தலைமைச் செயலகம் - விமர்சனம்
17 May 2024
வெப் சீரிஸ் என்றாலே க்ரைம் திரில்லர் தொடர்கள்தான் அதிகமாக வந்திருக்கிறது. இது ஒரு அரசியல் க்ரைம் திரில்லர். நாட்டு நடப்புகள் சிலவற்றைச் சேர்த்து ஒரு பரபரப்பான அரசியல் தொடராக இதைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். கதாபாத்திரங்கள், வசனம், உருவாக்கம் ஆகியவை இத்தொடரின் ஹைலைட்.
தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் கிஷோர். அவரது மகள் ரம்யா நம்பீசன், மருமகன் நிரூப் நந்தகுமார் ஆகியோர் அரசியல் வாரிசுகளாக இருக்கிறார்கள். ஒரு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கிஷோர் மீதான விசாரணை ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது. அதில் தண்டனை கிடைத்தால் அடுத்து யார் கட்சியின் தலைவர், முதல்வர் என்ற போட்டி ரம்யா நம்பீசனுக்கும், நிரூப்பிற்கும் இருக்கிறது. இருந்தாலும் கிஷோர், அவரது தோழியும், கட்சியின் ஆலோசகரும், பத்திரிகையாளருமான ஸ்ரேயா ரெட்டியைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்.
இதனிடையே ஒரு ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த கொலை பற்றிய வழக்கை டெபுடி கமிஷனரான பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதே சமயம் வட இந்தியாவில் நடந்த சில மர்ம மரணங்களைப் பற்றி சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் இருவரின் விசாரணை, தமிழ்நாடு அரசியல் களத்துடன் எப்படி தொடர்பாகிறது. அரசியலும், விசாரணையும் எங்கே இணைகிறது என்பதுதான் இத்தொடரின் மீதிக் கதை.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முத்திரையைப் பதிப்பவர் கிஷோர். இந்தப் படத்தில் முதல்வர் அருணாச்சலம் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர். தெரியாமல் செய்த ஒரு தவறால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி விசாரணையை எதிர்கொள்கிறார்.
ஒரு பக்கம் வாரிசு அரசியலுக்காக சண்டை போடும் மகள், மருமகள், மற்றொரு பக்கம் தனது தோழி ஸ்ரேயா உடன் இருக்கும் ஒரு நெருக்கம், இன்னொரு பக்கம் கட்சி, பதவி, விசாரணை என பல சிக்கல்களை சந்திக்கும் ஒரு கதாபாத்திரம். அனைத்தையும் அமைதியாய் எதிர்கொள்ளும் அருணாச்சலம் கதாபாத்திரத்தில் தன்னை அற்புதமாய் பொருத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகை ஸ்ரேயா ரெட்டி. இந்தப் படத்தில் மிகவும் பவர்புல்லான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் ஒரு கதாபாத்திரம். கட்சியில், குடும்பத்தில், யார் என்ன சொன்னாலும் அது பற்றிய ஆலோசனையை ஸ்ரேயாவிடம் இருந்துதான் கேட்டுப் பெறுகிறார் முதல்வர். தன்னை மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு வாழும் மகள் மீதான பாசத்திலும் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். இவர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இத்தொடரின் இரண்டாவது சீசனையும் தாராளமாக எடுக்கலாம்.
அப்பாவுக்கு அடுத்து அரசியல் வாரிசு தான்தான் என நினைக்கும் மகள் கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன். தான் நினைப்பது நடக்க வேண்டும் என்பதற்காக தனது பாசத்தின் மூலம் அப்பாவை சம்மதிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம்.
முதல்வர் வீட்டு மருமகனாக இருந்து குறுக்கு வழியில் பல கோடிகளை சம்பாதிக்க நினைக்கும் கதாபாத்திரத்தில் நிரூப் நந்தகுமார். ஆனால், தன்னை குடும்பத்தில் டம்மி ஆகவே வைத்திருக்கிறார்கள் என கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரம். சினிமாவில் வில்லனுக்கு முயற்சித்ததால் முன்னேறலாம்.
டெபுடி கமிஷனராக பரத். கடமைதான் முதலில் என சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் தனது வேலையை விடாமல் செய்யும் கண்ணியம் மிக்கவர். ஒரு கட்டத்தில் முதல்வரிடமே நல்ல பெயரை வாங்கி தனது விசாரணையைத் தொடர்கிறார். அவரது உதவியாளராக தர்ஷா குப்தா.
சிபிஐ அதிகாரியாக ஆதித்யா மேனன். வில்லனகாவே பார்த்தவரை ஒரு பொறுப்பான அதிகாரியாக பார்ப்பது வித்தியாசமாக உள்ளது.
முதல்வரின் நண்பனாக பொதுச்செயலாளராக சந்தானபாரதி, மச்சானாக கவிதாபாரதி, அரசியல் புரோக்கர்களாக ஷாஜி, ஒய்ஜி மகேந்திரன் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.
வைட் ஆங்கிள் ரவிச்சந்திரன் இந்தியா முழுவதும் பயணப்பட்டு படமாக்கியிருக்கிறார். இன்டோர் காட்சிகளில் லைட்டிங் கவனம் ஈர்க்கிறது. ஜிப்ரான் இசையமைப்பு காட்சிகளின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. படத்தில் குறிப்பிட வேண்டியவை வசனங்கள். அரசியல் தொடர் என்பதால் அவையும் முக்கியத்துவம் பெறுகிறது.
கதையின் மையம் மட்டும் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளிவந்த ‘லூசிபர்’ படத்தை ஞாபகப்படுத்துகிறது.
மற்றபடி ஒரு விறுவிறுப்பான அரசியல் தொடராக 8 எபிசோடுகளுமே அமைந்துள்ளது.
தலைமைச் செயலகம் - செய்கை...
Tags: thalaimai seyalagam, vasanthabalan, ghibran, kishore, ramya nambeesan