கன்னி - விமர்சனம்
18 May 2024
மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில், அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு மலைக் கிராமத்திற்கு ஒரு சிறுமி, ஒரு பெண் குழந்தையுடன் போகிறார் அஷ்வினி சந்திரசேகர். ஓரிரு குடும்பங்களே வசிக்கும் அந்த கிராமத்தில் இருக்கும் அஷ்வினியைக் கொல்ல ஒரு கூட்டம் வருகிறது. அவர்கள் எதற்காக அவரைக் கொல்ல வருகிறார்கள், அவர்களிடமிருந்து தன்னை அவர் எப்படி காப்பாற்றிக் கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
மலைவாழ் பெண் சேம்பி கதாபாத்திரத்தில் அஷ்வினி சந்திரசேகர். அவரது தோற்றம், பேச்சு, நடிப்பு அப்படியே மலைவாழ் பெண்ணைப் பார்ப்பது போலவே உள்ளது. தனது அண்ணன் மகளைத் தாக்க வந்த ஒருவனை ஆவேசமாகக் கொன்ற பின் யார் இவர் என்ற அதிர்ச்சி நமக்கு வருகிறது. பிளாஷ்பேக்கில் அவரைப் பற்றிச் சொன்ன பிறகு அஷ்வினி செய்வதன் காரம் புரிகிறது.
அஷ்வினி அண்ணனாக மணிமாறன், அவரது மனைவியாக தாரா கிரிஷ் ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் ராம்பரதன் தோற்றத்திலேயே மிரட்டுகிறார்.
படத்தில் காட்டப்படும் அந்த பாழடைந்த மலைக்கிராமம் ஆச்சரியமூட்டுகிறது. கிருஷ்ணகிரி அருகே, தேன்கனிக்கோட்டை பக்கத்தில் இருக்கும் மலைக்கிராமமாம். இப்போது அங்கு யாருமே வசிப்பதில்லை. அனைவருமே ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். அந்த மலைக்கிராமத்தைத் தேடிப் பிடித்து அங்கேயே 20 நாட்களுக்கும் மேலாகத் தங்கி இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.
அந்த கிராமத்தை ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பலவித கோணங்களில் காட்டியிருக்கிறார். அவ்வளவு வீடுகள் பாழடைந்து இருக்க, அதில் யாருமே வசிக்காமல் இருப்பது நமக்குள் ஒரு சோகத்தை, தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இயற்கை மருத்துவத்தின் பெருமைதான் கதையின் பின்னணி. கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் மண்ணின் பெருமையை அழிக்க எப்படி முற்படுகிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
கமர்ஷியல் ரீதியில் எப்படியெல்லாமோ படமெடுப்பவர்கள் மத்தியில் இப்படியும் படமெடுக்க ஆசைப்பட்டுள்ள இப்படக்குழுவினரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
Tags: kanni