் பயணிப்பதைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி.

மொத்தத்தில், முதல் பாதி படத்தை பொறுமையாகக் கடந்துவிட்டால், இரண்டாம் பாதியில் ரசிக்கும்படியான ஒரு த்ரில்லர் படத்தைப் பார்க்கலாம்.

Tags: maareesan, vadivelu, fahad fazil, yuvan shankar raja

Share via: