இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
18 May 2024
ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் பிரியாலயா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
நண்பன் விவேக் பிரசன்னாவின் திருமணத் தகவல் நிலையத்தில் வேலை பார்க்கிறார் சந்தானம். சொந்தம் என யாரும் இல்லாதவர். 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்தக் கடனை அடைக்க திருமணம்தான் ஒரே வழி என நினைக்கிறார். ஜமீன் பரம்பரை என பிரியாலயாவைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார் தரகர். திருமணத்திற்குப் பிறகுதான் கடன்கார ஜமீன் குடும்பம் எனத் தெரிய வருகிறது. பிரியா கூடவே அவரது அப்பா தம்பி ராமையாவும், அண்ணன் பாலசரவணனும் சந்தானம் வீட்டிற்குச் செல்கிறார்கள். ஒரு கொலையில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தன்னுடைய படங்களை மினிமம் கியாரண்டி படங்களாகக் கொடுக்க நினைப்பவர் சந்தானம். இந்தப் படத்தையும் அப்படியேதான் கொடுத்திருக்கிறார். வழக்கம் போல அவருடைய நகைச்சுவை பன்ச் வசனங்கள் படம் முழுவதும் உண்டு. சீரிஸ் காட்சிகளில் கூட சிரிக்க வைக்கிறார். பிரியாலயாவுக்கு அதிக வேலையில்லை. தம்பி ராமையா இவ்வளவு கத்தி நடிப்பது ஏன் எனத் தெரியவில்லை, ஓவர் ஆக்டிங்காகவே தெரிகிறது. பால சரவணன் அவரது பங்கிற்கும் சிரிக்க வைத்துள்ளார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரம் விவேக் பிரசன்னா. பிணமாக, ஒரே மாதிரியான சிரித்த முகத்துடன் எப்படித்தான் நடித்தாரோ ?. சந்தானம் படத்தில் வழக்கமாக இருக்கும் மாறன், சேஷு, சுவாமிநாதன் ஆகியோருக்கு இப்படத்தில் வாய்ப்புகள் குறைவுதான். முனிஷ்காந்த் கொஞ்சமாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
இமான் இசையில் பாடல்களில் ‘மாயோனே’ ரசிக்க வைக்கிறது. காமெடி படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது சிரமமாமன ஒன்று. அதை ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்.
இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக போவது தெரியாமல் நகர்கிறது. இடைவேளைக்குப் பின்பு கொஞ்சம் தடுமாறினாலும் நகைச்சுவைத் தோரணங்களால் ரசிக்க வைத்துவிடுகிறார்கள். அந்த வெடிகுண்டு, தீவிரவாதிகள் மேட்டர்தான் பழைய மேட்டராக இருக்கிறது.
Tags: inga naanthan kingu, santhanam,